எம்.பி.க்கே இந்த நிலைமையா..? சமூகநீதி சர்ச்சையில் சிக்கிய திமுக அமைச்சர் KKSSR… அமைச்சருக்கு எதிராக வெடித்த முழக்கம்!!!

Author: Babu Lakshmanan
26 September 2022, 4:49 pm
Quick Share

திமுக அரசின் அமைச்சர்களில் சிலர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் விதமாக ஏதாவது ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டு அதற்காக எதிர்கட்சிகளிடமும், பொதுமக்களிடமும் கடும் விமர்சனத்தை எதிர்கொள்வது வழக்கமான ஒன்றாகி விட்டது.

சர்ச்சை

அந்த வகையில் 2 மாதங்களுக்கு முன்பு பொதுவெளியில் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தற்போது மீண்டும் ஒரு முறை சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

தனது கட்சி எம்பி ஒருவர் அமைச்சரை அவருடைய இல்லத்தில் சந்திக்க சென்றபோது அவரை உட்கார கூட சொல்லாமல் 10 நிமிடங்கள் வரை நிற்க வைத்தே பேசியிருக்கிறார். அதுவும் கால் மேல் கால் போட்டு கொண்டு!இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதில் வேதனையான ஒரு விஷயம் என்னவென்றால் அந்த எம்பி பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்பதுதான்.

இதனுடன் கூடுதலாக இன்னொரு தகவலும் உண்டு. குறவர் என்ற இனத்தின் பெயரை பிற சமூகத்தினரின் பெயரோடு இணைத்து பயன்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜபாளையத்தில் தொடர் உண்ணாவிரத
போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வன வேங்கைகள் கட்சியின் நிறுவன தலைவர் இரணியன் இரண்டு நாட்களுக்கு முன் தனது கட்சி நிர்வாகிகள் சிலருடன், சென்னையில் உள்ள அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் இல்லத்தில்
சந்தித்து மனு கொடுக்க சென்றபோது அவர்களை அமைச்சர் அவமரியாதை செய்தார் என்று கூறப்படுவதுதான், அது.

இந்த நேரத்தில் அங்கு வந்த தென்காசி நாடாளுமன்ற தனித் தொகுதி எம்பியான தனுஷ் குமாரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு உள்ளே போனபோது அவரும் அவமதிப்புக்கு உள்ளானதாக பேசப்படுகிறது.

இத்தனைக்கும் ராஜபாளையம் தொகுதி திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன்
முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க வைத்து கோரிக்கைகளை எடுத்துச் சொல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில்தான் வனவேங்கைகள் கட்சியின் நிர்வாகிகள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை சந்திக்க சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தீண்டாமை

தாங்கள் அவமதிக்கப்பட்டது குறித்து வனவேங்கைகள் கட்சியின் தலைவர் இரணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அமைச்சரை சந்திக்க சென்றபோது அவர் வீட்டில் இல்லை வெளியே போயிருக்கிறார் என்று காவல் அதிகாரி எங்களிடம் சொன்னார். அமைச்சரை சந்திப்பதற்காக மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தோம்.
பிறகு நாங்கள் கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததால் வீட்டுக்குள் இருந்த அமைச்சர் தனது வெளி அறைக்கு வந்தார்.

அப்போது முதலமைச்சரை சந்திக்க நீங்கள் ஏற்பாடு செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அதற்கு முதலமைச்சர் என்ன பக்கத்து வீட்டிலா இருக்கிறார் என அவர் கேலியாக கூறினார்.

