முதலில் கழகமே குடும்பம் ! இப்போது குடும்பமே கலகம் : உதயநிதியால் ஸ்டாலின் குடும்பத்திலும் கடும் மோதல்

20 January 2021, 1:06 pm
dmk family- updatenews360
Quick Share

சென்னை: திமுகவில் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது வாரிசான உதயநிதியை முன்னிறுத்துவதால் கட்சிக்குள் கடுமையான அதிருப்தி எழுந்துள்ள நிலையில், குடும்பத்துக்குள்ளும் உதயநிதியை எதிர்த்து மருமகன் சபரீசன், கலாநிதி மாறன் ஆகியோர் கச்சை கட்டுவவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் யாருக்கு சீட் தருவது என்பதிலும் குடுமிப்பிடி சண்டை ஏற்படும் சூழல் இருப்பதால், குடும்ப சண்டை தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்று உடன்பிறப்புகள் நடுக்கத்தில் உள்ளனர். கழகம் ஒரு குடும்பம் என்று ஸ்டாலின் அடிக்கடி கூறிவரும் நிலையில், ஸ்டாலின் குடும்பத்தில் பெரும் கலகம் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.

stalin campaign - updatenews360

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் சபரீசனே மாமனார் ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரத்தை கவனித்தார். ஸ்டாலினுக்கு விதவிதமான கேட் அப்புகளைப் போட்டு ‘நமக்கு நாமே’ திட்டத்தின் மூலம் வித்தியாசமான பிரச்சாரத்தை கட்டமைத்தார். இதனால், 2011 சட்டமன்றத் தேர்தலில் 23 இடங்களை மட்டும் பெற்று எதிர்க்கட்சியாகக் கூட ஆக முடியாத திமுக 89 தொகுதிகளில் வெற்றிபெற்று வலிமையான எதிர்க்கட்சியாக மாறியது. மருமகன் சபரீசன் ஆலோசனைப்படியே பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐபேக் சபரீசன் ஆலோசனையின்படியே ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.

ஆனால், இந்தத் தேர்தலில் உதயநிதியின் வருகைக்கு பிறகு சபரீசனின் முக்கியத்துவம் மிகவும் குறைந்துள்ளது. சபரீசனால் அழைத்து வரப்பட்ட ஐ-பேக் தனக்கு எதிராக செயல்படுவதாக உதயநிதி கருதுகிறார். இந்தத் தேதலுக்கு முன்பு உதயநிதிக்கு முக்கியத்துவம் எதுவும் தரக்கூடாது என்று பிரசாந்த் கிஷோர் கொடுத்துள்ள ஆலோசனைக்குப் பின்னால் சபரீசன் இருப்பதாக உதயநிதி கருதுவதால், சபரீசன் மீது கடுமையான கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐ-பேக் டீமுக்கு எதிராக உதயநிதி திரும்பியுள்ளார்.

udhayanidhi stalin - updatenews360

அண்மையில் திமுகவினர் விளம்பரங்களிலும், போஸ்டர்களிலும் தனது படத்தையும், மறைந்த திமுக தலைவர்களின் படங்களையும் தவிர, வேறுயார் படங்களையும் போடக்கூடாது என்று ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், தொடர்ந்து உதயநிதியின் படங்கள் மட்டும் அனைத்து விளம்பரங்களிலும் திமுகவின் கட்சி பத்திரிகையான ‘முரசொலியிலும் வெளிவந்து கொண்டிருக்கிறது. திமுக பொதுசெயலாளர் க துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு எந்தவிதமான முக்கியத்துவமும் தரப்படாத நிலையில், உதயநிகிதிக்கு மட்டும் தனியாக விதிவிலக்கு தரப்படுவது மூத்த தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியில் பெரும்பிரச்சினை வெடித்துள்ள நிலையிலும் உதயநிதி தனக்கென்று ஒரு அணியை வைத்துக்கொண்டு தனிஆவர்த்தனம் செய்து வருகிறார். இளைஞர் அணி சார்பில் தனியாக கூட்டங்கள் போட்டு மட்டமாகப்பேசி, பல இடங்களில் மொத்துவாங்கி பிறகு மன்னிப்பும் கேட்டுவருகிறார். இதனால், திமுகவின் கண்ணியம் காற்றில் பறக்கிறது. தலைவர்கள் பலரும் உதயநிதியின் பேச்சால் தேர்தலில் ஏற்படப்போகும் பாதிப்பை எண்ணி கலக்கத்தில் உள்ளனர்.

kalanithi-maran-and-dayanidhi-maran -updatenews360

இந்த நிலையில், ஸ்டாலின் குடும்பத்திலும் உதயநிதியால் கடுமையான பிரச்சினை வெடித்துள்ளது. முதலில் ‘சன்’ தொலைக்காட்சியில் அதிமுகவின் விளம்பரங்கள் இடம்பெற்றது தொடர்பாக திமுகவில் பிரச்சினை வெடித்தது. இதற்குப் பின்னால் உதயநிதி இருப்பதாக கலாநிதி மாறன் கருதினார். இதனால், அவருக்கும் உதயநிதிக்கும், கலாநிதிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், அண்மையில் உதயநிதியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை ‘சன்’ டிவி புறக்கணித்தது. இதனால், இருவருக்கும் நடுவில் மோதல் தொடர்கிறது.

அதன்பின்னர், முன்னாள் மத்திய அமைச்சரும், ஸ்டாலின் சகோதாரருமான அழகிரியால் திமுகவுக்கு தேர்தலில் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப்படுவதால், அவரை மீண்டும் கட்சியில் சேர்க்குமாறு சபரீசன் ஆலோசனை சொன்னதாகத் தெரிகிறது. இதை உதயநிதி கடுமையாக எதிர்த்துப் பேசியுள்ளார். தனக்கு போட்டியாக அழகிரி மகன் துரை தயாநிதி வருவார் என்ற பயத்தால் உதயநிதி அழகிரியை சேர்க்க எதிர்ப்பு தெரிவிப்பதால், திமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சபரீசன் கூறியதாகவும், இதனால் மோதல் பெரிதாகிவருவதாவும் சொல்லப்படுகிறது.

இந்த மோதல் தேர்தல் நேரத்தில் திமுகவினருக்கு சீட்டு கொடுப்பதிலும் கடுமையாக எதிரொலிக்கும் என்று தெரிகிறது. இதனால், தேர்தலில் கழகத்தில் ஏற்படும் கலகத்தால், உள்குத்து வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் மூன்றாவது முறையாக எதிர்க்கட்சியாகி சாதனை படைப்போமோ என்ற நடுக்கத்தில் கட்சி நிர்வாகிகள் இருக்கின்றனர்.

Views: - 0

0

0