திமுக எம்.பி.க்கள் விரைவில் கைது! இடைத்தேர்தலுக்கு காத்திருக்கும் தமிழகம்: ஹெச்.ராஜா சூசகம்!!
23 September 2020, 10:31 amதிருப்பூர் : பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கந்த சஷ்டி கவசம் வீடியோவுடன் கூடிய ஆடியோ குறுந்தகட்டை வெளியிட்டார்
திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மற்றும் பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கந்த சஷ்டி கவசம் ஆடியோ மற்றும் வீடியோ உடன் கூடிய குறுந்தகட்டை வெளியிட்டார்.
‘திரௌபதி‘ திரைப்பட இயக்குனர் மோகன் இயக்கத்தில் ஜுபின் இசையில் பாடகர் வேல்முருகன் பாடியுள்ள கந்தசஷ்டிகவசம் 2020 என்ற குறுந்தகடை இருவரும் வெளியிட அதனை திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் ஆம்ஸ்ட்ராங்க் பழனிச்சாமி மற்றும் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் தலைவர் வேலூர் இப்ராஹிம், ராம ரவிக்குமார் , கிஷோர் கே ஸ்வாமி உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். முன்னதாக திருமுருகன்பூண்டி பகுதியில் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தற்போதுள்ள மத்திய அரசு விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் , வேளாண் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து குரல் கொடுத்து வரும் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்காக என்ன செய்தார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனவும் பேசினார்.
இந்தியாவில் உள்ள விவசாயிகள், காங்கிரஸ் திமுகவில் உள்ள போலி விவசாயிகளின் பேச்சை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு விவசாயத்தைப் பற்றி எதுவும் தெரியாத நிலையில் வேளாண் சட்ட மசோதா குறித்து அவர் எவ்வாறு கருத்து சொல்வார் எனவும் கூறினார்.
உளவுத்துறை அதிகாரிகள் என தனக்கு மிரட்டல் விடுத்ததாக கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை பெற்று தான் ஆக வேண்டும் எனவும் இன்னும் 70 நாட்களில் 2ஜி அலைக்கற்றை விசாரணை துவங்க உள்ள சூழலில் தமிழகத்தில் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர இருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பாஜகவின் துணை தலைவர் அண்ணாமலை அவர்களும் உடனிருந்தார்.