நேற்று வந்தவருக்கெல்லாம் பதவியா..? திமுக தலைமைக்கு எதிராக பொங்கும் சிறுபான்மையினர் அணி..!

22 January 2021, 3:46 pm
RMM_Joseph_Stalin_Joins_DMK_UpdateNews360
Quick Share

ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ஒரு வாரத்திற்கு முன்பு கட்சியில் சேர்ந்த ஜோசப் ஸ்டாலினுக்கு மாநில அளவிலான பதவியை வழங்கியதற்காக திமுக சிறுபான்மை பிரிவு உறுப்பினர்கள் கட்சித் தலைமைக்கு எதிராக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கடந்த புதன்கிழமை திமுகவின் சிறுபான்மை நல உரிமைகள் பிரிவின் இணை செயலாளராக ஜோசப் ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

கடந்த ஞாற்றுக்கிழமை கட்சியில் இணைந்த ஜோசப் ஸ்டாலினுக்கு மூன்றே நாட்களில் மாநில அளவில் முக்கிய பதவியை வழங்கியுள்ளது, திமுகவின் சிறுபான்மை உறுப்பினர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பேசிய சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த திமுகவின் தலைமையக சொற்பொழிவாளர்களில் ஒருவர், “திமுகவில் எந்தவொரு பிரிவிலும் மாநில அளவிலான பதவிகளைப் பெறுவதற்கு ஒருவர் மாவட்ட செயலாளரின் பரிந்துரையையும் ஒப்புதலையும் பெற வேண்டும். வழக்கமாக, மாவட்ட செயலாளர்கள் யாருக்கும் எளிதில் தங்கள் ஒப்புதலை வழங்குவதில்லை. ஏனெனில் அவர்கள் சீனியாரிட்டி மற்றும் நேர்மை போன்ற பல்வேறு அளவுகோல்களைக் கருதுவார்கள். என் விஷயத்தில், நான் கடந்த இருபது ஆண்டுகளாக கட்சிக்கு சேவை செய்து வந்தாலும், சிறுபான்மை பிரிவில் மாவட்ட அளவிலான பதவிகளைப் பெறவில்லை.

இந்த தலைமையக சொற்பொழிவாளர்களின் அங்கீகாரம் கூட பல வருட உழைப்புக்குப் பிறகு எனக்கு வழங்கப்பட்டது. ஆனால் கட்சியில் எத்தனை பிரிவுகள் மற்றும் மாவட்ட அலகுகள் செயல்படுகின்றன என்று தெரியாவிட்டாலும் அவருக்கு இந்த மதிப்புமிக்க மாநில அளவிலான பதவி வழங்கப்பட்டத நிச்சயமாக மூத்த உறுப்பினர்களை பாதிக்கும்.” என்று அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 

வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவின் தொழிற்சங்க செயலாளர்களில் ஒருவர், “முன்னதாக, தேனியைச் சேர்ந்த தங்க தமிழ் செல்வன், கரூரின் செந்தில் பாலாஜி, புதுக்கோட்டையின் பி.டி.அரசகுமார் மற்றும் பரணி கார்த்திகேயன் ஆகியோருக்கு பல்வேறு மதிப்புமிக்க பதவிகள் வழங்கப்பட்டன. அவர்கள் முன்பு இருந்த கட்சியில் அவர்கள் தங்கள் திறமையை நிரூபித்ததால் குறைந்தபட்சம் அதை நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ரஜினி மக்கள் மன்றம் ஒரு அரசியல் கட்சி அல்ல. இது ஒரு ரசிகர் மன்றம் மட்டுமே.

ஒரு ரசிகர் மன்றத்தின் முன்னாள் மாவட்ட செயலாளருக்கு மாநில அளவிலான பதவியை வழங்குவது மிக அதிகம். புதியவர்களுக்கு இந்த வகையான பதவிகளை வழங்குவதன் மூலம் அவர்கள் பதவிக்கு உண்டான கவுரவத்தை இழிவுபடுத்துகிறார்கள்.” எனக் கூறினார். 

ரஜினி கட்சி தொடங்குவது கானல் நீராகிப் போனதால் தற்போது ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து பலர் பல்வேறு கட்சிகளுக்கும் தாவி வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து வரும் நபர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படும் என்பதை வெளிப்படுத்த ஜோசப் ஸ்டாலினுக்கு முக்கிய பதவியை திமுக வழங்கியுள்ளது. இதன் மூலம் வரும் நாட்களில், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து அதிக நபர்களை தங்கள் பக்கம் ஈர்க்க முடியும் என திமுக எதிர்பார்க்கிறது.

ஆனால், அரசியல் அனுபவமே இல்லாதவர்களுக்கு மாநில அளவிலான பதவிகளை வாரி வழங்குவது, கட்சிக்காக நீண்ட காலம் உழைத்தவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருவதால், திமுகவிற்கு இது தேர்தல் சமயத்தில் பின்னடைவை ஏற்படுத்தி விடுமோ என மூத்த தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Views: - 0

0

0