உறுப்பினர் சேர்க்கையானாலும் ‘ஒரு நியாயம் வேணாமாப்பா’ : அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு தி.மு.க. உறுப்பினர் அட்டை..!
23 September 2020, 6:04 pmசென்னை : தி.மு.க.விற்கு ஆன்லைன் மூலம் ஆட்களை சேர்த்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
தமிழக சட்டசபைக்கு இன்னும் 8 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, தீவிரம் காட்டி வரும் அரசியல் கட்சிகள், தங்களின் கொள்கைகளையும் வெளிக்காட்டுவதற்காக, அரசின் சில திட்டங்களையும் கடினமாக எதிர்த்து வருகின்றன. அதேவேளையில், கட்சியைப் பலப்படுத்தும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
அந்த வகையில், தமிழகத்தின் எதிர்கட்சியான தி.மு.க., ஆன்லைன் மூலம் தனது கட்சிக்கு உறுப்பினர்களை சேர்த்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஏறும் மேடைகளிலும், பேசும் கூட்டங்களிலும், தி.மு.க.விற்கு ஏகோபித ஆதரவு கிடைத்துள்ளது, ஆன்லைன் வழியாக மக்கள் தி.மு.க. இணைந்து வருகின்றனர் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், இது அனைத்தும் நாடகமே என்பதை அம்பலப்படுத்தும் விதமாக, ஒரு சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு தி.மு.க.வின் உறுப்பினர் அடையாளர் அட்டை வழங்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த அடையாள அட்டையில், டிரம்ப் சென்னை எழும்பூர் தொகுதியை சேர்ந்தவர் எனவும், சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதைவிட உச்சகட்டமாக மற்றொரு அடையாள அட்டையில் ‘விவரமறியா வாரிசு’ என்ற பெயரிலும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவரது தந்தையின் பெயர் மலிவு அரசியல் மன்னர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இதுதான் உங்களின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையா..? என நெட்டிசன்கள் கிண்டலும், கேளியையும் செய்து வருகின்றனர்.