மத்திய பாஜக அரசிடம் வேண்டுகோள் வைக்கும் ஸ்டாலின் : பாஜகவுடன் கைகோர்க்க திமுக முயற்சி..?

8 September 2020, 7:48 pm
modi_stalin-kanimozhi - updatenews360
Quick Share

சென்னை: அதிமுக அரசு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய பாஜக அரசு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருப்பது அதிமுக-பாஜக இடையே பிளவு ஏற்பட்டுத்த அவர் முயற்சி செய்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மும்மொழிக் கொள்கையை அதிமுக உறுதியாக எதிர்க்கும் நிலையில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி உடைந்தால் பாஜகவுடன் திமுக கைகோர்க்குமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டின் உரிமைகளை அதிமுக அரசு இழந்துவிட்டதாகக் குற்றம்சாட்டி வந்த திமுக தலைவர் ஸ்டாலின், நேற்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில்தான் ஊழல் ஆட்சி நடைபெறுகிறது என மேடையில் விமர்சனம் செய்த பா.ஜ.க. தலைவர்கள், தேர்தலில் அதே ஊழல் ஆட்சியுடன் கூட்டணி சேர்ந்து கொண்டார்கள் என்று பாஜகவைத் தாக்கியுள்ளார்.

கோட்டை முதல், அமைச்சர்களின் பங்களாக்கள் வரை சோதனை நடத்திய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன..? என்று வினா எழுப்பியுள்ள ஸ்டாலின், “’ஊழலை ஒழிக்க வந்தவர் பிரதமர் மோடி’ எனப் பெருமை பேசிக்கொண்டே, அ.தி.மு.க.,வினரின் ஊழலை மறைத்து, அரசியல் இலாபம் தேடும் போக்கை மேற்கொண்டால் ஊழல் ஒழிந்துவிடுமா?” என்றும் கேட்டுள்ளார்.

Stalin 02 updatenews360

அ.தி.மு.க.,வின் ஊழல்களுக்கு உடந்தையாக இருக்கிறதா பா.ஜ.க.? என்ற கேள்வி, பாமர மக்களின் மனதிலும் எழுகிறது என்றும், அந்தக் கேள்வி அப்படியே நின்று வளரும் தன்மை கொண்டது என்றும், பாஜகவுக்கு அறிவுரை வழங்கியுள்ள திமுக தலைவர், மத்திய அரசு அதிமுகவினர் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தி, நியாயமான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கெனவே, பாஜக அரசின் மும்மொழிக்கொள்கையையும், புதிய கல்விக்கொள்கையையும் அதிமுக அரசு தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்று மாநில அரசுக்கு அறிவுரை கூறி வந்தார். திராவிடக் கொள்கைகளைக் காப்பாற்றாமல் மத்திய அரசுக்கு அதிமுக அரசு அடிபணிந்து கிடப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டி வந்தார். மும்மொழிக்கொள்கையை எதிர்க்கொள்கையை எதிர்க்கிறோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியபோது அதை வரவேற்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

மும்மொழிக்கொள்கையை எதிர்ப்பதாக தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அதிகாரப்பூர்வமாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ள நிலையில், மத்திய அரசின் கோபத்துக்கு அதிமுக அரசு உள்ளாகியிருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள சூழலில், தமிழ்நாடு அரசின் மீது சிபிஐ விசாரணை கோரி ஸ்டாலின் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஒருபக்கம் பாஜக கொள்கைகளை எதிர்க்குமாறு அதிமுகவுக்கு நெருக்கடி தரும் ஸ்டாலின், மறுபக்கம் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது தமிழ்நாட்டு மக்களிடம் மத்திய அரசு மீது எதிர்ப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் கூறிவருகிறார்.

சிபிஐ, வருமான வரித்துறை போன்றவை மாநிலத்தில் இருக்கும் எதிரிகளை ஒடுக்க மத்திய அரசு பயன்படுத்தும் அடக்குமுறைக் கருவிகள் என்று திமுக தலைவர்கள் பலமுறை கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய அரசு, மாநில அரசுகளை அடிமைகளாக நடத்துவதாகவும், மாநிலங்களுக்கு அதிக உரிமையும், சுயாட்சியும் கோரிவரும் கட்சியான திமுக, மத்திய அரசின் ஒடுக்குமுறைக் கருவிகளை மாநில அரசின் மீதி ஏவுமாறு கேட்பது, இதுவரை பேசிவந்த மாநில சுயாட்சிக் கொள்கைகளுக்கு உகந்ததுதானா என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் உதித்துள்ளது.

மாநில அரசு தவறு செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் கருதினால், தமிழ்நாட்டு மக்கள் மன்றத்திடம் உரிய நேரத்தில் அக்குற்றச்சாட்டுகளை எடுத்துச் செல்வதே மக்களாட்சி முறைக்கு சரியானதாக இருக்க முடியும். மக்கள் மன்றத்திடம் செல்வதை விட்டுவிட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பது பாஜகவைப் பயன்படுத்தி அதிமுகவை ஒடுக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாரா என்ற எண்ணத்தை அரசியல் நோக்கர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலினின் கோரிக்கையை பாஜக அரசு ஏற்குமானால், அதிமுகவுடன் பாஜக கூட்டணி முறியும். அத்தகைய சூழலில் பாஜகவுடன் கைகோர்க்க திமுக தயாராக இருக்கிறதா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. 1999-ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுடன் அதிமுக கூட்டணி முறிந்தவுடன், அந்த அரசுக்கு திமுக ஆதரவளித்து ஆட்சியிலும் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது. பாஜகவுடன் கூட்டணி சேரும்வரை அக்கட்சியை மதவாதக்கட்சி என்று திமுகவினர் விமர்சித்து வந்ததும் நினைவுகூரத்தக்கது.

Views: - 9

0

0