நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதுதான் திமுகவின் லட்சியம் : முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

Author: Babu Lakshmanan
18 August 2021, 12:36 pm
Cm stalin - updatenews360
Quick Share

சென்னை : நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதுதான் திமுகவின் லட்சியம் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக தெரிவித்துள்ளார்.

நீட்‌ விவகாரம்‌ குறித்து சட்டமன்ற உறுப்பினர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ அவர்கள்‌ பேசியதற்கு மாண்புமிகு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ அளித்த பதிலாவது :- மாண்புமிகு பேரவைத்‌ தலைவர்‌ அவர்களே, இங்கே எனக்கு முன்னால்‌, தன்னுடைய கன்னிப்‌ பேச்சை பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய வகையிலே பல வினாக்களை எல்லாம்‌ தொடுத்து, இங்கே நம்முடைய மாண்புமிகு உறுப்பினர்‌ திரு. உதயநிதி அவர்கள்‌ பேசியிருக்கிறார்கள்‌. எனவே, அந்தப்‌ பிரச்சினைகளுக்கெல்லாம்‌ சம்பந்தப்பட்டிருக்கிற துறையினுடைய அமைச்சர்களிடமிருந்து, மானியக்‌ கோரிக்கை விவாதங்களின்போது, அதற்குரிய விளக்கங்களைப்‌ பெறலாம்‌. ஆனால்‌, முக்கியமான ஒன்று; “நீட்‌” பிரச்சினை குறித்து அவர்‌ இங்கே அழுத்தந்திருத்தமாகக்‌ குறிப்பிட்டுச்‌ சொன்னார்‌.

நீட்‌ பிரச்சினையைப்‌ பொறுத்தவரையில்‌, கட்சிப்‌ பாகுபாடுகளை எல்லாம்‌ மறந்து, அனைவரும்‌ ஒன்று சேர்ந்து, அதற்காகக்‌ குரல்‌ கொடுக்க வேண்டுமென்ற நிலையிலே நாம்‌ இருக்கிறோம்‌. அதில்‌ எந்த மாற்றமும்‌ கிடையாது. அந்த அடிப்படையிலேதான்‌, தேர்தல்‌ நேரத்திலே நாங்கள்‌ உறுதிமொழி தந்தோம்‌. “திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ ஆட்சிக்கு வந்தவுடன்‌, “நீட்‌” தேர்விலிருந்து விலக்கு பெறுவதுதான்‌ நம்முடைய இலட்சியமாக இருக்கும்‌. அதுகுறித்து நிச்சயமாக நாங்கள்‌ நடவடிக்கை எடுப்போம்‌” என்று உறுதிமொழி தந்திருக்கிறோம்‌.

அதனால்தான்‌ நாங்கள்‌ ஆட்சிக்கு வந்தவுடனே, இதுபற்றி அலசி ஆராய்ந்து, பொது மக்களுடைய கருத்துகளையெல்லாம்‌ கேட்டு, ஆய்வு அறிக்கையை அரசுக்கு வழங்கிட வேண்டுமென்று சொல்லி, ஓய்வு பெற்ற நீதியரசர்‌ திரு. ஏ.கே இராஜன்‌ அவர்கள்‌ தலைமையிலே ஒரு குழு அமைக்கப்பட்டு, அவரும்‌ அந்தப்‌ பணியை நிறைவேற்றி, ஒரு அறிக்கையைத்‌ தந்திருக்கிறார்கள்‌. தற்போது அந்த அறிக்கை சட்டரீதியாகப்‌ பரிசீலிக்கப்பட்டு, இந்தக்‌ கூட்டத்‌ தொடரிலேயே அதற்குரிய சட்டமுன்வடிவு கொண்டு வரப்படும்‌ என்பதைத்‌ தெரிவித்து, அமர்கிறேன்‌, எனக் கூறினார்.

Views: - 338

0

0