ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல்… திமுகவுக்குள் கிளம்பிய தகராறு : அமைச்சர் PTR-ஐ கைவிட்ட டிஆர் பாலு… கட்சியில் சலசலப்பு!!

Author: Babu Lakshmanan
30 December 2021, 7:35 pm
Quick Share

பெட்ரோல், டீசல் விலை மீதான வரி குறைப்பு தொடர்பாக திமுக பொருளாளர்
டிஆர் பாலு எம்பிக்கும், தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது, தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வாக்குறுதி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, திமுக அளித்த மிக முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும் டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைப்போம் என்பதாகும்.

அதுமட்டுமின்றி பெட்ரோலிய பொருட்களின் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்துவோம். இதன் மூலம் பெட்ரோல் டீசல் விலையை கணிசமாக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வாக்குறுதி அளித்தது.

அதேநேரம் திமுக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய 4 மாதங்களுக்கு பிறகு பெட்ரோல் விலை மட்டும் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது.

புறக்கணிப்பு

இந்த நிலையில்தான் கடந்த செப்டம்பர் மாதம் லக்னோ நகரில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் நேரடியாக பங்கேற்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஒன்றரை வருடங்களாக காணொலி வாயிலாகவே ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், லக்னோ நிதியமைச்சர்கள் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

GST Meeting- Updatenews360

ஆனால் அனைத்து மாநில நிதியமைச்சர்களும் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் கலந்து கொள்ளவில்லை. அதற்கு அவர் மதுரையில் நடந்த சமூக வளைகாப்பு விழாவில் பங்கேற்க வேண்டி இருந்ததால் என்னால் செல்ல முடியவில்லை என்பது உள்பட பல்வேறு காரணங்களை கூறியது, பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இந்த கூட்டத்தில் பிடிஆர் தியாகராஜன் கலந்து கொண்டிருந்தால் பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசை நேரடியாக வலியுறுத்தி இருக்கலாம். ஆனால் தமிழக நிதியமைச்சர் அதை செய்யத் தவறிவிட்டார் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல்

இதற்கு அப்போது பதிலளித்த நிதியமைச்சர் தியாகராஜன், “மத்திய அரசின் ஒட்டுமொத்த வரி வருவாயில் 20 சதவீதம் பெட்ரோல், டீசல் வழியாக வருகிறது. இதனால் அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசும் விரும்பவில்லை, மாநில அரசுகளும் விரும்பவில்லை.

PTR - updatenews360

அதேநேரம் பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு விதிக்கும் செஸ் வரியைக் கைவிட்டால் ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவது பற்றி திமுக அரசு மறுபரிசீலனை செய்யத் தயாராக உள்ளது” என்று குறிப்பிட்டார். இதுவும் சர்ச்சைக்கு உள்ளானது.

தமிழகத்தில் விலை குறைப்பில்லை

இந்த நிலையில்தான் தீபாவளியின்போது பிரதமர் மோடி பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான வரியை 10 ரூபாயும் குறைத்தும் அறிவிப்பு வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, 25 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைக்கப்பட்டது. எனினும் தமிழகத்தில் திமுக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை.

இதையடுத்து பெட்ரோல் விலையை லிட்டருக்கு மேலும் 2 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு
4 ரூபாயும் குறைக்கக்கோரி அதிமுகவும் பாஜகவும் மாநிலம் முழுவதும் தமிழக அரசுக்கு எதிராக அண்மையில் போராட்டங்களை முன்னெடுத்தன.

PTR தனிமனிதன்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு மீதான சர்ச்சை தமிழகத்தில் இன்னும் ஓயாத நிலையில், திமுக பொருளாளர் டி ஆர் பாலு எம்பி தற்போது ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டி பெரும் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

அந்த செய்தி சேனலின் நெறியாளர் தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறாரே? என்று கேட்டதற்கு தனிமனிதன் கருத்தையெல்லாம் பொருட்படுத்தக் கூடாது”என்று டி ஆர் பாலு கூறியுள்ளார்.

TR Balu- updatenews360

அப்போது பேட்டி கண்டவர் தியாகராஜன் மாநில நிதியமைச்சர் ஆயிற்றே? என்று கேட்க, அதற்கு டி ஆர் பாலு,”நான் திமுகவின் பொருளாளர். திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவராகவும் இருந்தேன். அப்போது திமுக தலைவர் ஆணையின்படி தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதியையும் நான்தான் எழுதினேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதாவது பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் கூறும் கருத்துக்கும், திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல டிஆர் பாலுவின் பேட்டி அமைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பது எது?

டிஆர் பாலுவின், இந்த பதிலை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக் காண்பித்து, திமுகவை கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தனியார் தொலைக்காட்சி பேட்டியில் திமுகவின் மக்களவை தலைவரும், அக் கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலு, பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். அவ்வாறு பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதன் மூலம் குறைந்தது 40 முதல் 50 ரூபாய் வரை பெட்ரோலியப் பொருட்களின் விலை குறையும் என்றும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருட்கள் கிடைக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

EPS vs Stalin- Updatenews360

மத்திய அரசு பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக மாநில அரசுகளின் நிலைப்பாட்டினை கேட்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. இதற்கு பெரும்பாலான மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசும் ,மேற்கு வங்க அரசும் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாக மத்திய அரசு அமைச்சக வட்டாரங்கள் கூறுவதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வருகின்றன.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரவேண்டும் என்று டிஆர் பாலு பரிந்துரைத்த நிலையில், தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற விடாமல் தடுப்பது எது? என்பதை விடியா அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பகிரங்கமாக தெரிவிக்க வலியுறுத்துகிறேன்” என்று காட்டாமாக தாக்கியுள்ளார்.

தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் குமரகுரு, “தமிழக மக்களை டிஆர் பாலுவும், நிதியமைச்சர் தியாகராஜனும் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்கள்” என்று கிண்டலடித்து இருக்கிறார்.

ஓரங்கப்பட்டப்படுகிறாரா..?

அரசியல் பார்வையாளர்கள் கூறும்போது, “டி ஆர் பாலு கூறுவதைப் பார்த்தால் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் தமிழக அரசு கொண்டு வர விரும்புகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நிதியமைச்சர் தியாகராஜனை, தனிமனிதன் கருத்தை எல்லாம் பொருட்படுத்தக் கூடாது என்று டி. ஆர். பாலு கூறியது எதற்காக என்பதுதான் புரியவில்லை. இது அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் திமுகவில் ஓரங்கட்டப்படுகிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

PTR - updatenews360

திமுக ஆட்சி அமைந்து 7 மாதங்கள் ஆகியும் கூட இந்த வாக்குறுதிக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது மட்டும் எதற்காக இதுபற்றி டி ஆர் பாலு பேசுகிறார் என்பதும் புரியவில்லை. தமிழக நிதியமைச்சர் முன்பு சொன்னபோதே மறுத்துக் கூறியிருக்கலாம். எனவே இதில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க திமுக அரசு வலியுறுத்தவேண்டும். அப்போதுதான் டி ஆர் பாலு சொல்வது உண்மை என்று மக்கள் நம்பும் நிலை உருவாகும்” என்று குறிப்பிட்டனர்.

Views: - 390

0

0