56 வேட்பாளர்களுக்கு திமுக கல்தா… நகராட்சித் தேர்தலில் உள்குத்து… மனம் குமுறும் திமுகவினர்!!

Author: Babu Lakshmanan
14 February 2022, 7:12 pm
Quick Share

இன்னும் 4 நாட்களில் நடக்க இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 12 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு சுமார் 55 ஆயிரம் பேர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

திமுக உள்ளடி வேலை

இவர்களில் பெரும்பாலானோர் திமுக கூட்டணி அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, அமமுக, விஜய் மக்கள் இயக்கம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர சுயேச்சையாக போட்டியிடுவோரும் ஏராளம். அதுவும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சைகளாக பலர் களம் காண்கின்றனர்.

Dmk Protest - Updatenews360

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் ஆகியோருக்கு இடையே நடக்கும் பனிப்போரில் உள்ளடி வேலையாக திமுகவைச் சேர்ந்தவர்களே போட்டியிடுவதுதான்.

கடந்த அக்டோபர் மாதம் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது, திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுகவுக்கு எதிராக அக்கட்சியினரே மல்லுக் கட்டினர்.

அப்போது பேசிய திமுகபொதுச் செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் “உள்ளாட்சித் தேர்தலில் சீட்டு தரவில்லை என்பதற்காக எங்களை அடித்து கூட கேட்கலாம். ஆனால் கட்சிக்கு துரோகம் செய்யும் வகையில் யாராவது செயல்பட்டால், அவர்கள் கட்டம் கட்டி தூக்கி எறியப்படுவார்கள்” என்று கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மானம் இருக்கக்கூடாது

தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவில் இதே நிலை நீடிப்பதை காணமுடிகிறது.10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து சம்பந்தப்பட்ட வார்டுகள் கிடைக்காத திமுகவினர் சுயேச்சைகளாக போட்டியிடுவது திமுகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்மையில் இதுபற்றி வேதனையுடன் திமுக பொருளாளர் டி ஆர் பாலு எம்பி காஞ்சிபுரத்தில் நடந்த திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசும்போது, ஒரு உண்மையையும் போட்டு உடைத்தார்.

அவர் கூறுகையில் “நீங்கள் மேயராக விரும்பினால், வீடு வீடாக ஏறி இறங்கித்தான் ஆகவேண்டும். கட்சியினரிடம் விரோதத்தை வளர்க்காதீர்கள். துரோகத்தை மறந்து விடுங்கள். எல்லோரும் ஒற்றுமையாக இருந்து பாடுபடுங்கள்.

தேர்தலில் ‘சீட்’ வழங்காததால் என்னை திட்டுகின்றனர் என  மாவட்டச் செயலாளர் கூறுகிறார். திட்டத்தான் செய்வார்கள். எப்போதும் மாலை போடுவார்களா, என்ன?… கல்லால் அடிக்காதவரை சந்தோஷப்படுங்கள். இதுபோல மாவட்டச் செயலாளராக இருந்தபோது, நான் எவ்வளவு அடிபட்டிருப்பேன். மானம், ஈனம், சுயமரியாதை எல்லாம் இல்லாமல் இருந்தால்தான், கட்சியில் நிர்வாகியாக இருக்க முடியும். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

திமுகவில் இருக்கும் வரைதான் நமக்கு மரியாதை. டி.ஆர்.பாலு பெரிய ஆளாக இருக்கலாம். அகில இந்திய அளவில் கொடி கட்டி பறக்கலாம். நாடாளுமன்றத்தில் மோடி அரசின் பிடரியை பிடித்து இழுக்கலாம். ஆனால், டி.ஆர்.பாலு, திமுக என்னும் குளத்தில் நீந்திக் கொண்டிருக்கும்போதுதான் அந்த மீனுக்கு சக்தி. வெளியே தூக்கி போட்டால், கருவாடாக ஆகிடும். நிர்வாகிகள் சரியாக நடந்து கொண்டால் சரியாக போற்றப்படுவீர்கள். சரியாக நடக்காத நிர்வாகிகளை துச்சமென நினைத்து, என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து விடுவோம்’ என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கட்சி நிர்வாகிகள் நீக்கம்

அவர் இப்படி அச்சுறுத்தும் விதமாக பேசிய அடுத்த இரு தினங்களிலேயே திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சார்பில் ஒரு அதிரடி அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் “தமிழகத்தில் வருகிற 19-ந் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளர்கள் மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும்  போட்டியிடும் 56 பேர் தற்காலிகமாக நீக்கப்பட்டு இருப்பதாக” கூறப்பட்டுள்ளது.

