ரஜினி மன்றத்தினருக்கு தீவிர வலை! ஆள் பிடிக்கும் வேலையை ஆரம்பித்த திமுக!!
18 January 2021, 9:02 pmதேர்தல் அரசியலுக்கான மிக முக்கிய சூத்திரங்களில் ஒன்று, ‘எதிரியை பலவீனமாக்கு. அல்லது அந்த எதிரிக்கு எதிரியை உன் பக்கம் இழுத்துக் கொள்’ என்பதுதான்.
இந்த பார்முலாவை பயன்படுத்துவதில் எப்போதுமே ஆளும் கட்சிக்கும், எதிர்க் கட்சிக்கும் கடும் போட்டா போட்டி நிலவும்.
இதில் இன்னொரு சூத்திரம் ‘நாங்கள்தான் வெற்றி பெறுவோம், ஆட்சி அமைப்போம்’ என்ற பிம்பத்தை மக்களிடையே கட்டமைத்து, அதை நம்ப வைப்பது.
இதற்காக எல்லா உத்திகளையும், வியூகங்களையும் அரசியல் கட்சிகள் திட்டமிட்டு வகுக்கும். கட்சிகளுக்கு அரசியல் ஆலோசகர்கள் வந்தபின் இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகள் இந்தியா முழுவதும் சர்வ சாதாரணமாக காணப்படும் நிகழ்வுகளில் ஒன்றாகிவிட்டது.
அதுவும் நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று வெளிப்படையாக அறிவித்த பின்பு தமிழக அரசியலில் இந்த ஆட்டம் இன்னும் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது.
மாற்றுக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை நூற்றுக் கணக்கில் தங்கள் கட்சிக்கு இழுப்பது, மக்களிடையே அறிமுகமானவர்களை, பிரபலங்களை கட்சிக்குள் கொண்டு வருவது என பல்வேறு தில்லாலங்கடி வேலைகளும் அமர்க்களமாக ஆரம்பமாகி உள்ளது.
இந்த அரசியல் ஆட்டத்தில் கடந்த சில நாட்களாக திமுக அதிவேகம் காட்டுகிறது.
ஒருபக்கம் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை திரைமறைவில் நடத்திக் கொண்டே மறுபக்கம் கட்சியை இன்னும் வலுப்படுத்துவதில் திமுக சாமர்த்தியமாக காய் நகர்த்தி வருகிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
திமுகவின் இந்த தீவிர வலைவீச்சுக்கு இலக்காகி இருப்பவர்கள் நடிகர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்தான்.
மற்ற கட்சியின் தொண்டர்களை இழுப்பதைவிட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை இழுப்பதற்கென்றே மாவட்டம்தோறும் தனிப்பிரிவையே திமுக உருவாக்கி உள்ளது என்கிறார்கள்.
ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்ததால் விரக்தியடைந்து குழப்பத்தில் இருக்கும் இவர்களை அரசியல் பாதைக்கு திமுக வேகமாக இழுத்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 33 மாவட்டங்களுக்கு ரஜினி மக்கள் மன்ற செயலாளர்கள் உள்ளனர். பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களுக்கு இன்னும் ரஜினி மக்கள் மன்ற செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை.
இந்த மாவட்ட செயலாளர்கள் அனைவருமே ரஜினி அரசியலுக்கு வருவார் என்று கருதி தீவிரமாகவும் செயல்பட்டவர்கள். அதற்காக கைக் காசையும் தாராளமாய் செலவும் செய்தவர்கள்.
ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை அறிவித்த பின்பு இவர்களில் பெரும்பாலானோர் அப்படியே சோர்ந்துபோய் விட்டனர்.
இவர்களுக்கு தற்போது புத்துணர்ச்சி என்னும் வைட்டமின் தேவைப்படுகிறது. மேலும் அரசியலில் ஆர்வம் கொண்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களில் பலர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் விரும்புகின்றனர்.
இதுபோல் மோகம் உள்ளவர்களைத் தான் திமுகவினர் கண்டறிந்து கட்சிக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்த ‘அஜெண்டா’ கூட திமுகவின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கொடுத்ததுதான் என்கிறார்கள்.
திமுகவில் ஏற்கனவே ரஜினி ரசிகர்கள் நிறைய உள்ளனர்.
இவர்கள் மூலம்தான் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு குறி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட டிக்கெட்டுடன் போதிய வைட்டமினும் தரப்படும் என்று இவர்களுக்கு உறுதிமொழி கொடுத்து தூண்டில் போடப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இந்தப் பின்னணியில்தான் தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களின் ரஜினி மக்கள் மன்ற செயலாளர்கள் திமுகவில் இணைந்து உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இவர்களுடன் ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகிகள் சிலரும் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்தப் பட்டியல் இன்னும் நீளும் என்று தெரிகிறது. குறைந்தபட்சம் 10 மாவட்ட செயலாளர்களையாவது திமுகவுக்குள் இழுத்துப் போட்டு விட வேண்டும் என்று கண்டிப்புடன் ஸ்டாலின் கூறியிருக்கிறாராம். இதனால் இன்னும் ஓரிரு வாரங்களுக்கு ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு கடும் கிராக்கி இருக்கும் என்று கருதப்படுகிறது.
