ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : தி.மு.க. இரட்டை நிலைப்பாடு..? முதலமைச்சருக்கு மனு போட்ட தூத்துக்குடி தி.மு.க.,!!

18 August 2020, 5:04 pm
Sterlite dmk - updatenews360
Quick Share

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என திமுக ஊராட்சி மன்ற தலைவர் மனு அளித்துள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு மாசுபாட்டை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு பல்வேறு நோய் தொற்றுகளையும் உருவாக்கும் அபாயம் இருப்பதாகக் கருதி, கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேதாந்தா குழுமம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வெளியிட்டது. அதில், ஸ்டெர்லைட் ஆலை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தொடரும் என தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பிற்கு வரவேற்பு தெரிவித்து பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு தலை வணங்குவதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க.வின் ஊராட்சி மன்ற தலைவர் அ.அன்புராஜ், ஸ்டெர்லைட்டை திறக்க வலியுறுத்தி அரசுக்கு மனு அளித்திருக்கும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :- நாங்கள் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் இராஜாயின் கோவில் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் கிராமங்களில் விவசாயம் பொய்தது பல வருடங்கள் ஆகிவிட்டது. எங்கள் கிராமத்தில் உள்ள மக்கள் தொழிற்சாலைகளுக்கு சென்று வேலை செய்தால் மட்டுமே வாழ்க்கையை நடத்த முடியும்.

எங்கள் கிராம மக்கள் பலர் நேரடி மற்றும் மறைமுக தொழில்களை செய்து வந்து தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி வந்தனர். இந்த ஆலை எங்கள் கிராம மக்களின் மகிழ்ச்சி மற்றும் துக்க நிகழ்வுகளின் போது பல உதவிகளை செய்து குடும்பத்தின் அங்கமாகவே இருந்து வந்தது.

நாங்கள் அனைவரும் ஸ்டெர்லைட் நிறுவனம் மூடியதால் வேலை இல்லாமல் அன்றாடம் உணவிற்கே கஷ்டப்படுகிறோம். சிறுசிறு வேலைகள் செய்து பிழைத்து வந்தோம். கொரோனா தொற்று நோய் பரவியதற்கு பிறகு முழுவதுமாக வேலையின்றி வாழ வழி தெரியாமல் தினமும் கஷ்டப்பட்டு வருகின்றோம்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலை இயங்கிய காலங்களில் எங்கள் கிராமத்தில் இலவச மருத்துவ சேவை, மரம் நட்டு பராமரித்தல், குடிநீர் கிணறுகளை சீரமைத்தல் மற்றும் இன்னும் பல சமுதாய பணிகளை செய்து வந்தனர்.

கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் நிறுவனம் கொடுத்த கல்வி உதவி தொகையை வைத்து பெரும்பாலானோர் எங்கள் குழந்தைகளை படிக்க வைத்தோம். இன்று ஸ்டெர்லைட் நிறுவனம் திறந்தால் மட்டுமே நாங்கள் வேலை கிடைத்து வாழ முடியும். எங்கள் குழந்தைகளை படிக்க முடியும்.

எங்கள் கிராமத்தில் வசிக்கும் சிலர் மட்டுமே மாநிலத்தின் வளர்ச்சியை விரும்பாத சில அமைப்புகளின் தூண்டுதலின் பேரில் போராட்டங்களில் கலந்து கொண்டனர்.

இன்று நாங்கள் அனைவரும் தொழிற்சாலை திறந்தால் மட்டுமே வாழ முடியும் என்பதை உணர்ந்து மீண்டும் ஸ்டெர்லைட் நிறுவனத்தை திறக்க வேண்டுகின்றோம்.

எங்களுக்கு மீண்டும் நிரந்தரமாக வேலை கிடைக்க ஸ்டெர்லைட் நிறுவனத்தை திறக்க வேண்டுகின்றோம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்கள் மீது கருணை கொண்டு ஸ்டெர்லைட் நிறுவனத்தை திறந்து எங்கள் வாழ்விற்கு வழி காட்டுங்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை ஒட்டபிடாரம் ஊராட்சி ஒன்றிய தி.மு.க. தலைவர் அ.அன்புராஜ் கடந்த மாதம் 14ம் தேதி எழுதியுள்ளார். தற்போது தீர்ப்பு வெளியாகிய நிலையில், இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தி.மு.க.வின் தலைமை கூறி வரும் நிலையில், ஆலையை எப்படியாவது திறந்து விடுங்கள் என தூத்துக்குடி தி.மு.க. வலியுறுத்தியிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு ஏன்..? என்றும் நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

Views: - 4

0

0