உதயநிதி தேர்தல் கோட்டாவால் உறைந்து கிடக்கும் உடன்பிறப்புகள் : இளைஞர் அணிக்கு மூன்றில் ஒரு பங்கு சீட் ஒதுக்கீடு!!

Author: Babu
3 October 2020, 6:46 pm
udhayanidhi - updatenews360
Quick Share

சென்னை: பத்தாண்டுக் காலமாக எதிர்க்கட்சியில் இருந்து சமாளித்து கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரப்போகிறது என்று நம்பிக்கையில் இருக்கும் மூத்த திமுக நிர்வாகிகள், தங்களுக்குத் தேர்தலில் நிற்க சீட் கிடைக்குமா என்ற திகிலோடு காத்திருக்கிறார்கள். உதயநிதியின் இளைஞர் அணிப் பட்டியலுக்கே முதலிடம், மீதமிருக்கும் இடங்களில் ஐ-பேக் கொடுக்கும் பட்டியல், திமுக தலைமை எதிர்பார்க்கும் பணம் இதையெல்லாம் தாண்டினால்தான் சீட் என்ற ரேஸில் நீண்ட காலமாக கட்சிக்கு உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்குமா என்ற பரிதவிப்பில் இருக்கின்றனர் உடன்பிறப்புகள்.

ஆளும் அதிமுகவில் கடைநிலைத் தொண்டர்களும் தலைமைப்பதவிக்கு வரலாம் என்ற சூழல் இருக்கும்போது, திமுகவிலே முக்கிய பதவிகள் முன்னால் முதல்வர் மு.கருணாநிதியின் குடும்பத்துகே பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. கட்சி ஆட்சியில் இல்லாத காலங்களில் போராட்டங்களில் கலந்துகொண்டு, நிகழ்ச்சிகளுக்கு மேடைபோட்டு, கூட்டத்துக்கு ஆட்களைத் திரட்டி, கேட்கும்போதெல்லாம் நிதி திரட்டி, அல்லும் பகலும் பாடுபட்டவர்கள், கட்சிக்கு விடிவுகாலம் வரும் என்று நினைக்கும் நேரத்தில், அதையும் தட்டிப்பறிக்கும் வகையில் கட்சித்தலைமை நடந்துகொள்வது கண்டு வேதனையில் இருக்கிறார்கள் உடன்பிறப்புகள். பத்தாண்டுகளாக பல சோதனைகளை சந்தித்தவர்கள் தேர்தல் நேரத்தில் நேற்று கட்சிக்கு வந்தவர்கள், உதயநிதிக்கு வேண்டியவர்கள் ஆகியோருக்குப் பல்லக்கு தூக்கி அவர்களைத் தேர்தலில் வெல்லவைக்க வேலை செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகி இருப்பதாகக் கூறுகிறார்கள் திமுக நிர்வாகிகள்.

திமுக கடைசியாக 2006 தேர்தலில் வென்று பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்தது. அதன் பிறகு நடைபெற்ற 2011 சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது. மீண்டும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. பல இடங்களில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. மீண்டும் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மறுபடியும் கோட்டைவிட்டது. முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக ஆட்சி கவிழும் என்று தலைவர் மு.க. ஸ்டாலின் நாள்தோறும் கூறிவந்த நிலையில், நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இடையில் வந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றபோதும், அதனால் எந்தப் பயனும் இல்லை. மத்தியில் தனிபெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்னும் ஏழு மாதங்களுக்குப் பின் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிறது என்று திமுகவினர் மகிழ்ச்சி அடைந்தாலும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டோதோ என்ற சூழலே கட்சியில் நிலவி வருகிறது. கட்சிக்காகக் கடுமையாக உழைத்தவர்களும், களம் பல கண்டவர்களும் மூத்த முன்னோடிகளும் நிர்வாகிகளும் வரும் தேர்தலில் சீட் கிடைக்குமா என்ற கலக்கத்தில் இருக்கின்றனர். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

dmk all party meet - updatenews360

முதலில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டில் திமுகவுக்கு எத்தனை இடங்கள் என்பது முடிவாக வேண்டும். எந்தெந்தத் தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்குப் போகும் என்று மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு பார்க்க வேண்டும். அதன் பிறகு இருக்கும் இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் உதயநிதியின் இளைஞர் அணிக்குத் தரப்பட வேண்டும். எந்தெந்த இடங்கள் இந்தப் பட்டியலில் போய்விடும் என்று கண்கலங்க காத்திருக்க வேண்டும். இதில் இருக்கும் சீட்கள் உதயநிதிக்கு வேண்டியவர்களுக்கும் பெரும்பாலும் புதியவர்களுக்கும் போய்விடும்.

அடுத்தது, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆலோசனை சொல்லும் ஐ-பேக் ஒரு பட்டியலைத் தர இருக்கிறது, இதிலும் பெரும்பாலும் புதியவர்களாக இருக்கும் வாய்ப்பு அதிகம். மீதி இருக்கும் தொகுதிகளிலும் தலைவர் குடும்பத்துக்கு வேண்டியவர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆகியவர்கள் சொல்பவர்களுக்கு முதலில் இடம் கிடைக்கும். அதிலும் கட்சி கேட்கும் பல கோடி ரூபாய் இருக்க வேண்டும். இத்தனைத் தடைகளைத் தாண்டினால்தான் சீட் கிடைக்கும் என்பதால் நொந்துபோன நிலையில் இருக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

சீட் கிடைப்பதற்கு உதயநிதியைப் பிடிப்பதா, தலைவர் குடும்பத்தில் வேறு யாரைப்பிடிக்கலாம், ஐ-பேக் பட்டியலில் இடம்பிடிக்க என்ன செய்ய வேண்டும், மாவட்ட செயலாளரால் நினைத்தால் சீட் வாங்கித்தர முடியுமா என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள் முக்கிய நிர்வாகிகள். அங்குமிங்கும் அலைபாய்ந்தபடியும் திசைதெரியாமல் முட்டிமோதிக்கொண்டும் சீட்டுக்காக அல்லாடிவரும் தங்கள் பகுதி நிர்வாகிகளைப் பார்த்து கீழ்மட்டத் தொண்டர்கள் பாவமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். யாருக்கு சீட் கிடைத்தாலும் தேர்தல் வேலை பார்க்கத்தானே அவர்கள் இருக்கிறார்கள்.

Views: - 41

0

0