DuraiMurugan Support -Updatenews360

இது திமுக சார்பில் மட்டும் எடுக்கப்பட்ட நடவடிக்கை. திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்றவற்றின் சார்பில் திமுக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுபவர்கள் இதைவிட இன்னும் அதிக எண்ணிக்கையில் இருக்கலாம் என்று கருதப் படுகிறது.

போட்டி வேட்பாளர்களுக்கு எதிராக திமுக எடுத்துள்ள நடவடிக்கை சரியானதுதான் என்றாலும்கூட, இதில் சில தவறான முன்னுதாரணங்களும் இருப்பதாக திமுகவினர் மத்தியிலேயே கொந்தளிப்பான சூழல் காணப்படுகிறது.

“பல இடங்களில், அமைச்சர்களின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே நகரப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சிக்காக 25, 30 ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்த தொண்டர்களுக்கு, போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் குடும்பத்தில் அவருடைய மகனுக்கு இந்த தேர்தலில் போட்டியிட முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இது அமைச்சரின் குடும்பத்தை அனுசரித்து செல்ல வேண்டிய நெருக்கடியை எங்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது” என்று அவர்கள் மனம் குமுறுகின்றனர்.

இது சரியான செயல்தானா?

இதுகுறித்து அரசியல் ஆர்வலர்கள் கூறும்போது, “திமுகவின் பிரபல தலைவர்கள், அமைச்சர்கள் ஏற்கனவே தங்களது வாரிசுகளை கட்சியின் முக்கிய பதவிகளுக்கு கொண்டுவந்து விட்டனர். அதாவது தங்களுக்கு பிறகு அந்தந்த பகுதிகளில் தங்களின் வாரிசுகளே கோலோச்ச வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் எழுந்துள்ளது. அதனால் வாரிசுகள் எந்தத் தொழிலில் இருந்தாலும் எதிர்காலத்தில் அரசியலில் இருப்பதுதான் அவர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்பது அந்த தலைவர்களுக்கு நன்றாகவே தெரிகிறது. இதை திமுக தலைமைக்கு கட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து வரும் தொண்டர்கள் மனம் நொந்துபோய் கடிதங்களாக எழுதிக் குவித்தும் இருக்கின்றனர்.

ஆனாலும் அகில இந்திய அளவில் தற்போது வாரிசு அரசியல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிப்போய்விட்டதால் அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகளை திமுக தலைமை புரிந்து கொள்ளவில்லை என்ற பேச்சும் எழுந்துள்ளது.

இது எதிர் காலத்தில் ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக அமையும் என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் சேவை செய்வதற்காக அரசியலுக்கு வரும் சமூக சிந்தனையே நடுநிலையாளர்களிடம் அடியோடு அழிந்து போய்விடும்.

அதனால் கீழ்மட்ட தொண்டர்கள் கட்சிக்காக கடுமையாக உழைக்க முன் வரமாட்டார்கள். வாரிசு அரசியல் தலைதூக்கியுள்ள அத்தனை அரசியல் கட்சிகளுக்குமே இது பொருந்தும்.

தற்போது திமுகவுக்கு எதிராக சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிடும் 56 பேர் என்பது சற்று சிறிய எண்ணிக்கையாக தெரியலாம். ஆனால் இது திமுகவுக்கு குடைச்சலை கொடுக்கும் ஒன்றுதான். இவர்களில் பெரும்பாலானோர் திமுகவுக்கு செல்வாக்கு உள்ளதாக கூறப்படும் வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இவர்கள் வெற்றி பெற்றுவிட்டால் மீண்டும் திமுகவில் இணைத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இது சரியான செயல்தானா?…என்பதை நடுநிலை வாக்காளர்கள் நிச்சயம் ஆய்வு செய்வார்கள். அதனால் அடுத்து வரும் தேர்தல்களில் அவர்கள் ஓட்டு போடுவதற்கு எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுவார்கள் என்பதும் சந்தேகம்தான்” என்று அந்த அரசியல் ஆர்வலர்கள் வேதனையுடன் குறிப்பிட்டனர்.

Views: - 830

0

0