அந்நிய முதலீடு மோசடியால் ரூ.89 கோடி பறிமுதல் : ஜெகத்ரட்சகன் மீது திமுக நடவடிக்கை எடுக்குமா..? அல்லது கடந்து செல்லுமா..? அறப்போர் இயக்கம் கேள்வி

15 September 2020, 12:14 pm
Quick Share

சென்னை : அந்நிய முதலீடு மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீது அக்கட்சியின் தலைமை நடவடிக்கை எடுக்குமா..? என்ற கேள்வி எழுந்து வருகிறது.

2017 ஜூன், 15ல் இருந்து, சிங்கப்பூர் கம்பெனியுடன், இந்திய ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு எதிராக, சட்ட விரோதமாக பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு, அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக, ஜெகத்ரட்சகன்; அவரது மகன் சந்தீப் ஆனந்த் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

‘பெமா’ என்ற, அந்நிய செலாவணி மோசடி தடுப்பு சட்டத்தில் உள்ள, அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழகத்தில், ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான, விவசாய நிலம், காலி மனை, வீடு என 89.19 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்தனர். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை திமுக தலைவர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மனைவி பெயரில் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு கம்பெனி, இலங்கையில், 27 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனால், விரைவில் இவர்கள் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், கட்சியின் தேர்தல் செலவில் பெரும் தொகையை வழங்கும் ஜெகத்ரட்சகன் தற்போது அமலாக்கத்துறையினரின் பிடியில் சிக்கியிருப்பதால், அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, மேடை கிடைத்த போதெல்லாம், ஆளும் கட்சியின் மீதே ஊழல் குற்றச்சாட்டு வைத்து வந்த தி.மு.க., தற்போது என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகளை போட்டு வரும் அறப்போர் இயக்கம் தி.மு.க.வினருக்கு சில கேள்விகளை முன்வைத்துள்ளது. அதில், “தினமும் அதிமுக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லிக்கொண்டு இருக்கும் திமுக தனது கட்சி எம்பி மீது சுமத்தப்பட்டுள்ள அந்நிய செலாவணி குற்றச்சாட்டு பற்றி என்ன பதில் சொல்ல போகிறது? வழக்கம் போல பொய் குற்றச்சாட்டு என்று கடந்து போவார்களா? அல்லது கட்சி எம்பி மீது நடவடிக்கை எடுப்பார்களா,” எனக் குறிப்பிட்டுள்ளது.

வழக்கம் போல இது பொய் குற்றச்சாட்டு எனக் கூறிக் கொண்டு அடுத்தகட்ட வேலையை பார்க்கப் புறப்பட்டு விடுமா..? அல்லது ஸ்டாலினின் தலைமையில் உள்ள கட்சியில் இதுபோன்ற குற்றம் சுமத்தப்படும் நிர்வாகிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமா..? என்பது அக்கட்சியினருக்குத்தான் தெரியும்.

Views: - 7

0

0