தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காதீங்க… திமுக பெண் நிர்வாகி போட்ட அதிர்ச்சி குண்டு!!

Author: Babu Lakshmanan
4 November 2021, 11:54 am
padmapriya - updatenews360
Quick Share

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டவர் சமூக ஆர்வலர் பத்மபிரியா.

கட்சியில் சேர்ந்த ஒரே வருடத்தில் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. எம்எஸ்சி மைக்ரோ பயாலஜி படித்துள்ள 26 வயது பத்மபிரியா, ஏற்கனவே சுற்றுச்சூழல் தொடர்பாக பல அதிரடி வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பிரபலமடைந்தவர்.

அதனால்தான் என்னவோ, சென்னை நகர தொகுதிக்குள் மக்கள் நீதி மய்யத்தின் வேறு எந்தவொரு வேட்பாளருக்கும் கிடைக்காத ஓட்டு அவருக்கு கிடைத்தது. மதுரவாயல் தொகுதியில் அவர்
33 ஆயிரம் ஓட்டுகள் பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

தேர்தலுக்குப் பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கோவை மகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் வெளியேறியபோது பத்மபிரியாவும் மூட்டையைக் கட்டிக் கொண்டு நடையை கட்டினார். பின்னர் மகேந்திரனைப் போலவே முதலமைச்சரை ஸ்டாலினை நேரில் சந்தித்து, தன்னையும் திமுகவில் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

அதன்பிறகு அவரைப் பற்றிய பேச்சு பொதுவெளியில் அவ்வளவாக அடிபடவில்லை.
இந்த நிலையில்தான் தீபாவளி பண்டிகையையொட்டி, அவர் பேசி வெளியிட்டுள்ள ஒரு நிமிட வீடியோ, திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த வீடியோவில் பேசும் பத்மபிரியா, “இந்த வருடம் நாம் ஒன்றாக இணைந்து தீபாவளியை கொண்டாடுகிறோம்! அட உங்க வீட்டு தீபாவளிக்கு என்னை அழைக்க மாட்டீங்களா?.. ஆனா நாம் ஒன்று சேர்ந்தால் பசுமை தீபாவளியை கொண்டாடலாம். புரியலையா?… ஒரு சில வினாடிகளில் தோன்றி மறையக் கூடிய அந்த வெளிச்சத்திற்காகவும், சத்தத்திற்காகவும் நாம் எதனை முதலீடாக செய்கிறோம் தெரியுமா? நம்முடைய எதிர்காலத்தை…

10 முதல் 15 சதவீதம் பேருக்கு இதனால் நுரையீரல் பாதிப்பு வருகிறது.தோல் அலர்ஜி, ஆஸ்துமா, புற்றுநோய் உள்ளிட்ட பல வியாதிகளும் ஏற்படுகின்றன. இது நம்மை மட்டுமா தாக்கும் இல்லையில்லை.. கதிர்வீச்சு மூலம் பாதிக்கப்படக்கூடிய பறவைகளை விட தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைதான் மிக அதிகமாக இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் கடந்த 30 வருடமா தீபாவளியே கொண்டாடுவது இல்லை. வெடி வைத்து யானை இறந்து போவதை நினைத்து வேதனைப்படும் நாம், ரோட்டில் நடமாடும் நாய்களும், மாடுகளும் மற்ற விலங்குகளும் அடிபடுவது பற்றியும் இறப்பது பற்றியும் ஏன் வருத்தப்படுவது இல்லை.

diwali celebration - updatenews360

பசுமை தீபாவளியை நம்மால் வீட்டில் கொண்டாட முடியும். தீபாவளிக்கு முன்போ, பின்போ அதன் வரலாறு, சயினஸ் எல்லாம் பற்றி நாம் பேச வேண்டாம். நம்மால் மாற்ற முடியும் என்றால் நாம் மாற்றலாமே. நீங்கள் சென்னையை சேர்ந்தவர் என்றால் உங்கள் பகுதியில் உங்கள் வீட்டில், யாராக இருந்தாலும் சரி, இடம் இருக்கா? அவ்வளவுதான் போதும்!

இந்த தீபாவளிக்கு நாம் ஒன்றாக இணைந்து மரக்கன்றுகளை நடுவோம். அடுத்த தீபாவளிக்கு இது ஆக்ஜிசன் தரக்கூடிய மரங்களாக வளரும். மிகுந்த மகிழ்ச்சி. பசுமை தீபாவளி” என்று கூறிஇருக்கிறார்.