இன்னொரு புறம் தேமுதிக போன்ற கட்சிகளிலிருந்து அவற்றின் முக்கிய நிர்வாகிகளை இழுத்துப் போடும் பணியும் ஜோராக நடக்கிறது. ரஜினி, விஜயகாந்த் என்னும் இரு பெரும் நடிகர்களை இவர்கள் சார்ந்து இருப்பதால் இந்த வலைவீசும் பணி திமுகவுக்கு எளிதாக உள்ளதாம்.
இதேபோல் ஐகோர்ட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதிகள் சிலரையும் திமுக தனது கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளது.
இவர்கள் எல்லோரும் கூறும் ஒரே வார்த்தை ஸ்டாலின் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சி தர முடியும் என்பதுதான்.
தேர்தல் நேரத்தில் பல்வேறு தரப்பினரையும் கட்சியில் சேர்த்து கட்சியை வலுப்படுத்துவது இயல்பான நடவடிக்கை என்றாலும்கூட அரசியல் விமர்சகர்கள் வட்டாரத்தில் இது வேறொரு கோணத்தில் பார்க்கப்படுகிறது.
இதுபற்றி அவர்கள் கூறுகையில், “சோர்ந்து போயுள்ள ரஜினி ரசிகர்களை அரசியலுக்கு கொண்டு வருவது நல்ல விஷயம்தான். ஆனால் அதற்கு பொருத்தமான நேரம் இதுவல்ல. எதற்காக திமுக இப்போதே இப்படி அவசரம் காட்டுகிறது என்பது புரிந்த ஒன்றுதான்.
மற்ற கட்சிகள் முந்திக்கொள்ளும் முன்பாக நாம் அவர்களை இழுத்து விட வேண்டும் என்கிற நோக்கம் தான் இதில் உள்ளது.
இதிலுள்ள இன்னொரு பாதகத்தை இவர்கள் உணரவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பின்பு இவர்களை கட்சியில் சேர்த்துக் கொண்டு இருந்தால் அது திமுகவுக்கு புதுப்பொலிவு சேர்த்ததுபோல் இருக்கும். ஆனால் முன்னதாகவே இவர்களை இழுத்துப் போட்டிருப்பதால் இவர்கள் மீதான பரபரப்பு இன்னும் சில நாட்களில் அடங்கிப் போய்விடும்.
அதுவும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைத்தால் மட்டுமே இவர்கள் உற்சாகமாக இருப்பார்கள். இல்லையென்றால் ஏதாவது பதவி தருவதாகக் கூறித்தான் இவர்களை சமாதானப்படுத்த முடியும். இப்போதைக்கு இது சாத்தியமா? என்று தெரியவில்லை.
தேமுதிகவை பொறுத்தவரை அக்கட்சியிலிருந்து பெரிய தலைவர்கள் யாரேனும் வெளியேறி திமுகவில் இணைந்தால்தான் அது அக்கட்சிக்கு பலன் அளிப்பதாக இருக்கும். இல்லையென்றால் அதுவும் வீண்தான்.
ஓய்வு பெற்ற நீதிபதிகளை பொறுத்தவரை அவர்கள் அரசியல் கட்சிகளில் சேர்வதை தவிர்க்கலாம். கட்சிகளின் மறைமுக அனுதாபிகளாக மட்டுமே அவர்கள் இருக்க வேண்டும். இப்படி அரசியல் கட்சிகளில் வெளிப்படையாக சேர்வதன்மூலம் தாங்கள் வகித்த பதவியின்போது யாருக்கு ஆதரவாக தீர்ப்பு எழுதி இருப்பார்கள் என்ற நம்பகத்தன்மையின் மீது சந்தேகத்தைத்தான் மக்களிடையே இது எழுப்பும். எனவே கட்சிக்கு…, அது எந்த கட்சியாக இருந்தாலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் இது, திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி நீதிபதிகள் பற்றி சொன்ன ஒரு கருத்தையும் உறுதிப்படுத்துவதுபோல் அமைந்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்ற பிம்பத்தை ஏற்படுத்தவே அக்கட்சி இத்தகைய ஆள் சேர்ப்பு வேலைகளில் தீவிரமாக இறங்கியிருப்பது போல் தெரிகிறது. இது எந்த அளவுக்கு தேர்தலில் திமுகவுக்கு கைகொடுக்கும் என்பது தெரியவில்லை” என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
கட்சிகள் கூட்டணி அமைத்து, தொகுதி பங்கீடு பற்றி பேசி முடித்து, வேட்பாளர்களை அறிவிக்கும்போது இன்னும் இதுபோன்ற கட்சித் தாவல்கள் இன்னும் பெருமளவில் நடக்கும்.
அப்போது அரங்கேறும் கூத்துகள், வேடிக்கைகள் தமிழக மக்களுக்கு சுவாரஸ்யமான பொழுதுபோக்காக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
0
0