வீடு தேடி வருவது ஆர்எஸ்எஸ் கல்வியா…? கொந்தளிக்கும் வீரமணி, முத்தரசன்.. புதிய சர்ச்சையில் திமுக அரசு!!!

Author: Babu Lakshmanan
28 October 2021, 1:01 pm
RSS - dmk - updatenews360
Quick Share

‘இல்லம் தேடிக் கல்வி’

‘இல்லம் தேடிக் கல்வி’ என்ற திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து இருக்கிறார். இதற்காக 200 கோடி ரூபாய் மாநில பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்பட 12 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் காலத்தில் கல்வியை இழந்து தவித்த 1-ம் முதல் 8-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் சிறுவர், சிறுமிகளுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப் படுகிறது.

அதன்படி பள்ளி நேரம் முடிந்த பிறகு, மாலையில் நாள் ஒன்று, ஒன்றரை மணி நேரத்துக்கு மிகாமல், 1.7 லட்சம் தன்னார்வலர்கள் வீடுகளுக்கு சென்று 34 லட்சம் பேருக்கு நவம்பர் 1-ந்தேதி முதல் 6 மாத காலம் தினமும் ஒரு மணி நேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவற்றை புதுமையான முறையில் சொல்லிக் கொடுப்பார்கள் என்பது
இந்த திட்டத்தின் சிறப்பம்சம்.

தொடரும் மோதல்

வழக்கமாக திமுக அரசு எந்த ஒரு புதிய திட்டத்தை முன்னெடுத்தாலும், அதை திமுகவின் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி அடுத்த நிமிடமே பாராட்டி அறிக்கை வெளியிட்டு விடுவார். திமுகவின் கூட்டணி கட்சிகளும் வரிசையாக வாழ்த்து மடல் வாசிப்பார்கள்.

ஆனால் சமீப காலமாக தமிழகஅரசின் நடவடிக்கை தொடர்பாக திராவிடர் கழகமும் திமுகவின் கூட்டணி கட்சிகளும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அறிவுரை கூறுவதுபோல அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகளில் பணியாற்றுவதற்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும் என்றொரு அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.

Veeramani - - stalin - updatenews360

இதற்கு வீரமணி உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார். தோழமையின் சுட்டுதல்போல் திமுகவே இப்படி செய்யலாமா?… என்று கோபத்துடன் கேள்வியும் எழுப்பினார். வீரமணிக்கு ஆதரவாக விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கருத்து தெரிவித்தன.

ஆர்எஸ்எஸ் கொள்கை

அந்த வரிசையில் தற்போது திமுக அரசு அறிமுகம் செய்துள்ள இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வீரமணி தனது கண்டனக் குரலை ஓங்கி ஒலித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இல்லம் தேடி கல்வித் திட்டம் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் கல்விக் கொள்கையை மறைமுகமாகத் திணிப்பதாகும். இதனை செயல்படுத்த தமிழக அரசு எந்த வகையிலும் துணை போகக்கூடாது. கற்றல் – கற்பித்தல் பணியை மேற்கொள்ள ஒவ்வொரு ஊரிலும் உள்ள தன்னார்வத் தொண்டர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற தேசிய கல்விக் கொள்கை-2020 தெரிவிப்பதைத்தான் அப்படியே நடைமுறைப்படுத்துவதாக இந்த இல்லம் தேடி வரும் கல்வித் திட்டம் அமைந்திருக்கிறது.

இது, பிஞ்சுகளுக்குப் பாடம் என்ற பெயரில், மத நஞ்சுகளைக்கூட விளைவிக்கவே சர்க்கரைப் பூச்சுள்ள ஆர்எஸ்எஸ் என்னும் விஷ உருண்டை என்றே கூறி முன்பே எதிர்த்தோம். அதற்குத் தமிழ்நாடு கல்வித் துறை தலையாட்டலாமா?” என்று கூறி இருக்கிறார்.

