உதயநிதியால் பறிக்கப்படும் சென்னை தொகுதிகள் : திமுகவில் நெடுநாள் பாடுபட்ட நிர்வாகிகள் அதிர்ச்சி!!

Author: Babu
9 October 2020, 7:31 pm
udhayanidhi 1- updatenews360
Quick Share

சென்னை : திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் மட்டுமே கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் சென்னையின் அனைத்து தொகுதிகளும் 2021 சட்டமன்றத் தேர்தலில் பட்டாப்போட்டுக் கொடுக்கப்படும் என்று தெரியவந்துள்ளதால், நீண்ட நாட்களாக மாநகரில் கட்சியை வளர்க்கப்பாடுபட்டு வரும் நிர்வாகிகள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

திமுக 1949-ல் தொடங்கப்பட்ட நாள்முதல் தொண்டர்களின் உழைப்பினால் சென்னையில் வளர்ச்சிகண்டது. 1957-ஆம் ஆண்டு போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே சென்னையில் கணிசமான வாக்குகளைப் பெற்ற திமுக அடுத்த பத்தாண்டுகளில் கட்சியின் முன்னணித் தலைவர்கள் போட்டியிடும் அளவுக்குப் பாதுகாப்பான இடமாக மாறியது. கட்சியின் பொதுச்செயலாளர் பேரறிஞர் அண்ணாவே தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

Karunanidhi 9 - updatenews360

அண்ணாவுக்குப் பின் திமுகவுக்குத் தலைவரான மு.கருணாநிதியும் சென்னையில் சைதாப்பேட்டை, அண்ணாநகர், துறைமுகம், சேப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் ஒன்றுக்கு இரண்டுமுறை வெற்றிபெற்றார். கட்சியின் முன்னணித் தலைவர்களான க,அன்பழகனும் சென்னையில்தான் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தற்போதைய தலைவர் மு.க. ஸ்டாலினும், சென்னை ஆயிரம்விளக்கு தொடங்கி கொளத்தூர் வரை சென்னையில்தான் போட்டியிடுகிறார்.

அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் 1977-ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தபோதுகூட சென்னையின் பெரும்பாலான தொகுதிகளை திமுக கைப்பற்றியது. பின்னர் ஜெ.ஜெயலலிதா தலைவரான பிறகு சென்னையில் அதிமுக அதிக இடங்களை வெல்லத்தொடங்கிய காலத்திலும், தலைநகரின் பல தொகுதிகள் திமுகவுக்கு சாதமாகவே இருந்தது. பெரும் அலைவீசாத காலங்களைத் தவிர, மற்ற நேரங்களில் திமுக சென்னையில் பல இடங்களில் வெற்றிபெறுவது வழக்கமாக இருந்தது.

AnnaArivalayam

திமுகவைப் பொறுத்தவரை சென்னையில் இருக்கும் சட்டமன்றத் தொகுதிகள் திமுகவுக்குப் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் நீண்ட நாட்களாக கட்சிக்குப் பாடுபட்டுவரும் நிர்வாகிகள் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

பத்தாண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாத சூழ்நிலையில் இந்த முறை சென்னையில் களத்தில் இறங்கி வெற்றிபெறலாம் என்ற கனவோடு அவர்கள் இருந்தனர். ஆனால், தலைநகரில் இருக்கும் பாதுகாப்பான தொகுதிகள் அனைத்தும் ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கே ஒதுக்கப்படும் என்ற உறுதியான தகவல்கள் கசிந்துள்ளதால், நிர்வாகிகள் அனைவரும் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.

stalin-udhayanidhi-updatenews360

தற்போது ஸ்டாலின் வென்றுள்ள கொளத்தூரிலோ அல்லது கருணாநிதி இருமுறை போட்டியிட்டு வென்ற சேப்பாக்கமோ (தற்போது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி) உதயநிதிக்கு ஒதுக்கப்படலாம் என்று கட்சியின் மேல்மட்டத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. உதயநிதி திரைப்பட நடிகர் என்பதால் அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி திமுக வெற்றி பெறுகிறது என்றும், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற அவரே காரணம் என்று கூறப்படும் நிலையில், அவர் எதற்காக சென்னையில் பாதுகாப்பான தொகுதியைக் குறிவைக்கிறார் என்று உடன்பிறப்புகள் கேள்வி எழுப்புகிறார்கள். அவரது சினிமா பிரபலத்தையும், செல்வாக்கையும் வைத்து தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் கொங்கு மாவட்டங்களிலோ, தென்மாவட்டங்களிலோ தேர்தலில் நிற்கலாமே என்று சென்னையில் இருக்கும் நிர்வாகிகள் பேசிக்கொள்கிறார்கள்.

மேலும், உதயநிதியை தீவிரமாக ஆதரிக்கும் சேகர்பாவுக்கு மீண்டும் துறைமுகம் ஒதுக்கப்படும் என்றும், அவரை அடிக்கடி மேடையேற்றி புகழ்ந்து பேசிவரும் மா.சுப்ரமணியனுக்கு சைதாப்பேட்டையும் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. முன்பு துரைமுருகனுக்கு நெருக்கமாக இருந்து, தற்போது உதயநிதியுடன் ஒட்டிக்கொண்டுள்ள தாயகம்கவிக்கு, மீண்டும் திருவிக நகரும் பெரம்பூர் தொகுதி இளைஞர் அணியைச் சேர்ந்த ஆர்.டி.சேகருக்கும், அதே அணியைச் சேர்ந்த பிரபாகர் ராஜாவுக்கு விருகம்பாக்கமும் கிடைக்கும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. ஆயிரம்விளக்கில் இந்தமுறை ஸ்டாலின் களம் இறங்காவிட்டால், உதயநிதியின் பரிந்துரையின்படி ஹசன் அலி ஜின்னாவுக்கு அந்தத் தொகுதி போய்விடும் என்றும் கட்சிக்குள் தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

இதுதவிர மீதமுள்ள திமுக பலம் இல்லாத தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்பதால், கட்சியின் இதர நிர்வாகிகள் நிற்பதற்கு ஒன்றிரண்டு வெற்றிவாய்ப்பில்லாத இடங்களே கிடைக்கும் என்பதால், நொந்து போயிருக்கும் உடன்பிறப்புகள், உதயநிதியும், அவரை ஆதரிப்பவர்களும் நோகாமல் சட்டமன்றம் செல்வதற்குத்தான், இவ்வளவு காலம் சென்னையில் பாடுபட்டு கட்சியைக் காப்பாற்றிவந்தோமா என்று புலம்பிவருகிறார்கள்.

Views: - 47

0

0