திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை : சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

28 September 2020, 1:21 pm
dmk gutka - updatenews360
Quick Share

சென்னை : சட்டப்பேரவைக்கு தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் குட்கா பொருட்களை கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக, உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசுக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தடை செய்யப்பட்ட குட்காவை கொண்டு சென்றதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 21 எம்.எல்.ஏ.க்கள் மீது உரிமை மீறல் குழு நோட்டீஸை அனுப்பியது. இதையடுத்து, நோட்டீஸை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது, தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் ஜெ.அன்பழகன், கே.பி.பி. சாமி ஆகியோர் உயிரிழந்து விட்டனர். கு.க. செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உரிமை மீறல் குழு அனுப்பியுள்ள நோட்டீஸில் பிழை இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், புதிய நோட்டீஸ் அனுப்பலாம், என உத்தரவிட்டிருந்தனர்.

Madras_High_Court_UpdateNews360

அதன்படி, கடந்த 7ம் தேதி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான உரிமை மீறல் குழு, தி.மு.க.வின் 18 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் நோட்டீஸை அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து 2வது முறையாக ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு தாக்கல் செய்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவை இன்று பிறப்பிக்கப்படும் என்றும் நேற்று தெரிவித்திருந்தது.

அதனடிப்படையில், மு.க. ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேருக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் அக்.,28ம் தேதிக்குள் இந்த மனு தொடர்பாக சபாநாயகர், சட்டப்பேரவை செயலர் மற்றும் உரிமைக்குழுவும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை எதிர்த்து உரிமைக்குழு தலைவர், சட்டப்பேரவை செயலாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மேல்முறையீட்டு மனுவில், ” குட்கா பொருட்களை பேரவைக்குள் எடுத்து வந்தது உரிமை மீறலா..? இல்லையா..? என்பது குறித்து உரிமைக்குழு தீர்மானிக்கும்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.