கட்சிப் பதவியில் இருந்து பிடிஆர் ராஜினிமா…? சீனியரின் வம்படியும்… கட்சி தாவியவரின் நெருக்கடியும்… அறிவாலயத்தில் கிளம்பிய ‘பிரளயம்’…!!!

Author: Babu Lakshmanan
6 January 2022, 7:22 pm
Quick Share

திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பதவியில் இருந்து பழனிவேல் தியாகராஜன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

2014ம் ஆண்டு அதிமுக மூலமாக தகவல் தொழில்நுட்ப அணி என்ற பிரிவு, தமிழக அரசியலில் அடியெடுத்து வைத்தது. இதன்மூலமாகவே, 2016ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் அரியணையை பிடித்தது என்றே சொல்லலாம். அப்போது, அதிமுகவின் ஆன்லைன் பிரச்சாரத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய திமுக, 2017ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப அணியை உருவாக்கியது. இதன் செயலாளராக பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டார்.

PTR-updatenews360

இதைத் தொடர்ந்து, திமுகவின் ஆன்லைன் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டதால், தங்களது கட்சியின் கொள்கைகள், அறிவிப்புகள், செயல்பாடுகள் என் அனைத்தும் கடைக்கோடி தொண்டர் வரை கொண்டு செல்ல முடிந்தது.

கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவையில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்க திமுக ஐடி விங்கும் முக்கியக் காரணமாகவே இருந்தது. இதனால், அதன் செயலாளரான பழனிவேல் தியாகராஜனை கவுரவிக்கும் விதமாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், அவருக்கு நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அந்த அளவுக்கு திமுக தலைமையுடன் நெருக்கமாக இருந்த அவர், தற்போது தனது தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காரணம், 2021 சட்டப்பேரவைக்கு முன்பாக துடிப்போடு செயல்பட்டு வந்த திமுகவின் ஐடி விங், தற்போது தடுமாறி வருவதாக அடுத்தடுத்து புகார் எழுந்து வருகிறது. இது தொடர்பாக கட்சியின் தலைமைக்கு நேரடியாக புகார் வந்துள்ளதாகவும், முதலமைச்சர் ஸ்டாலினும் இதில் நேரடியாக கவனம் செலுத்தி, பிடிஆரை எச்சரித்து அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது.

அப்போது, நிதியமைச்சர் பொறுப்பை கவனிக்கவே தனக்கு நேரமில்லை என்றும், எனவே, தன்னால் கட்சியின் பொறுப்பையும் கவனிக்க முடியவில்லை என்று பிடிஆரும் விளக்கம் கொடுத்து விட்டதாகவும் ஒருபுறம் தகவல் வெளியாகி வருகிறது.

ஆனால், திமுக ஐடி விங் தரப்பில் இருந்து வெளியான தகவலாக கூறப்படுவதாவது, “திமுக தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனை நியமித்தது பழனிவேல் தியாகராஜனுக்கு பெரும் சங்கடம். திமுகவில் எந்த அணிக்கு ஆலோசகர் நியமிக்கப்படாத நிலையில், ஐடி விங்கிற்கும் மட்டும் ஆலோசகரை நியமித்திருப்பது, தன்னை மட்டுப்படுத்துவதற்காகத்தான் என்று பிடிஆர் நினைக்கிறார்,” எனக் கூறுகின்றனர்.

ஏற்கனவே, சட்டப்பேரவை தேர்தலுக்கு முழு அளவில் தகவல் தொழில்நுட்ப அணியை தயார்படுத்தியிருந்த நிலையில், பிரசாந்த் கிஷோருடன் தேர்தல் ஒப்பந்தம் செய்து, பிடிஆரின் பவரை திமுக தலைமை குறைத்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி திமுகவுக்கு வந்த மகேந்திரனுக்கு, தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கியதும் பிடிஆருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அப்போது, புள்ளி விபரங்களை சேகரிக்கும் பணியை பிடிஆருக்கும், சமூக வலைதள பொறுப்பை மகேந்திரனுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பிரித்து வழங்கினார். இது கட்சியில் தனது அதிகாரத்தை குறைக்கும் விதமாக இருப்பதாக அவர் உணர்ந்துள்ளார்.

Mahendran Stalin - Updatenews360

மேலும், தகவல் தொழில்நுட்ப அணியில் மகேந்திரனை உயர்ந்த பொறுப்புக்கு கொண்டு வரவேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் மறைமுகமாக கொடுக்கும் நெருக்கடியும் அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல், திமுக எம்பி டிஆர் பாலுவின் மகன் டிஆர்பி ராஜா 3 முறை சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதாகவும், தனது மகனுக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என்று டிஆர் பாலு ஒருபுறம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில், பழனிவேல் தியாகராஜனை தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் பொறுப்பில் இருந்து இறக்கி விட்டு, நிதியமைச்சர் பதவியில் முழு கவனம் செலுத்துமாறு தெரிவிக்க முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்து வருகின்றன. அதோடு, பிடிஆரின் கட்சிப் பொறுப்பை, மகேந்திரன் அல்லது டிஆர்பி ராஜா ஆகியோரில் யாருக்கேனும் ஒருவருக்கு கொடுத்து பிரச்சனையை மூட்டைக்கட்ட அவர் நடவடிக்கை எடுப்பார் என்று அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால், பழனிவேல் தியாகராஜனை சமாதானப்படுத்தி, கட்சியையும், ஆட்சியையும் ஒருசேர கவனிக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கூறினாலும், ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

Views: - 506

0

0