திமுக கூட்டணியில் விரிசலா…? கம்யூனிஸ்ட்டை பொளந்து கட்டிய ஆ.ராசா… அதிர்ச்சியில் ஸ்டாலின்!!

Author: Babu Lakshmanan
7 December 2021, 6:10 pm
rasa - CPI - updatenews360
Quick Share

திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா தனது பேச்சில் அதிரடி காட்டுவது வழக்கம். மிக அண்மையில் சென்னையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் மார்க்சிஸ்ட் கட்சியினரை அவர் தனது பேச்சால் கடுமையாக போட்டுத் தாக்கினார்.

பெரியாரை மறந்த கம்யூ.,

அது தனிப்பட்ட முறையில் கம்யூனிஸ்டுகள் மீது அவர் கொண்டிருக்கும் மதிப்பீடா?… அல்லது எதார்த்தத்தைதான் பேசி இருக்கிறாரா?… என்பதெல்லாம் விவாதத்துக்குரிய விஷயங்கள்.

அதேநேரம் தற்போது வரை திமுக கூட்டணியில் உள்ள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை
ஆ ராசா வறுத்தெடுத்ததுதான் இதில் சுவாரஸ்யமான விஷயம். அதுதான் தற்போது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படும் சூடான விஷயமாகவும் உள்ளது.

periyar memorial day - updatenews360

அவருடைய பேச்சின் சாராம்சம் இதுதான்:

“இந்தியாவின் மீது பூசப்பட்டு வரும் காவி நிறத்தால் ஆபத்து சூழ்ந்துள்ளது. அதை தடுக்க கூடிய ஒரே மருந்து பெரியார் கொள்கைகள்தான். இதை நாட்டுக்கு சொல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அம்பேத்கரையும் சொல்லலாம். ஆனால் அம்பேத்கர் ஏன் இஸ்லாத்துக்கு போகவில்லை…ஏன் கிறிஸ்தவத்திற்கு செல்லவில்லை? இந்த நாட்டில் தோன்றிய ஒரு மதமான இந்து மதத்திற்கு நெருக்கமான பௌத்தத்தைதானே அவர் ஏற்றுக் கொண்டார் என்கிற அளவிற்கு இந்துத்துவா வாதிகள் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.

மார்க்சிய பார்வையில் பெரியாரைப் பார்க்க தவறியதால்தான் இன்று இந்தியாவில் மார்க்சியம் அழிந்து வருகிறது.

மன்னிப்பு கேட்டார்கள்

நேருவும், இந்திரா காந்தியும் பிரதமர்களாக இருந்தபோது, கம்யூனிஸ்டுகள் என்றால் பயந்தார்கள். ஆனால் இன்று  கம்யூனிஸ்டுகளின் நிலை பரிதாபகரமாக மாறிவிட்டது. ஒரு காலத்தில் 70 எம்பிக்கள் இருந்த நிலை மாறி இப்போது 7 எம்பிக்கள் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்திய கவர்னர் ஜெனரல் சபையின் சட்ட உறுப்பினர்களில் ஒருவரும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்தவருமான சி.பி.ராமசாமியிடம் இந்தியாவில் கம்யூனிஸ்ட் வளருமா? என கேட்கப்பட்டது. அப்போது, “இந்துமதம் இங்கே இருக்கும் வரைக்கும், அரையடி சாமி சிலை இருக்கும் வரைக்கும், கம்யூனிசம் இங்கே வளராது” என்று அவர் பதில் கூறியுள்ளார்.

2ஜி வழக்கின்போது சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத் ஆகியோரிடம் இதில் தவறு எதுவும் நடக்கவில்லை. சற்று நிதானமாக படித்துப் பாருங்கள் என்று நான் கூறினேன். அப்போது அவர்கள் என் பேச்சை கேட்கவில்லை, பாஜகவினருடன் சேர்ந்துகொண்டு எனக்கு எதிராக பிரச்சினை செய்தார்கள். பிறகு ஒருமுறை கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக அவர்கள் சென்னை வந்திருந்தார்கள்.

அப்போது என்னிடம் வழக்கு எப்படி செல்கிறது என்று கேட்டார்கள். பாஜகவினரை மன்னிக்கலாம், காங்கிரஸ் காரர்களையும் மன்னிக்கலாம், கம்யூனிஸ்டுகளை எப்படி மன்னிக்க முடியும்? என்று கேட்டேன். பின்னர் நான் விடுதலையான பிறகு நாங்கள் செய்தது தவறுதான் எங்களை மன்னித்து விடுங்கள் என்று என்னிடம் அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்” என்று கொந்தளித்தார்.

ஆதங்கம்

ஆ ராசாவின் இந்த பேச்சு மூலம் அவர் அகில இந்திய அளவில் கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையை கடுமையாக சாடி இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

2ஜி வழக்கு விவகாரத்தில் தன்னை மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைமை, கைவிட்டு விட்டதாகவும் அவர் கருதுகிறார். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மார்க்சிஸ்ட் தலைவர்கள் கேட்கவில்லையே என்கிற ஆதங்கம் இன்றும் அவரிடம் உள்ளது.

