கண்டெய்னர் லாரிகளைக் கண்டாலே பீதி : தேர்தல் முடிவை திமுக முன்கூட்டியே யூகித்து விட்டதா?

16 April 2021, 2:11 pm
Stalin - updatenews360 (2)
Quick Share

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது.
இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போவது யார்? என்ற கேள்விக்கு வருகிற 2-ம் தேதிதான் விடை கிடைக்கும். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளிலும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதேநேரம், திமுகவின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் 210 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று நம்பிக்கை அளித்திருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

prasanth kishor - stalin - updatenews360

இந்த நிலையில்தான் சில தினங்களுக்கு முன்பு, ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், “தேர்தலில் வெற்றி, தோல்விக்கான பொறுப்பு கட்சியின் தலைமையையும் அதன் செயல்பாட்டையும் மட்டுமே சார்ந்தது. எங்களால் வெற்றியை நோக்கி செல்லும் அணியை இன்னும் சற்று முன்னே தள்ளி விட முடியும், அவ்வளவுதான்” என்று மிக சர்வ சாதாரணமாக கூறியிருக்கிறார்.

அவருடைய இந்தப் பேட்டி பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதாவது தேர்தல் வெற்றியில் தனது கட்சிக்காரரின் பங்குதான் முக்கியம், தனது பங்கு மிகக் குறைவு என்பதை அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டியிருக்கிறார். இது யாருக்கு கிலியை ஏற்படுத்தியதோ, இல்லையோ திமுகவினருக்கு பெரும் பீதியை கொடுத்துள்ளது.

ஏனென்றால் திமுகவின் அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் இதுவரை, வெளிப்படையாக தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும் என்று எங்குமே கூறவில்லை. அதனால்தான் திமுகவினரிடையே தற்போது கலக்கம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தல் கள நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக திமுக மாவட்ட செயலாளர்கள், திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் போட்டியிட்டவர்களில் 225 வேட்பாளர்களை சென்னைக்கு நேரில் வரவழைத்து அவர்களிடம் கருத்தும் கேட்டார். அவர்கள் அனைவருமே போட்டி மிகக் கடுமையாக உள்ளது, எப்படியும் நாம் வெற்றி பெற்று விடுவோம் என்று கூறியிருக்கிறார்கள். அதாவது உறுதியாக நாம்தான் வெற்றி பெறுவோம் என பெரும்பாலானவர்கள் கூறவில்லை என்றே தெரிகிறது.

DMK Stalin -Updatenews360

இந்த இரண்டு விஷயங்களையும் ஒன்றுடன் ஒன்று பொருத்திப் பார்க்கும் போதுதான் திமுகவினருக்கும், அதன் கூட்டணி கட்சியினருக்கும் ஒரு உண்மை புலப்பட்டு உள்ளது. தமிழக தேர்தல் கள நிலவரமும் அவர்களுக்கு ஓரளவு பிடிபட்டும் இருக்கிறது. அதாவது வெற்றி அதிமுக பக்கமும் சாயலாம் என்ற எதார்த்த நிலை அவர்களுக்கு புரியத் தொடங்கியிருக்கிறது.

அதனால்தான் தேர்தலுக்கு முன்பு இருந்தது போன்ற உற்சாகமும், ஆரவாரமும் தற்போது திமுகவினரிடம் அதிகம் காணப்படவில்லை.

அதேநேரம் பல்வேறு சந்தேகங்களை திமுகவினரும், திமுக கூட்டணி கட்சியினரும் எழுப்பத் தொடங்கிவிட்டனர். ஓட்டு எண்ணிக்கை நடக்கும் மையங்களின் அருகில் எந்த நேரமும் கண்டெய்னர் லாரிகள் சுற்றிச் சுற்றி வருவதாகவும், அதற்குள் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப வல்லுநர்கள் இருந்தவாறே வாக்குப்பதிவு எந்திரங்களில் திமுக கூட்டணிக்கு விழுந்த ஓட்டுகளை அதிமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மாற்ற முயற்சிப்பதாக ஒரு குற்றச்சாட்டை கூறி அதை வேகமாக பரப்பியும் வருகின்றனர்.

Cbe Vote Seal And Safe -Updatenews360

வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ‘ஸ்ட்ராங் ரூம்’ பகுதிக்கு கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் கைதேர்ந்த வல்லுனர்கள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் தகவல்களை தொடர்ந்து வெளியிட்டும் வருகின்றனர். இன்னும் சிலர் பழையபடி வாக்குச்சீட்டு முறை தேர்தலுக்கு திரும்பவேண்டும் என்ற வாதங்களை முன்வைக்க தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த 3 விஷயங்களுமே எதனுடைய வெளிப்பாடு என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதாவது திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் முடிவுகள் நமக்கு சாதகமாக இல்லையோ என்பதை முன்கூட்டியே யூகித்து விட்டதுபோல் தெரிகிறது.

