பொது இடத்தை ஆக்கிரமிக்க முயன்ற திமுக பிரமுகர்கள் : ஓடஓட விரட்டியடித்த பொதுமக்கள்…!!

13 June 2021, 8:45 pm
dmk - updatenews360
Quick Share

சென்னை : சென்னை தரமணி அருகே பொது இடத்தை ஆக்கிரமிக்க முயன்ற திமுகவினரை பொதுமக்கள் ஓடஓட விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தரமணி அருகே உள்ள கல்லுக்குட்டை திருவள்ளூர் நகரில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு முறையான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், கடந்த 2015ம் ஆண்டு முதல் பொதுஇடத்தில் தண்ணீர் தொட்டிகளை வைத்து அப்பகுதியினர் பயன்படுத்தி வந்தனர்.

இதனிடையே, போலியான ஆவணங்களை தயார் செய்து அந்தப் பொது இடத்தை திமுகவினர் ஆக்கிரமிக்க முயலுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், திமுக வழக்கறிஞர் ரமேஷ் மணிகண்டன், ராஜலிங்கம் மற்றும் சத்யா உள்ளிட்டோர் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் தண்ணீர் தொட்டிகளை அகற்ற வேண்டும் என்றும், அப்படி செய்யாவிட்டால் ஜேசிபி இயந்திரத்தை வைத்து நாங்களே அகற்றி விடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதைக் கேட்ட பொதுமக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியினர் தி.மு.க.வினரை ஓடஓட விரட்டியடித்தனர்.

மேலும், பொது இடத்தை ஆக்கிரமித்து அராஜகத்தில் ஈடுபட்ட திமுக வழக்கறிஞர் உள்பட மூன்று பேருக்கு, துரைப்பாக்கம் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Views: - 217

1

0