ரஜினி வருகையால் திமுக கூட்டணி உடையும் என்ற பதட்டத்தில் ஸ்டாலின் : தேர்தல் வரையில் கூட்டணியை கொண்டு செல்ல திட்டம்..!

By: Babu
14 October 2020, 7:04 pm
Quick Share

சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என்ற செய்திகளால், திமுக கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் கட்சிகள் அவரது அணிக்குச் சென்றுவிடுமோ என்ற டென்ஷனின் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த அச்சத்தால்தான் கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தும் நோக்கில், அதேநேரம் எந்தவித உத்தரவாதமும் அளிக்காமல் ஒரு அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார் என்று தெரிகிறது.

திமுக 200 இடங்களில் போட்டியிடும் என்றும் கூட்டணிக் கட்சிகளுக்குக் குறைந்த தொகுதிகளே ஒதுக்கப்படும் என்று பல மாதங்களாக செய்திகளும், விவாதங்களும் நடந்துவரும் நிலையில், இதுவரை மௌனமாக இருந்த ஸ்டாலின் திடீரென்று அறிக்கை வெளியிட்டிருப்பது ரஜினி வருவது குறித்து அலையடிக்கும் தகவல்களால்தான் என்று கூறப்படுகிறது. ரஜினி கட்சி தொடங்குவது தாமதமாவதாலும், அப்படியே அவர் தனிக்கட்சி தொடங்கினாலும், பாஜகவுடன் கூட்டணி அமைக்கமாட்டார் என்று கருதப்படுவதாலும், அதிமுகவுடன் கைகோர்க்க பாஜக முடிவு செய்துள்ளது. பாஜகவுடன் ரஜினி கூட்டணி அமைப்பதைவிட, அவர் தனியாக நின்று அதிமுகவுக்கு எதிராக திமுகவுக்குப் போகும் வாக்குகளைப் பிரித்தால் திமுக தோற்கும் என்பதே பாஜகவின் வியூகம் என்று கூறப்படுவது திமுகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Rajinikanth - stalin - updatenews360

திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரசுக்கு 20 தொகுதிகளே ஒதுக்கப்படும் என்றும் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என்று திமுக முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் பல மாதங்களாகவே செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த கட்சியின் பொதுச்செயலாளர் க, துரைமுருகன் ‘திமுக கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் சில கட்சிகள் வெளியேறுவார்கள், சில கட்சிகள் உள்ளே வருவார்கள். கூட்டணியில் யார்யார் இருப்பார்கள் என்பது தேர்தல் நேரத்தில்தான் தெரியும்” என்று தெரிவித்தது கூட்டணிக் கட்சிகளை அதிர்ச்சி அடையச் செய்தது.

ஏற்கனவே, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளும், ‘உதயசூரியன்’ சின்னத்தில் நிற்க வேண்டும் என்ற நிபந்தனையும் குறித்து திமுகவில் இருந்து மறுப்பு எதுவும் வராத சூழலில்இ திமுக கொடுக்கும் தொகுதிகளை ஏற்கும் கட்சிகளும் திமுகவின் நிபந்தனைகளுக்குத் தலையாட்டும் கட்சிகளும் மட்டும் கூட்டணியில் இருக்கலாம் என்ற மிரட்டலாகவே துரைமுருகனின் கருத்து பார்க்கப்பட்டது.. அப்படி ஏற்காத கட்சிகள் கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் கழற்றிவிடப்பட்டு தேர்தல் நேரத்தில் தெருவில் நிறுத்தப்படும் என்ற சந்தேகம் கூட்டணிக்கட்சிகளுக்கு உருவானது.

என்வே, கூட்டணி வெற்றிபெற்றால் ஆட்சியில் பங்கு பெறுவது குறித்து காங்கிரஸ் எம்.பி, கார்த்தி சிதம்பரம் நேரடியாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மறைமுகவாகவும் எழுப்பினர். விடுதலைச் சிறுத்தைகள் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார். மற்றொரு கூட்டணிக் கட்சியான மதிமுகவும் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளிப்படையாக அறிவித்தார்.

எந்தக் கட்சியைத் திமுக வெளியேற்றும் என்று இப்போது தெரியாத நிலையில் கடைசி நேரத்தில் திமுக கழுத்தறுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டால் என்ன செய்வது என்றும் இப்போதே வெளியேறிவிடலாமா என்றும் கூட்டணித் தலைவர்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டதை அக்கட்சித்தலைவர்களின் கருத்துகள் வெளிப்படுத்தின.

இந்த நிலையில், திடீரென்று ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டார். திமுக கூட்டணி பற்றி ஊடகங்கள் அனுமானங்களையும் அதீத கற்பனைகளையும் வெளியிடுவதாக அவர் கூறினார். கூட்டணி வலிவோடும் பொலிவோடும் இருப்பதாகத் தெரிவித்த அவர் தற்போது கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் பெயர்களைக் கூறவில்லை. மேலும், இப்போது கூட்டணியில் இருக்கும் கட்சிகள் 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என்ற உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை.

அதே நேரத்தில் ‘தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர்தான் தொகுதிகள் இறுதிசெய்வது வாடிக்கை’ என்று சொல்லி, கடைசிநேரத்தில்தான் தொகுதிப்பேச்சுகள் நடைபெறும் என்பதையும் சொல்லாமல் சொன்னார். கூட்டணியில் இருக்கிறோமா, வெளியேற்றப்படுவோமா என்பதை அறிந்துகொள்ள தேர்தல் அறிவிக்கும் நேரம் வரை தற்போதுள்ள கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் காத்திருக்க வேண்டும் என்பதையே ஸ்டாலினின் அறிக்கை காட்டுகிறது.

இந்த அளவு ஸ்டாலின் இறங்கிவந்ததற்குக் காரணம் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய செய்திகள்தான் என்று கூறப்படுகிறது. தற்போது அமைதியாக இருந்தாலும் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் ரஜினி கட்சி தொடங்குவார் என்று பரவலாகப் பேசப்படுகிறது. முதல்வர் வேட்பாளராக ரஜினி இருக்கமாட்டார் என்று ஏற்கனவே தெரிவித்துவிட்டார்.

ரஜினி கட்சி தொடங்கினால் கூட்டணியுடன் அவர் தேர்தல் களம் காண்பார் என்று கூறப்படுகிறது. திமுகவுடன் தற்போதுள்ள கட்சிகள் அதிருப்தியில் இருப்பதால் கடைசி நேரத்தில் அவருடன் கைகோர்க்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. ரஜினி வலுவான கூட்டணி அமைக்கும்போது தற்போது வாங்கி வரும் அதிமுகவுக்கு எதிரான வாக்குகளை அவருடைய அணி பிரிக்கும் என்பதால் திமுக தோல்வி அடையும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. எனவே, தேர்தல் நேரம்வரை தற்போது கூட்டணியில் இருக்கும் கட்சிகளைத் தக்கவைக்கும் நோக்கத்தில் அதே நேரத்தில் உறுதியான உத்தரவாதம் எதுவும் தராமல் ஒரு அறிக்கையை ஸ்டாலினின் வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Views: - 41

0

0