திமுக பொதுக்குழு தடை செய்யப்படுமா? கொரோனா தொற்று விழிப்புணர்வை மறந்தாரா ஸ்டாலின்..!

8 September 2020, 11:38 am
DMK-Meeing-updatenews360-2
Quick Share

சென்னை: செப்டம்பர் 21 வரை அரசியல் கூட்டங்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் தடை செய்துள்ள நிலையில், திமுக பொதுக்குழு தமிழ்நாடு முழுவதும் பல மாவட்ட அரங்கங்களில் நாளை நடைபெறுவது அச்சட்டத்தை மீறுவதாகும். திமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது தடை செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் கட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்துகொண்டாலும், பல மாவட்ட அரங்குகளில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. சட்டத்தைக் காப்பாற்ற மாநில அரசு முடிவெடுத்து காவல்துறை செயல்படுமானால், இதையே அரசியலாக்கவும் திமுக திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகமும், கொரோனா பேரிடர் மேலாண்மையிலும் திமுக அரசியல் செய்கிறதா என்ற சர்ச்சையும் வெடித்துள்ளது.

Stalin 12 updatenews360

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஊரடங்கை செப்டம்பர் 30 வரை மாநில அரசு அறிவித்துள்ளது. அரசியல், சமூக, மதம்சார்ந்த, பண்பாட்டு, கலை நிகழ்ச்சிகளுக்குத் தடை தொடர்கிறது. ஏற்கனவே, மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பிலும் அரசியல், கலை, பண்பாட்டு, சமூக, மத நிகழ்ச்சிகள் செப்டம்பர் 21 வரை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான திமுக இந்தத் தடை பற்றியோ, சட்டம் குறித்தோ, கொரோனா மேலாண்மை பற்றியோ கவலைப்படாமல் தனது பொதுக்குழுவை வரும் 9-ஆம் தேதி நடத்துவதாக அறிவித்துள்ளது.

பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடையுள்ள நிலையில் திமுக பொதுக்குழுவில் கிட்டத்தட்ட 3,500 பேர் கலந்துகொள்ளப்போவதாக அக்கட்சி கூறியுள்ளது. அவர்கள் மாநில முழுவதும் பல்வேறு இடங்களில் கூடுவது மத்திய, மாநில அரசுகளின் தடையை பல இடங்களில் மீறுவதாக முடியும். ஒவ்வொரு இடத்திலும் 5 பேருக்கு மேல் கூடாமல் திமுக நிர்வாகிகள் பார்த்துக்கொள்ள வாய்ப்பில்லை. அனைத்து இடங்களையும் கண்காணிக்க வேண்டிய பொறுப்பும், நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் ஏற்பட்டுள்ளது.

stalin - durai murugan - updatenews360

திமுகவின் பொதுச்செயலாளர் தேர்வும், பொருளாளர் தேர்வும், ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் தற்போதைய அரசியல் நிலை குறித்த தீர்மானங்களும், 2021 சட்டமன்றத் தேர்தல் பற்றிய தலைவர்களின் பேச்சும் இருக்கும் என்று தெரிகிறது. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதில் நீடிப்பது குறித்து எந்தப்பிரச்சினையும் எழவில்லை. எனவே, கூட்டணி பற்றிய விவாதங்கள் இருக்க வாய்ப்பில்லை. முக்கிய தேர்தல்களோ, விவாதங்களோ இல்லாதபோது மாநில முழுவதும் அரங்குகளில் கூட்டம் நடத்த வேண்டிய தேவை குறித்து கேள்வி எழுந்துள்ளது.

சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும்போது, அதிமுக அரசு அடக்குமுறை நடவடிக்கைகளில் இறங்குவதாக திமுக அரசியல் செய்யுமா..? அல்லது சட்டத்துக்கு உட்பட்டு கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களைக் குறைத்துக்கொள்ளுமா என்பது தெரியவில்லை. பிரச்சினைகளை முன்னரே தடுக்கும் வகையில் திமுக பொதுக்குழு அரங்குகளில் கூடுவது தடை செய்யப்படுமா..? என்ற கேள்வியும் தோன்றியுள்ளது. கூட்டம் முடிந்ததும் சட்டத்தை மீறும் திமுக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யவும் வாய்ப்பிருக்கிறது.

Views: - 0

0

0