போலீசை சிக்க வைத்த திருமா?: அதிர்ச்சியில் திமுக தலைமை..!!

Author: Rajesh
20 April 2022, 11:00 pm
Quick Share

மயிலாடுதுறையில் தர்மபுர ஆதீன மடத்துக்கு ஆளுநர் ரவி சென்றபோது அவருடைய பாதுகாப்பு வாகனங்கள் மீது விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் திராவிடர் அமைப்புகள் சிலவும் கருப்புக் கொடிக் கம்புகளையும், கற்களையும் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமலும், குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காததற்கு கண்டனம் தெரிவித்தும் இந்தக் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த பரபரப்பு சம்பவம் தொடர்பாக, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது “தமிழகத்திலேயே, ஆளுநர்
மீது கற்களையும், கம்புகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியதும், தமிழகத்திற்கு உள்ளேயே தமிழக ஆளுநர் பயணிக்க முடியவில்லை என்பதும் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு சீர்கேடு அடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. தமிழக ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை எனில், சாதாரண மக்களுக்கு இந்த விடியா அரசு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.

தமிழக கவர்னர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, காவல் துறையை தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்?” என்று கேள்வி எழுப்பினார்.

மாநில பாஜக தலைவர் அண்ணாமலையும் கொந்தளித்தார். அவர் வெளியிட்ட கண்டன அறிக்கையில்
“கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என்ற பெயரிலே கலவரத்திற்கு திட்டமிடுவதும் கட்டி வந்த கம்பால் அடிப்பதும், கொடி கம்பங்களை வீசுவதும், கொடியில் மறைத்து எடுத்து வந்த கற்களை வீசி தாக்குவதும் திமுகவினருக்கு கைவந்த கலை. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரை பெண்ணென்றும் பாராமல்
மதுரை தெற்கு வாசலில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் கற்களை வீசி தாக்கியதும், ரத்தம் வடிய நின்றபோது அவர் பெண்மையை கேலிசெய்து பேசியதும் திமுகவின் சரித்திரம் சாதனைகளில் ஒன்று.

ஆளுநருக்கு மயிலாடுதுறையில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மாநில அரசே முழு பொறுப்பு. இப்படி தமிழக ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சாமானிய மக்களுக்கும் இந்த ஆட்சியில் எப்படிப்பட்ட பாதுகாப்பு கிடைக்கும் என்று அச்சப்பட வேண்டிய நிலையில் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது.

தொடர்ந்து தமிழக ஆளுநர் மீது ஆளும் கட்சியினரும் அதன் தலைமையும் வெளிப்படுத்தும் வெறுப்பும், எதிர்ப்பும் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு உள்நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.
இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநரிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். இல்லையென்றால் பதவி விலக வேண்டும். இந்த 2 வாய்ப்புகள்தான் அவருக்கு உள்ளது” என கூறப்பட்டு இருந்தது.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதன் தலைவர் திருமாவளவனும் கூட ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கருப்புகொடி வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து இருப்பதுதான்.

இதுதொடர்பாக அரியலூரில் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர் “ஆளுநரின் கார் மீது கருப்புக் கொடி வீசியது ஏற்புடைய செயல் அல்ல. 
அறவழிப்போராட்டத்தில் இது போன்ற செயல்கள் வரவேற்புடையதல்ல. ஆளுநரின் பாதுகாப்புக்கு சென்றவர்கள் மீது கட்சிக் கொடிகளை வீசி நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது. ஆனால், இதற்காக முதலமைச்சர் பதவிவிலக வேண்டிய நேரம் வந்துவிட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கோரிக்கை” என்று தெரிவித்தார். 

திருமாவளவனுடைய இந்த கண்டனம், தமிழக போலீசை மறைமுகமாகத் சாடுவது போல அமைந்துள்ளது. இப்படி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் மேல் கண்டனம் தெரிவிக்க தமிழக காவல் துறைக்கு கடும் நெருக்கடியும் ஏற்பட்டது,

இதைத்தொடர்ந்து தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் போலீஸ் டிஜிபி தாமரைக்கண்ணன் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில் தமிழக ஆளுநருக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது, போலீஸ் அதிகாரிகள் உட்பட1120 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்று கூறிய அவர், “ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள், கருப்பு கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுப்பு அரண்கள் அமைத்து போலீசார் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பின்னர் அவர்களை கைது செய்து போலீஸ் வாகனங்களில் ஏற்றினர். ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் முற்றிலும் சென்ற நிலையில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து பிளாஸ்டிக் பைப்புகளில் கட்டப்பட்டிருந்த கருப்புக்கொடிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் வீசி எறிந்தனர் என்பதுதான் உண்மை” என்று மறுத்தார்.

இந்த நிலையில் ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆளுநரின் பாதுகாவலர் விஸ்வேஷ் பி சாஸ்திரி, தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழக ஆளுநருக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டத்தை கண்டித்து சட்டப்பேரவையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பும் செய்தனர். இதனால் இச்சம்பவம் மேலும் பரபரப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “மயிலாடுதுறை விழாவில் கலந்துகொள்ள ஆளுநர் ரவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதே,  அவரை தர்மபுர ஆதீனம் அழைக்கக்கூடாது என்றும், ஆளுநர் தமிழக மக்களையும், நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட சட்டப் பேரவை தீர்மானங்களை அவமதிப்பவர் என்றும் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலை சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. மேலும் மடத்திற்கே
நேரடியாக சென்று ஆளுநரை அழைக்கக் கூடாது என வலியுறுத்தவும் செய்தனர். மீறி அழைத்தால் ஆளுநரை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்றும் எச்சரித்துவிட்டும் வந்தனர்.

எனவே ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கருப்புக் கொடியும், கம்புகளும் திட்டமிட்டு வீசப்பட்டு இருக்கலாமோ என்று சந்தேகிக்கவும் தோன்றுகிறது. திமுக கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் இந்த சம்பவம் ஏற்புடையது அல்ல என்று கூறியிருப்பதன் மூலம் தமிழக காவல்துறை கூறுவது தவறான தகவல் என்று கருத இடம் தருகிறது. இது திமுக தலைமைக்கு மிகவும் அதிர்ச்சி தரும் விஷயமாகும். ஏனென்றால் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தன் கட்சி நிர்வாகிகளிடம் கேட்காமலா திருமாவளவன் கண்டனம் தெரிவித்து இருப்பார்? இது காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நெருக்கடியான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லவேண்டும். இந்த சம்பவம் பற்றி ஆளுநர் ரவி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் அனுப்பி இருப்பார் என்பதும் நிச்சயம். எனவே திமுக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையேயான பனிப்போர் இனி வெளிப்படையாகவே நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளது” என்று குறிப்பிட்டனர்.

Views: - 792

0

0