தி.மு.க.வில் ஓரங்கட்டப்படும் நா. கார்த்திக் : ஓங்கும் பொங்கலூர் பழனிசாமியின் கை..!
17 August 2020, 4:32 pmகடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் முக்கிய மாவட்டமான கோவையில் மொத்தம் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் வெறும் 1ல் மட்டுமே தி.மு.க. வென்றுள்ளது. எஞ்சிய 9ல் அ.தி.மு.க. வெற்றி, கோவை மாவட்டத்தை தனது எஃகு கோட்டையாக வைத்துள்ளது.
கோவை மாவட்டத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்று தி.மு.க.வும் அவ்வப்போது நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான பகுதிகளையும் அதிகரித்தும், மாற்றியமைத்தும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆனால், இந்த எந்த நடவடிக்கையும் கைகொடுத்தது போல் தெரியவில்லை. காரணம், தி.மு.க. நிர்வாகிகளிடையே எழும் உட்கட்சி பூசல் மற்றும் மோசடி புகார்கள்தான்.
இவையணைத்தையும் சமாளித்து எப்படியாவது 2021 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளலாம் என தி.மு.க. தலைமை முட்டி மோதி வருகிறது. இதற்காக, நிர்வாக வசதிக்காக என்னும் பெயரில் சரியாக களப்பணியாற்றாத நிர்வாகிகளிடம் இருந்து தொகுதிகளை பிரித்து வேறு நபர்களுக்கு தி.மு.க. தலைமை வழங்கி வருவதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில், நேற்று கோவை மாவட்டத்தில் தி.மு.க.வை பலப்படுத்தும் விதமாக, கட்சியின் முதன்மை செயலர் நேரு தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில், கோவை மாவட்டத்தில் இரு புதுமுகங்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் கோவையில் உள்ள ஒரேயொரு தி.மு.க., எம்.எல்.ஏ. நா. கார்த்திக் வசம் இருந்த பகுதிகளை பறித்து, புதுமுகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நா. கார்த்திக் மீதான புகார்கள், அவரது ஒருங்கிணைப்பில்லாத செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எதிர்தரப்பினர் மு.க.ஸ்டாலினிடம் அளித்த புகார்களே இந்த நடவடிக்கைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
கோவை வடக்கு, கோவை தெற்கு, கோவை கிழக்கு, கோவை மாநகர் கிழக்கு, கோவை மாநகர் மேற்கு ஆகிய, மாவட்டங்களில் அடங்கியுள்ள சட்டசபை தொகுதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
கோவை வடக்கு – சி.ஆர்.ராம்சந்திரன், கோவை தெற்கு- தென்றல் செல்வராஜ்.கோவை கிழக்கு – எஸ்.சேனாதிபதி, கோவை மாநகர் கிழக்கு – கார்த்திக் எம்.எல்.ஏ., கோவை மாநகர் மேற்கு – பையா என்ற ஆர்.கிருஷ்ணன் ஆகியோர் புதிதாக அமைந்த மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், சேனாபதியும், பையா என்னும் ஆர். கிருஷ்ணன் ஆகியோர் பொங்கலூர் பழனிசாமியின் தீவிர ஆதரவாளர்களாவர். நேருவோ பொங்கலூர் பழனிசாமியின் நெருங்கிய நண்பராவர். எனவே, தனது நண்பருக்கு நெருக்கமானவர்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்கி, கோவை தி.மு.க.வை பொங்கலூர் பழனிசாமியின் கையில் ஒப்படைக்கும் திட்டமிட்டிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
0
0