தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியை பெறுவது பயமாக இருக்கிறது : துரைமுருகன் ஓபன் டாக்..!
3 September 2020, 4:07 pmசென்னை : தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவி கிடைக்க இருப்பது மகிழ்ச்சி மட்டுமல்ல அதிர்ச்சியும்தான் என அக்கட்சியின் மூத்த தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானதை தொடர்ந்து, அப்பதவிக்கு புதிய பொதுச்செயலாளரை நியமிக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு எழுந்தது. இந்தப் பதவிக்கு மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, அவர் வகித்து வந்த பொருளாளர் பதவியில் இருந்தும் விலகினார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த இரு பதவிகளையும் நிரப்புவதில் தி.மு.க.விற்கு காலதாமதம் ஏற்பட்டது. இதனிடையெ, பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை நிரப்ப வரும் 9ம் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கூடுகிறது.
கட்சியின் அதிகாரமிக்க இரு பதவிகளை நிரப்புவதற்கான விருப்ப மனுக்கள் நேற்று விநியோகிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கியது. பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் டி.ஆர். பாலு தனது ஆதரவாளர்களுடன் வந்து அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, பொதுச்செயலாளர் பதவிக்கான வேட்பு மனுவை மூத்த தலைவர் துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் துரைமுருகன் பேசியதாவது :-தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி என்பது உயர்ந்தது மட்டுமல்ல, பொறுப்பு வாய்ந்தது. கடமைகளை உள்ளடக்கியது. இந்த பொதுச்செயலாளர் பதவியை அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன் மற்றும் பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டோர் வகித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக, இந்தப் பதவியை நான் பெறப்போகிறேன். தி.மு.க.வை உருவாக்கிய 3 பேர் பொதுச்செயலாளர் பதவியில் இருந்துள்ளனர்.
ஆனால், சாதாரண தொண்டாக இருந்து அந்தப் பதவிக்கு வந்திரப்பது மகிழ்ச்சியளிப்பதுடன், அதிர்ச்சியும்தான். பொதுச்செயலாளர் பதவியை வகித்த அந்த 3 பேருக்கு ஈடுகொடுத்து பணியாற்ற முடியுமா..? என்ற பயம் உள்ளது.
என்னைப் போலவே ஸ்டாலினும் கட்சிக்காக தொண்டாற்றி உழைத்து தலைவர் பதவிக்கு வந்துள்ளார். தி.மு.க.விற்கு வரும் சவால்களை நான் ஸ்டாலினுடன் இணைந்து எதிர்கொள்வேன். பொதுச்செயலாளர் பதவிக்கான அதிகாரங்களில் எந்தவிதமான மாற்றமுமில்லை, எனக் கூறினார்.
தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், துரைமுருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.
0
0