பத்மபிரியா ஏதோ ஓர் அமைப்பிற்காக தீபாவளியன்று உங்கள் வீட்டுக்கு வருகிறேன். மரக் கன்றுகள் நடலாம் என்று இந்த வீடியோவில் பேசியிருப்பது தெரிகிறது.

எனினும்,பசுமை தீபாவளி பற்றி மட்டும் பேசியிருந்தால் பத்மபிரியாவின் பேச்சுக்கு எந்த எதிர்ப்பும் கிளம்பியிருக்காது. ஆனால் “பத்த வச்சுட்டியே பரட்டை” என்பதுபோல தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டாம் என்பதை மறைமுகமாக வலியுறுத்திப் பேசுகிறார். பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை அடுக்கிக் கொண்டே போகிறார்.

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மட்டுமே பட்டாசு தயாரிப்பு தொழிலை நம்பி 8 லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன. வேலூர், சேலம்,கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இன்னும் சில மாவட்டங்களிலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆண்டு முழுவதும் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டாசு வெடிக்கக் கூடாது என்று சொன்னால் தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுவரும் சுமார் 9 லட்சம் பேரின் வாழ்வாதாரம் என்னவாகும்? என்ற கேள்வியை பலரும் முன்வைக்கின்றனர்.

இன்னும் சிலரோ, பசுமை பட்டாசுகளை வெடிக்க எந்த தடையும் இல்லை, சர வெடியை வெடிக்க கூடாது என்றுதான் சுப்ரீம் கோர்ட்டு கூறியிருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது பத்மபிரியா, தேவையின்றி ஏன் பட்டாசு வெடிக்க கூடாது எனச் சொல்கிறார் என்று கேள்வியும் எழுப்புகின்றனர்.

AnnaArivalayam

திமுகவில் இணைந்தபோது பத்மபிரியா அக்கட்சியின் கொள்கைகள், விதிமுறைகளுக்கு ஏற்ப நடந்து கொள்வேன் என்றுதான் உறுப்பினர் அட்டை பெறுவதற்கு விண்ணப்பித்து இருப்பார். பிறகு ஏன் அவர் இப்படி பேசுகிறார் என்ற கேள்வியும் எழுகிறது.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் அரியானா,டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில முதலமைச்சர்களுக்கு பட்டாசு வெடிப்பதற்கான தடையை நீக்க வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தார். அவ்வாறு இருக்கும்போது தமிழகத்தில் யாருமே பட்டாசு வெடிக்க கூடாது என்று திமுக உறுப்பினரான பின்பு பத்மபிரியா இப்படி பேசியிருப்பது முற்றிலும் தவறானது என அரசியல் பார்வையாளர்களும் கூறுகின்றனர்.

அவர் தனிப்பட்ட முறையில் பேசி இருந்தாலும் கூட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராகவே கருத்து தெரிவித்து இருப்பதுபோல இருக்கிறது என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

பத்மபிரியாவின் பேச்சு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நிலைப்பாட்டுக்கு எதிரானதாக இருப்பதாகவும், இவர் இப்படியே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால் கட்சிக்குத்தான் நெருக்கடி ஏற்படும் என்று திமுகவின் சீனியர் தலைவர்கள் கருதுகிறார்களாம். இதுபற்றி ஸ்டாலின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்ட உ ள்ளதாக கூறப்படுகிறது.

பத்மபிரியாவின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. திமுகவில் இருந்துகொண்டே எனக்கு இதுவும் பிடிக்கும்… அதுவும் பிடிக்கும்… என்று சின்ன குழந்தை மாதிரி அலை பாய்றீங்களே மேடம், எதை நம்புறது? என்று நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

இன்னும் சிலர், புத்தாண்டுக்கும்,தேர்தலில் வெற்றி பெற்றாலும், யாராவது இறந்து போனாலும் பட்டாசு வெடிக்கிறார்கள். அதை எல்லாம் வேண்டாம் என்று உங்களால் சொல்ல முடியுமா?… தீபாவளிக்கு வெடிக்கும்போதுதான் கேன்சர், ஆஸ்துமா எல்லாம் வருமா?… என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு கும்மியுள்ளனர்.

அதென்ன தீபாவளிக்கு மட்டும்? சில மதங்களின் பண்டிகைக்கு இந்தியாவில் ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டுகிறார்கள். ஆடு, மாடு கோழியும் வெட்டித் தள்ளுகிறார்கள். திமுக உடன்பிறப்பே! அவற்றைப் பற்றியும் ஒரு வீடியோ போடுங்களேன் என்றும் ஒரு சிலர் பதிவிட்டு உள்ளனர்.

Views: - 547

0

0