திமுகவில் உதயநிதியின் ஆதிக்கத்திற்கு வலுக்கிறதா எதிர்ப்பு..? முதற்கட்டமாக கோவையில் உண்ணாவிரதத்தை தொடங்கிய உடன்பிறப்புகள்..!

29 October 2020, 1:40 pm
dmk protest - - updatenews360
Quick Share

கோவை : நிர்வாகிகள் நியமனத்தில் பாகுபாடு காட்டுவதாக திமுகவின் தலைமையை கண்டித்து அக்கட்சியினரே உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருவது முக ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக திமுகவில் உதயநிதி ஸ்டாலின் கையே ஓங்கி இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. இதனை நிரூபிக்கும் வகையில், மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு, உதயநிதியின் ஆதரவாளர்களுக்கே முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. கட்சித் தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி என்பதால், மூத்த தலைவர்களும் வெளிப்படையாக எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் கட்சிப் பணிகளில் பெரிதும் ஈடுபாட்டைக் காட்டிக் கொள்ளாமல் விலகி வருகின்றனர்.

udhayanidhi - updatenews360

அண்மையில் உதயநிதி தலைமையிலான இளைஞரணி சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதல்முறையாக, கட்சியின் தலைமை இல்லாமல் ஒரு குறிப்பிட்ட அணி சார்பில் மட்டும் இல்லாமல் நடத்தப்பட்ட இந்தப் போராட்டம், கட்சியின் உதயநிதிக்கான முக்கியத்துவத்தை காட்டும் விதமாக அமைந்துள்ளது. அதோடு, முக ஸ்டாலினின் புகைப்படம் இடம்பெற்றுள்ள அனைத்து பேனர்களில், அவருக்கு ஈடாக உதயநிதியின் புகைப்படமும் அச்சிடப்பட்டு வருகிறது. இதனால், நீண்ட காலமாக கட்சிக்கு உழைத்து வரும் மூத்த தலைவர்களுக்கு அதிருப்தியே ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், உதயநிதியின் கோவை வருகைக்கு பிறகு, திமுக தலைமையை கண்டித்து அக்கட்சியின் நிர்வாகிகளே உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருவது அக்கட்சியின் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக உட்கட்சி பூசல், நிர்வாகிகள் நியமனத்தில் பாகுபாடு, 20 முதல் 40 ஆண்டுகள் வரை கட்சிக்காக உழைத்த நிர்வாகிகள் அனைவரையும் நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகள் நியமித்ததால் அதிருப்தியை தெரிவிக்கும் நோக்கிலும், கழகத்தின் மூத்த நிர்வாகிகளை எவ்வித விசாரணையும் இன்றி நீக்கியத்தை கண்டிக்கும் விதமாகவும், கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தின் முன்பு இந்த கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருவதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கழக முன்னாள் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு, புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக கட்சிக்கு எதிரான தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

கோவையை போன்ற பல்வேறு மாவட்டங்களில் புதிய நிர்வாகிகளின் நியமனத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், உதயநிதியின் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் கோவையில் இருந்து தொடங்குவதாக அதிருப்தி திமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

Views: - 25

0

0

1 thought on “திமுகவில் உதயநிதியின் ஆதிக்கத்திற்கு வலுக்கிறதா எதிர்ப்பு..? முதற்கட்டமாக கோவையில் உண்ணாவிரதத்தை தொடங்கிய உடன்பிறப்புகள்..!

Comments are closed.