இலவுகாத்த கிளியான ‘பாமக’ …! திமுக கூட்டணியில் இடமில்லை… மறைமுகமாக கூறிய முரசொலி கட்டுரை..!!!
26 January 2021, 6:50 pmசட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக – திமுக கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. 3வது அணியாக கருதப்படும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் தனது பாணியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. ஆனால், பாமக, தேமுதிக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எந்த கூட்டணியில் இடம்பெறப் போகிறோம்..? யாரை எதிர்த்து பிரச்சாரம் செய்வது என்பது தெரியாமல், தேர்தல் களத்தில் மவுனம் கடைபிடித்து வருகிறது.
இப்படியிருக்க, சிறிய கட்சிகளிலேயே பாமக எந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கப் போகிறது என்பதுதான் அனைத்து அரசியல் தலைவர்களிடையே எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு தொடர்பான உறுதியை வழங்கினால் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை நடத்த முடியும் என்று பாமக திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
இதனிடையே, அரசியல் நிலைப்பாட்டை எடுப்பதற்காக, பாமகவின் நிர்வாகக் குழு நேற்று கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 25ம் தேதி கூட்டம் கூடுவதாக அறிவித்த வுடன் அதிமுக இறங்கி வந்து, தங்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என பாமக பெரிதும் நம்பியது. ஆனால், பாமகவின் கோரிக்கையை அதிமுகவும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
எனவே, நிர்வாகக் காரணங்களைக் காட்டி இந்தக் கூட்டம் 31ம் தேதி நடைபெறும் என பாமக தலைவர் ஜிகே மணி அறிவித்தார். தங்களின் கோரிக்கையை அதிமுக ஏற்கப் போவதில்லை எனத் தெரிய வந்துவிட்டதால், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே, இந்தக் கூட்டத்ததை பாமக தள்ளி வைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில், திமுகவைக் குறிவைக்கும் இலவுகாத்த கிளி, ராமதாஸின் பகல் கனவு என்ற தலைப்பில் திமுக தேர்தல் பணிச் செயலாளர் குத்தாலம் பி. கல்யாணம் எழுதிய கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க திமுக எடுத்த நடவடிக்கைகளை வெளியிட்ட அவர்,
20 சதவீத இடஒதுக்கீட்டில் பலனடைந்தவர்கள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டால், உண்மை வெளிச்சத்துக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதன்மூலம், பாமகவை கூட்டணியில் சேர்க்க திமுக விரும்பவில்லை என அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். இது பாமகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0
1 thought on “இலவுகாத்த கிளியான ‘பாமக’ …! திமுக கூட்டணியில் இடமில்லை… மறைமுகமாக கூறிய முரசொலி கட்டுரை..!!!”
Comments are closed.