ஆனால், அரசியல் பார்வையாளர்களோ மாநிலத்தில் உள்ள இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதுள்ள கோபமும் ஆ ராசாவின் பேச்சில் வெளிப்படுகிறது என்கின்றனர்.

திமுகவுக்கு நெருக்கடி

இதுபற்றி அவர்கள் கூறும்போது, “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சில மாதங்கள் வரை இந்திய கம்யூனிஸ்ட்டும் மார்க்சிஸ்ட்டும் அரசின் குறைபாடுகள் பற்றி அவ்வளவாக பேசவில்லை.
ஆனால் தற்போது வெளிப்படையாகவே, குறைபாடுகளை வெளிச்சம் போட்டு காட்டுவதுடன் நெருக்கடி அளிக்கும் விதமாக முக்கிய கோரிக்கைகளையும் வைக்கின்றனர்.

குறிப்பாக போக்குவரத்து துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தாதது குறித்து, தங்களின் மூலம் தொழிற்சங்கங்கள் அவ்வப்போது கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

சில வாரங்களுக்கு முன்பு சென்னை பெரம்பூர் பணிமனையில், சிஐடியூ தொழிற்சங்கத்தினர் திமுக ஆட்சி பற்றி நோட்டீஸ் போர்டில் எழுதிப் போட்ட வஞ்சப்புகழ்ச்சி வாசகங்கள் திமுகவின் தலைமையை முகம் சுளிக்க வைத்தது.

சாதாரண அரசு டவுன் பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களை நடத்துனரும், ஓட்டுனரும் அவமரியாதையாக நடத்தினால் அவர்களை முறத்தால் அடித்து விரட்டுங்கள் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சை அரசு பணிமனையில் சிஐடியூ தொழிற்சங்கத்தினரும் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, திமுக அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.

கூட்டணி முறிவா..?

மழை, வெள்ளத்தால் சேதம் அடைந்த விவசாயிகளின் பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயும், வெள்ள நிவாரண நிதியாக ஐந்தாயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தற்போது திமுக அரசை வலியுறுத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மழை, வெள்ளத்தின்போது திமுக தலைவர் ஸ்டாலின் இதே கோரிக்கையை வைத்தார், என்பதும் இங்கே நினைவுகூரத்தக்கது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது, தங்களுக்கு போதிய அளவில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்பதை திமுக தலைமையிடம் அவர்கள் நேரடியாகவே சுட்டிக் காட்டியுள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூரில் தொழிற் பூங்கா அமைக்க, 3800 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதில் சுமார் 2000 ஏக்கர் விளைநிலம் என்பதால் தற்போது மார்க்சிஸ்ட் கட்சியினரும் இப் பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர்.

Cm stalin -Updatenews360

இது, சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டத்துக்கு திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் அதிமுக ஆட்சி காலத்தில் நடத்திய போராட்டங்கள் போல விஸ்வரூபம் எடுக்கும் வாய்ப்பும் உள்ளது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் திமுகவிடமிருந்து தேர்தல் நிதியாக 25 கோடி ரூபாய் பெற்றுள்ளன. அப்படி இருந்தும் கூட மார்க்சிஸ்ட் வெளிப்படையாகவே திமுக ஆட்சியை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.

விரைவில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிடமிருந்து அதிக வார்டுகளை கம்யூனிஸ்டுகள் எதிர்பார்க்கக் கூடாது என்பதற்காகவும் ஆ.ராசா இப்படி பேசி இருக்கலாம் என்கிறார்கள்.

50 ஆண்டுகளுக்கு முன்பு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் 70 எம்பிக்கள் இருந்தனர் என்பது உண்மைதான். தற்போது நாடாளுமன்ற மக்களவையில் 5, மேலவையில் 7 என இரு கம்யூனிஸ்ட்களுக்கும் மொத்தமே 12 எம்பிக்கள்தான் உள்ளனர்.

ஒருவேளை, தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 4 கம்யூனிஸ்ட் எம்பிக்களையும் கழித்துவிட்டால், ஆ ராசா சொன்ன 7 என்கிற எண்ணிக்கை ஓரளவிற்கு பொருந்திப் போகிறது. தமிழக கம்யூனிஸ்ட் எம்பிக்கள் நால்வரும், திமுக கூட்டணி ஆதரவுடன் வெற்றி பெற்றவர்கள் என்பதால் அவர் அப்படி கூறியிருப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

மேலும் திமுக தலைமையின் அனுமதியின்றி அவர் இப்படி பேசியிருக்க வாய்ப்பில்லை என்கின்றனர்.

எப்படிப் பார்த்தாலும் திமுக- மார்க்சிஸ்ட் இடையே ஏதோ ஒரு விரிசல் உருவாகி இருப்பது மட்டும் நன்றாக தெரிகிறது” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 294

0

0