stalin - mutharasan - veeramani - updatenews360

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “இல்லம் தேடி கல்வித் திட்டம் என்பது என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை தமிழக அரசு ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும். இத்திட்டத்தை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொண்டர்களும் மேற்கொள்வார்கள் எனில் இங்கே ‘சங்பரிவார்’ கும்பல் ஊடுருவி பிஞ்சுமனங்களில் மதவெறி நஞ்சு விதைக்கும் விபரீதம் ஏற்படும் என்பதை தமிழ்நாடு அரசு கருத்தில் கொள்ள வேண்டும். மத்திய அரசின் வஞ்சகத் திட்டங்களை கைவிட்டு தமிழகத்தின் சமூக நீதி வழங்கல் முறையை பாதுகாத்து, மேம்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மாணவர்களுக்கு கற்பித்தல்-கற்றல் பயிற்சி என்பது அவர்களுக்கு சோர்வை ஏற்படுத்தி விடும் என்று அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஆனால், திமுகவினர் இதை மறுக்கின்றனர். இதுபற்றி திமுக நிர்வாகிகள் கூறும்போது, “வீரமணி சொல்வதற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக்கு வர முடியாதவர்களுக்கான திட்டமே தவிர, தேசியக் கல்விக் கொள்கையை திமுக ஏற்கவில்லை. தொழிற்கல்வி, வாழ்க்கைக் கல்வி, மதக் கல்வி, பண்பாட்டுக் கல்வி என மத்திய அரசு சொல்கிறது. அதுகுறித்து இங்கே எதுவும் பேசப்படவில்லை” என்கின்றனர்.

மத்திய அரசின் திட்டம்

தமிழக பாஜக நிர்வாகிகளோ, “இதுநாள் வரையிலும் கல்வித் திட்டத்தை யார் வடிவமைத்தது? கடந்த 40 ஆண்டுகளாக மத்தியில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் இருந்தது யார்? இவர்கள் அமைத்த பாடத்திட்டத்தின்மீது இவர்களுக்கே நம்பிக்கை இல்லை. அதனால்தான் பிஞ்சுக் குழந்தைகளின் மீது நஞ்சை விதைத்துவிடும் என சந்தேகப்படுகிறார்கள்.

central gvt - updatenews360

தற்போது திமுக அரசு செயல்படுத்தும் திட்டம் என்பது மத்திய அரசின் திட்டம். அதை தனது சொந்தப் பெயரில் தமிழக அரசு பயன்படுத்துகிறது. அதற்கான நிதி, திட்டம் எல்லாமே மத்திய அரசுக்குச் சொந்தமானது. அவர்கள் எந்தப் பெயரில் வேண்டுமானாலும் செயல்படுத்திக் கொள்ளட்டும். அதனை பாஜக பொருட்படுத்தவில்லை. தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றால் மட்டும் போதும்” என்றனர்.

ஏன் இவ்வளவு கூப்பாடு

அரசியல் விமர்சகர்கள் கூறும்போது “ஒரு திட்டத்தை தொடங்கும் முன்பே, அதை எதிர்ப்பது திமுக கூட்டணி கட்சிகளுக்கும், வீரமணிக்கும் வாடிக்கையாகிவிட்டது. இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் இருந்தால், அதை திமுக அரசு கண்டிப்பாக நிறுத்தி விடும் என்பது வீரமணிக்கு தெரியும். ஆனால் இத்திட்டத்தை பாஜக ஆதரிக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அதில் ஏதோ செய்து விடுவார்களோ என்று திமுக கூட்டணி கட்சிகள் பயப்படுகின்றன. இது தேவையற்ற அச்சம். அதுவும் 6 மாதம் மட்டுமே செயல்படுத்தப்போகும் இத்திட்டத்திற்கு
வீரமணி ஏன் இவ்வளவு கூப்பாடு போடுகிறார்? என்று தெரியவில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் 58 பேருக்கு தமிழக அரசு பணி நியமன ஆணை வழங்கியது. அவர்களில் சிலர் பெரியார் சிலைக்கு மாலையும் அணிவித்தனர். கடவுள் இல்லை, கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்று சொன்ன பெரியாருக்கு மாலை அணித்தவர்கள் எப்படி கோவிலில் சாமி சிலைகளுக்கு மனதார பூஜை செய்வார்கள்? இது திராவிடர் கழக சித்தாந்தத்தின் திணிப்பு இல்லையா?” என்று
கேள்வி எழுப்புகின்றனர்.

Views: - 235

0

0