‘பேசாம கட்சிய கலச்சுட்டு திமுகவுலயே சேர்ந்திருக்கலாம்’ : 6 தொகுதி… உதயசூரியன் சின்னத்தில் போட்டி.. மதிமுகவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!!!

6 March 2021, 7:54 pm
Quick Share

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை பெறுவதற்கான ஒப்பந்தத்தில் மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்திட்டார்.

ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆயத்தமாகும் விதமாக, அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுகவை பொறுத்தவரையில், இந்தியன் முஸ்லீம் லீக் கட்சியுடனும், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டது. ஆனால், விடுதலை சிறுத்தைகளுடன் நீண்ட இழுபறி பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, திமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாத நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் மதிமுக குழு பேச்சுவார்த்தையை நடத்தியது. மதிமுகவின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தேர்தல் பணிச் செயலர் அந்திரிதாஸ் மற்றும் சின்னப்பா, செந்தில் அதிபன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த 2வது கட்ட பேச்சுவார்த்தையின் போதும் திமுக இறங்கி வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மதிமுகவினர் அதிருப்தியடைந்தனர். இதனால், திமுகவுடனான பேச்சுவார்த்தையில் முரண்பிடித்து வந்தது மதிமுக.

விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட போதும், மதிமுக இப்படி வீம்பு பிடிப்பது கட்டாயம் இரட்டை இலக்க தொகுதிகளை பெறுவதற்காகத்தான் என தொண்டர்களும், அரசியல் நோக்கர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அனைத்து எதிர்பார்ப்புகளை புஷ்வானம் ஆக்கும்படி, திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை வைகோ பெற்றுக் கொண்டார்.

சரி, சக கூட்டணி கட்சிகள் கொடுத்ததை பெற்றுக் கொண்ட அழுத்தத்தினால், வைகோவும் அதையே செய்துவிட்டார் என மனதை திடப்படுத்திக் கொள்ளலாம் என நினைக்கும் தொண்டர்களுக்கு, தாங்க முடியாத இடியை இறக்கியுள்ளார் வைகோ.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கொடுத்த நெருக்கடியை இலாவகமாக எதிர்கொண்டு, தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் எனக் கூறி முன்பே உடன்பாட்டை முடித்துக் கொண்டது விடுதலை சிறுத்தைகள். ஆனால், கடந்த இரு தினங்களாக தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டு, பம்பரம் சின்னத்தை ஒதுக்கி விட்டு, உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட ஒப்புக் கொண்டது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 20

0

0