ஜெகத்ரட்சகனின் ரூ.89 கோடி சொத்து பறிமுதல் : திகிலில் திமுக தலைவர்கள்! கலக்கத்தில் தொண்டர்கள்!

14 September 2020, 4:10 pm
jegathratchagan - dmk - updatenews360
Quick Share

சென்னை: நீட் உள்ளிட்ட பிரச்சினைகளில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கடுமையாகக் குரல் எழுப்புவோம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறிவரும் நிலையில், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கும், அவரது குடும்பத்துக்கும் சொந்தமான ரூ. 89 கோடி மதிப்பினிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது திமுக முக்கிய புள்ளிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

தேர்தல் நேரத்தில் கட்சியின் செலவுகளை கவனித்துக் கொள்ளும் ஜெகத்தை அமலாக்கத்துறை வளைத்திருப்பது தேர்தல் நேரத்தில் நிதிப் பற்றாக்குறையை ஏற்படுத்தி விடுமோ என்ற கலக்கத்தையும் கட்சியினர் மத்தியில் உருவாக்கியுள்ளது. இனி பாஜகவை எதிர்த்து ஜெகத்ரட்சகன் வாயைத் திறப்பாரா, தேர்தல் நேரத்தில் திமுகவின் செலவுகளுக்கு பணமூட்டையை அவிழ்ப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரக்கோணம் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன், சிங்கப்பூர் சார்ந்த நிறுவனத்தில் சட்டவிரோதமாக பணத்தை அந்நிய செலவாணிக்கு மாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. வெளிநாட்டு பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் ஜெகத்ரட்சகனின் சொத்துகளை முடக்கி, பெமா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிங்கப்பூர் கம்பெனிக்கு, சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்து, அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, ஜெகத்ரட்சகன், அவரது மகன் சந்தீப் ஆனந்த் ஆகியோர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள், ‘பெமா’ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜெகத்ரட்சகன், சந்தீப் ஆனந்த் ஆகியோர், சிங்கப்பூரில் உள்ள கம்பெனியில், பங்குதாரர்களாக இருப்பது அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதுகுறித்த, விரிவான விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ‘சில்வர் பார்க் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்’ என்ற கம்பெனியில், ஜெகத்ரட்சகனுக்கு, 70 ஆயிரம் பங்குகளும், சந்தீப் ஆனந்திற்கு, 20 ஆயிரம் பங்குகளும் இருப்பதை, அமலாக்கத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

மேலும், இந்த கம்பெனியுடன் இருவரும், சட்ட விரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு, அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதும், அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக, ‘சம்மன்’ அனுப்பி, ஜூலையில் சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், ஆறு மணி நேரத்திற்கும் மேலாக, ஜெகத்ரட்சகனிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதை, ‘வீடியோ’விலும், பதிவு செய்தனர்.

இந்நிலையில், 2017 ஜூன், 15ல் இருந்து, சிங்கப்பூர் கம்பெனியுடன், இந்திய ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு எதிராக, சட்ட விரோதமாக பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு, அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக, ஜெகத்ரட்சகன்; அவரது மகன் சந்தீப் ஆனந்த் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். ‘பெமா’ என்ற, அந்நிய செலாவணி மோசடி தடுப்பு சட்டத்தில் உள்ள, அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழகத்தில், ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான, விவசாய நிலம், காலி மனை, வீடு என 89.19 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நேற்று பறிமுதல் செய்தனர். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை திமுக தலைவர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மனைவி பெயரில் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு கம்பெனி, இலங்கையில், 27 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ஜெகத்ரட்சகன், அவரது மகன் சந்தீப் ஆனந்த் மற்றும் அவர்களது குடும்பத்தார் மீது நில மோசடி, சட்ட விரோத பணப் பரிமாற்றம் என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில், அவர் மீது மத்திய அரசின் பிடி மேலும் இறுகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஜெகத்ரட்சகன் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. திமுக தலைவர்களும் மௌனமாகவே இருக்கிறார்கள். வழக்கமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற குரல்கள் கூட இல்லாமல் கனத்த அமைதி நிலவுகிறது. ஜெகத்ரட்சனுக்கு அடுத்தபடியாக மத்திய அரசின் ‘பிடி’ யார் மீது எப்போது இறுகும் என்ற அச்சம் ஏனைய திமுக தலைவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் ‘மடியில் கனமுள்ள’ மற்ற திமுக தலைவர்களும் பாஜகவுக்கு எதிராகக் குரல் எழுப்பத் துணிவுடன் முன்வருவார்களா என்ற பேச்சு திமுக தொண்டர்களிடையே உருவாக்கியுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு எட்டு மாதங்களே இருக்கும் நிலையில், பாஜகவை எதிர்த்து வலுவாகக் குரல் எழுப்புவதில் திமுக தலைவர்களியே அச்சம் ஏற்படுமா என்ற திகைப்பும் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

Views: - 1

0

0