கமிஷன் தராததால் ஆத்திரம்.. அரசு அதிகாரியை தாக்கிய திமுக எம்எல்ஏ : சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த நடவடிக்கை எடுங்க… அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!

Author: Babu Lakshmanan
28 January 2022, 12:36 pm
Quick Share

சென்னை மாநகராட்சி பொறியாளரை திமுக எம்எல்ஏ தாக்கிய நிலையில், தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் கேபிபி சாமியின் சகோதரரான கேபி சங்கர், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் சீமானை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனையடுத்து, அப்பகுதியில் தொடர்ந்து ரவுடிசம், மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து வந்ததாக தொடர் புகார்கள் எழுந்தது. இவரது செயல்பாடுகள் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திருவொற்றியூர் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. இந்தப் பணியில் தனக்கு கமிஷன் தொகை ஏதும் தரவில்லை என்ற ஆத்திரத்தில் திமுக எம்எல்ஏ கேபி சங்கர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், சாலை அமைக்கும் இடத்திற்கு சென்ற அவர் சென்னை மாநகராட்சி உதவி பொறியாளரை தாக்கியதாகவும், சாலை அமைக்கும் கருவிகளை சூறையாடியதாகவும் கூறப்படுகிறது. மேலும், சாலை அமைக்கும் பணியை செய்ய விடாமல், அதற்காக வரவழைக்கப்பட்ட தார் – ஜல்லி கலவையையும் திருப்பி அராஜகம் செய்ததாக சொல்லப்படுகிறது.

பின்னர், இது தொடர்பான தகவல் திமுகவின் மேலிடத்திற்கு சென்றதால், அவரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனிடையே, திருவொற்றியூரில் மாநகராட்சி பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ மீது புகார் அளிக்க தயங்குவது ஏன்..? என்று சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “சென்னை திருவொற்றியூரில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சிப் பொறியாளரை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கரும், அவரது ஆதரவாளர்களும் தாக்கியுள்ளனர். 13 லாரிகளில் வந்த தார்-ஜல்லிக் கலவையையும் திருப்பி அனுப்பியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது!

Anbumani 02 updatenews360

சென்னை மாநகராட்சி பொறியாளர் உள்ளிட்ட பணியாளர்களை தாக்கியதும், சாலை அமைக்கும் கருவிகளை சூறையாடியதும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்கள். ஒரு மக்கள் பிரதிநிதியே இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்க மாநகராட்சி தயங்குவது ஏன்?

தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இதேபோன்ற செயல்கள் தமிழகம் முழுவதும் அதிகரித்து விடும். உடனடியாக மாநகராட்சியிடம் புகார் பெற்று திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!,” என தெரிவித்துள்ளார்.

சாலைப் பணி அமைப்பதற்காக கமிஷன் வழங்காததால் அரசு அதிகாரியை திமுக எம்எல்ஏ தாக்கிய சம்பவம், பிற அதிகாரிகளிடையே அதிருப்தியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1579

0

0