நாங்கள் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறியதை தொடர்ந்து காலணிகளை கழற்றி விட்டு வாருங்கள் என்று சொன்னார். நாங்கள் எடுத்து சென்ற சால்வையையும் அணிவிக்க அவர் அனுமதிக்கவில்லை. கோரிக்கைகளை முழுதாக படித்துப் பார்க்காமலே இதெல்லாம் ஒரு கோரிக்கையா? என்றும் கேட்டார். அங்கே நிறைய நாற்காலிகள் இருந்தன. ஆனால் யாரையும் உட்காரும்படி அமைச்சர் சொல்லவில்லை. தவிர கால்மேல் கால் போட்டுக்கொண்டுதான் பேசினார். ஒருவாரம் நாங்கள் உண்ணாவிரதம் இருந்தோம். ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்ட நிலையில்தான் மிகுந்த சோர்வுடன் நான் அமைச்சரையே பார்க்க சென்றேன். அப்போது எனக்கிருந்த உடல் வலியை விட இந்த தீண்டாமை கொடுமை மிகவும் வேதனை தருவதாக இருந்தது” என்று மனம் குமுறினார்.

இந்த செய்தியை அறிந்த வனவேங்கைகள் கட்சியினர் உடனடியாக ராஜபாளையத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை கண்டித்து சாலை மறியலில் குதித்தனர். திண்டுக்கல், திருப்பூர், கோவை, சிவகங்கை, சென்னை, ஸ்ரீவில்லிபுத்தூர், தேனி போன்ற நகரங்களில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், திமுகவின் பட்டியலின எம்பி ஒருவரையும், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளையும் அவமதித்ததாக கூறப்படுவது திமுகவின் சமூக நீதி, திராவிட மாடல் ஆட்சி பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

திராவிட மாடல் தீண்டாமை!

குறிப்பாக நெட்டிசன்கள் இதனால் கொந்தளித்துப் போய் உள்ளனர்.

“திரு. திமுக ஆ. ராசா அவர்களே, இந்த பாதிக்கப்பட்டவரின் குமுறலை கேட்டபின் அமைச்சர் திரு.கேகேஎஸ்எஸ்ஆர் மேல் நடவடிக்கை வேண்டுமென குரல் கொடுப்பீர்களா?… இல்லை இதையும் மனு’தர்ம’ கணக்கில் எழுதுவீர்களா? தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு! சாத்தூர் ராமச்சந்திரன் திராவிட மாடல் தீண்டாமை!” என்று அந்த நெட்டிசன்கள் காட்டமாக பதிவிட்டு உள்ளனர்.

இன்னும் சிலர் “பட்டியலினத்தவர் என்பதால் தென்காசிMP தனுஷ்குமாரை நிற்க வைத்து பேசி அனுப்பிய அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்!!

ஆதரவற்ற குறவர் இன மக்களை துரத்தியடிக்கும் திமுக ஆட்சி” என்றும் ஆவேசப்பட்டுள்ளனர்.

பெரும் தலைவலி

“சில மாதங்களுக்கு முன்பு போக்குவரத்துத்துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் இருந்தபோது தனது இலாகாவை சேர்ந்த பட்டியலின அதிகாரி ஒருவரின் சாதியை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக கூறப்பட்ட விவகாரம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு ஞாபகத்தில் இல்லை போலிருக்கிறது. தற்போது இந்த பிரச்னை தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தின் தீவிர விசாரணையில் இருக்கிறது. இதனால் ராஜ கண்ணப்பனின் அமைச்சர் பதவிக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற நிலையில் சாத்தூர் ராமச்சந்திரன் மீதான குற்றச்சாட்டும் வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் விருதுநகர் பாலவநத்தத்தில் தனது தாயாருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரி கலாவதி என்ற பெண் மனு கொடுக்க வந்தபோது அந்த மனுவை வாங்கி படித்துபார்த்துவிட்டு அவருடைய தலையிலேயே இரண்டு முறை அடித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பரபரப்பை ஏற்படுத்தினார். பொது வெளியில் அவர் இதுபோல அநாகரீகமாக நடந்து கொண்டது தொடர்பான வீடியோ ஊடகங்களில் வைரலாகி கடும் விமர்சனத்திற்கும் உள்ளானது.

இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனமும் தெரிவித்தனர். திமுக அரசின் அமைச்சர்கள், அதிகாரிகளை சாதிப் பெயர் சொல்லித் திட்டுவதும், மனு கொடுக்க வந்தவர்களை தலையில் அடிப்பதும்தான் திராவிட மாடல் ஆட்சியா? என்று கேள்வியும் எழுப்பினர்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதற்குள் கலாவதி செய்தியாளர்களிடம் “அமைச்சர் எங்கள் உறவினர்தான். அதனால் உரிமையோடு செல்லமாகத்தான் என் தலையில் தட்டினார். உனக்கு உதவி செய்யாம யாருக்கு செய்வேனுதான் சொன்னாரு”
என்று கூறியதால், அந்த நேரத்தில் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு ஏற்படவிருந்த பெரும் தலைகுனிவு தடுக்கப்பட்டது.

CM Stalin - Updatenews360

அப்போது அமைச்சர் ராமச்சந்திரன் நடந்ததுபற்றி கூறுகையில் “வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் என்னைச் சந்தித்த கலாவதி எனக்கு உறவினர் பெண். பொதுவாக அனைவரிடமும் அமைச்சர் என்று இல்லாமல் அவர்களுக்குள் ஒருவராக பழகுவது எனது இயல்பு. அந்த உரிமையில்தான் அவர் கொடுத்த மனுவை வைத்தே கலாவதியை உரிமையோடு தலையில் தட்டி அமைதிப்படுத்தினேன்” என்று விளக்கம் அளித்து தப்பித்துக் கொண்டார்.

என்னதான் சொந்தமாகவே இருந்தாலும் கூட தன் கோரிக்கையை மக்களில் ஒருவராக கூற வந்த பெண்ணுக்கு அமைச்சர் சொல்ல வேண்டியது சரியான பதில் தான். அதைத் தாண்டி, மனுவால் மென்மையாக அடித்தேன், சொந்தம் என்பதால் அடித்தேன் என்று சொல்வதெல்லாம் ஏற்கக் கூடியது அல்ல என்று அப்போது அமைச்சர் மீது விமர்சனமும் எழுந்தது.

ஆனால் இப்போது பட்டியலின எம்பியை உட்காரச் சொல்லாமல் அவர் நிற்க வைத்து பேசியதும், குறவர் வகுப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மனது புண்படும் படியாக சாதிய வன்மத்துடன் நடந்துகொண்டதாக கூறப்படுவதும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளாக சமூக ஊடகங்களில் வெளியாகி இருப்பதால் அரசியல் கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது. இது எதில் போய் முடியும் என்பதை கணிப்பதும் கடினம்தான்.

ஏனென்றால் முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி திமுக எம்பியுமான ஆ ராசா இந்துக்கள் பற்றி அவதூறாக பேசிய விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதேபோல தாம்பரம் தொகுதி திமுக எம்எல்ஏ எஸ் ஆர் ராஜா தனியார் நிறுவன அதிகாரிகளை மிரட்டியதும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில்தான் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தனது கட்சியை சேர்ந்த பட்டியலின எம்பி தனுஷ் குமாரை உட்காரச் சொல்லாமல் நிற்க வைத்துப் பேசியது இதுதான் திமுகவின் சமூகநீதியா? என்று எதிர்க்கட்சிகள் கிண்டலாக கேள்வி கேட்கும் அளவிற்கு நிலைமையை உருவாக்கி விட்டது.

இதுபோல திமுக அமைச்சர்களும், எம்பிக்களும் ஏதாவது ஒரு பிரச்னையை தெரிந்தோ தெரியாமலோ கையிலெடுப்பது, முதலமைச்சர் ஸ்டாலினுக்குதான் பெரும் தலைவலியை கொடுக்கும். இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து திமுகவை விடுவிப்பதற்கே அவருக்கு நேரம் சரியாகப் போய்விடும்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Views: - 578

0

0