சொத்துவரி, மின்கட்டணத்தை தொடர்ந்து அடுத்து பேருந்து கட்டணம் உயரும்… திறமையில்லாத அரசு… திமுகவை சீண்டிய இபிஎஸ்..!!

Author: Babu Lakshmanan
8 August 2022, 9:16 pm
Quick Share

சொத்துவரி, மின்கட்டணத்தை தொடர்ந்து பேருந்து கட்டணமும் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, பழனி பால தண்டாயுதபாணி கோவிலில் தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து, சிறுகாலசந்தி மற்றும் காலசந்தி பூஜைகளிலும் பங்கேற்று, முருகனை தரிசனம் செய்தார்.

இதைத் தொடர்ந்து, சேலத்தில் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :- கடுமையான கொரோனா தொற்று, வேலைவாய்ப்பு கிடையாது. வருமானம் கிடையாது. இந்த சூழலில், மின்கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இது மக்களுக்கு பெரும் சுமையாகும். அதைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.

சொத்துவரியையும் அரசு உயர்த்தியிருக்கிறது. குடியிருப்புகளுக்கு 100 சதவீதம், கடைகளுக்கு 150 சதவீதம் உயர்த்தியுள்ளது. ஒருபக்கம் மின்கட்டண உயர்வு, இன்னொரு பக்கம் சொத்து வரி உயர்வு, விரைவாக பேருந்து கட்டணமும் உயரப்போகிறது.

தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு என்று சாக்கு போக்கு சொல்லி மக்களை திசைத்திருப்ப பார்க்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டு காலமாக பொதுமக்களுக்கு வருமானமே இல்லை. பாதிப்புகளில் இருந்து மக்கள் மீளுகின்ற வரை இந்த கட்டணங்களையெல்லாம் உயர்த்தக் கூடாது. இதுதான் ஒரு அரசின் கடமை. மக்களின் பொருளாதார நிலையை உணர்ந்து இந்த அரசு செயல்பட வேண்டும்.

ஒரு நிர்வாகத் திறமையற்ற அரசாகத்தான் திமுகவை மக்கள் பார்க்கிறார்கள். அதிமுக ஆட்சியில் சரியான முறையில் செயல்பட்டு மாணவர்களின் விலை மதிக்கமுடியாத உயிர்களை நாங்கள் பாதுகாத்து வந்தோம். அதேபோல், செயலற்ற திறமையற்ற ஒரு முதல்வர் தமிழகத்தை ஆட்சி செய்வதால், போதைப்பொருட்கள் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது, எனக் கூறினார்.

Views: - 290

0

0