பாதுகாப்பாக வைக்கப் பட்டிருக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வெளியிலிருந்து எந்த மாற்றத்தையும் செய்யமுடியாது என்று தேர்தல் கமிஷன் பலமுறை தெளிவுபடுத்தி உள்ளது.
எந்த பட்டனை அழுத்தினாலும் குறிப்பிட்ட கட்சிக்கே ஓட்டு விழுகிறது, என்ற குற்றச்சாட்டையும் மறுத்துள்ளது. அதற்கான சவாலையும் தேர்தல் கமிஷன் விடுத்தது. ஆனால் இதுவரை யாராலும் அதை நிரூபிக்க முடியவில்லை.

2004 நாடாளுமன்றத் தேர்தலின் போதுதான் முதன்முதலாக நாடுமுழுவதும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி கண்டது.

2009 தேர்தலும் வாக்குப்பதிவு எந்திரங்களில்தான் நடத்தப்பட்டது. அப்போதும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியே வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்தபோது தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 38-ஐ கைப்பற்றியது. இதிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்தான் பயன்படுத்தப்பட்டது.

அதனால் தாங்கள் வெற்றி பெறும்போது, அது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் தோல்வி கிடைக்குமென்று தெரிந்தால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய முயற்சி என்று குற்றம்சாட்டுவதும் தேசியளவில் காங்கிரசுக்கும், தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சியினருக்கும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது எனக் கருத தோன்றுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இதுபற்றி அவர்கள் மேலும் கூறும்போது, “காகிதத்தின் பயன்பாட்டை குறைக்கவும், நவீன தொழில்நுட்பத்தை கையாளும் விதமாகவுமே நமது நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், தேர்தல் பயன்பாட்டுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. ஏனென்றால் 2004க்கு முன்புவரை ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலுக்கும் சுமார் 9,000 டன் காகிதம் தேவையாக இருந்தது.

தவிர வாக்குச்சீட்டு முறை இருந்தபோது, ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றி தங்களுக்கு விருப்பம் போல் வாக்களிப்பது நாடு முழுவதும் பரவலாக காணப்பட்டது. அதுபோன்ற தில்லுமுல்லுகளை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் செய்ய முடியாது. தேர்தல் அதிகாரி அந்த எந்திரத்தை ‘லாக்’ செய்து விட்டால் ஒரு ஓட்டு கூட யாராலும் போட முடியாது. வாக்குப்பதிவு எந்திரங்களை யாராவது எடுத்துக்கொண்டு ஓடினாலும் கூட அதை வைத்து அவர்களால் தேர்தல் முடிவுகளை மாற்றி விட முடியாது. எனவே மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாறவேண்டும் என்று கேட்பதெல்லாம் நல்ல நகைச்சுவையே.

வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றிச் சுற்றி கண்டெய்னர் லாரிகள் வருகின்றன. அதற்குள் கைதேர்ந்த கம்ப்யூட்டர் தொழில் நுட்ப வல்லுநர்கள் உட்கார்ந்து கொண்டு தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சி செய்கிறார்கள் என்பதெல்லாம் சரியான கட்டுக்கதை. தமிழகம் முழுவதும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்களை கடந்து தினமும் ஆயிரக்கணக்கான கண்டெய்னர் லாரிகள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. அதற்காக அந்த கண்டெய்னர்களை எல்லாம் இயங்க விடாமல் தடுத்து நிறுத்தவேண்டும் என்று கூறுவது போல் உள்ளது.

உண்மையிலேயே கண்டெய்னர் லாரிக்குள் இருந்து கொண்டு இப்படி செய்ய முடியும் என்றால் வலுவான தொழில்நுட்ப பிரிவை வைத்துள்ள திமுக அதை நிரூபித்துக் காட்ட முன்வர வேண்டும்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகளை திமுக இதுவரை நேரடியாக வைக்காவிட்டாலும் அதன் கூட்டணி கட்சியின் தலைவர்களில் பலர் தொடர்ந்து இதையே சொல்லி வருகின்றனர். திமுக ஆதரவு ஊடகங்களும் அதை பூதாகரமாக்கி அன்றாடம் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இது தோல்வி பயத்தின் அறிகுறியாக இருக்கலாம் என்றே நினைக்கத் தோன்றுகிறது!

Views: - 82

0

0