அதிமுக கோட்டையில் நெருக்கடி தர முயற்சிக்கும் திமுக… கொங்கு மண்ணில் இலைக்கொடி பறக்குமா?

By: Babu
29 March 2021, 7:41 pm
kongu - updatenews360 (2)
Quick Share

சென்னை: அதிமுக தொடங்கிய 1977-ஆம் ஆண்டு முதல் அந்தக் கட்சியின் கோட்டையாக இருக்கும் கொங்கு மண்டலத்தை இந்த முறை திமுக கூட்டணி முற்றுகையிட்டுள்ளது. இந்த முறை எப்படியும் அதிமுகவின் கோட்டையைப் பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் திமுக கூட்டணித் தலைவர்களின் கூட்டம் சேலத்தில் நடத்தப்பட்டுள்ளது. திமுகவின் கொங்கு முற்றுகை வெல்லுமா அல்லது கொங்குப் பகுதியில் தனது கொடியை அதிமுக மீண்டும் பறக்கவிடுமா என்ற பரபரப்பான சூழலில் இரு கட்சிகளும் பங்குனி வெயிலின் சூட்டையும் மீறும் அனல்பறக்கும் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

அதிமுக தொடங்கிய காலம் முதல் கொங்கு மண்டலம் அதன் கோட்டையாக இருக்கிறது. கடந்த நாற்பதாண்டுகளில் 1989-ஆம் ஆண்டு அதிமுக இரு பிரிவுகளாக பிளவுபட்டபோதும் 1996-ஆம் ஆண்டும் திமுக கொங்குப் பகுதியில் குறிப்பிட்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மீதியுள்ள அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. கடந்த 2016-ஆம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் இருக்கும் 11 தொகுதிகளில் 10 இடங்களை அதிமுக வென்றது.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 இடங்களில் ஒரே ஒரு இடத்தை மட்டும் திமுக வென்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஆறு தொகுதிகளில் ஓரே இடத்தைத்தான் திமுக கைப்பற்றியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் எட்டு தொகுதிகளையும் அதிமுக அள்ளியது. திருப்பூர் மாவட்டத்தில் எட்டு தொகுதிகளில் ஆறில் அதிமுக வெற்றிவாகை சூடியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மட்டும்தான் திமுக மூன்றில் இரண்டு இடங்களில் வென்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் மட்டும் திமுக நான்கு தொகுதிகளில் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளது. மொத்தமுள்ள 50 தொகுதிகளில் 41 தொகுதிகளை அதிமுகவும் 9 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

போன தேர்தலில் தமிழ்நாட்டில் வடக்கு, தெற்கு, கிழக்கு மாவட்டங்களில் சம பலத்துடன் வென்ற திமுக, கொங்கு மண்டலத்தை இழந்ததால் கோட்டையைக் கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது. கொங்கு மண்டலத்தில் ஓரளவு வெற்றி அடைந்திருந்தால் திமுக ஆட்சி அமைத்திருக்கும். எனவே, கொங்கு மண்டலத்தால் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த முறை தென் மாவட்டங்கள் உள்ளிட்ட எல்லாப் பகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக பல கருத்துக் கணிப்புகள் கூறுவதால், கொங்குப் பகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற துடிப்புடன் திமுக களம் இறங்கியுள்ளது.

DMK Stalin -Updatenews360

மேலும், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கொங்குப் பகுதியில் எல்லா இடங்களையும் திமுக கைப்பற்றியது. அந்த முடிவு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளதால், சட்டமன்றத் தேர்தலிலும் அதே போன்ற வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கருதுகிறார்.

வழக்கமாக, திமுக அணியின் தலைவர் கூட்டம் சென்னை அல்லது திருச்சியில் நடைபெறும். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது. கொங்கு மண்டலத்தை திமுக குறி வைப்பதையே தெளிவாக காட்டுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் பிரதமர் மோடியை மீண்டும் வெற்றிபெற வைப்பதா…, இல்லையா…. என்று முடிவு செய்யும் தேர்தலாக இருந்தது. அது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி குறித்து மக்கள் கருத்தை பிரதிபலிக்கவில்லை. மத்திய பாஜக அரசுக்கு எதிராக அலை வீசிய தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் அதிமுக தோல்வி அடைந்தது.

ஆனால், தற்போதை தேர்தல் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி குறித்து மக்கள் தரும் முடிவாக இருப்பதால், பாஜக எதிர்ப்பு முக்கிய அம்சமாக இருக்காது என்று அதிமுக நிர்வாகிகள் கருதுகின்றனர். மாநில அரசுக்கு எதிராக பெரும் எதிர்ப்பு இல்லாத நிலையில், அதிமுகவுக்கு ஓட்டளித்தால் அது பாஜவுக்குப் போடும் ஓட்டு என்றும், சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தால் பாஜகவின் சொற்படி கேட்கும் ஆட்சி அமையும் என்றும், பிரச்சாரத்தில் பாஜக எதிர்ப்பு மனநிலையைப் பயன்படுத்த திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் முயற்சி செய்து வருகின்றன. அதிமுகவுக்கு வாக்களித்தால் டில்லியில் இருந்து பாஜகவே தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் என்று திமுக கூட்டணி பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

ஆனால், பாஜக அதிமுக கூட்டணியில் வெறும் 20 இடங்களில்தான் வேட்பாளரை நிறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் விடுத்த கோரிக்கையை அதிமுக நிராகரித்துள்ளது. மேலும் இந்த முறை அதிமுக வெற்றிபெற்றால் மக்கள் அங்கீகாரத்துடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராவார். மக்கள் அங்கீகாரம் பெற்ற பிறகு டில்லியின் சொல்படி ஆட்சி நடத்த வேண்டிய தேவையிருக்காது என்று அதிமுகவினர் கருதுகின்றனர். இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல் பாஜக ஆட்சி தமிழ்நாட்டில் அமையாது என்று அவர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் போட்டியிடும் அதிமுக முன்னணியினர், பாஜக தலைவர்களுடனும், தொண்டர்களுடனும் இணைத்து பிரச்சாரம் செய்யாமல் தனியாகவே பிரச்சாரம் செயகின்றனர். பாஜகவுக்கு பிரச்சாரத்தில் எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல் பிரதமர் சற்று தொலைவில் அந்தக் கட்சியை வைத்துள்ளதால், பாஜக எதிர்ப்பு அலை எதுவும் இருந்தாலும் இந்த தேர்தலில் அதிமுகவை பாதிக்காது என்ற நம்பிக்கையில் அதிமுகவினர் இருக்கின்றார்கள்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலில் பரப்பளவு பெரியது என்பதால் தனி நபர் செல்வாக்கு வெற்றி தோல்வியை முடிவு செய்யாது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கொங்கு மாவட்டத்தில் போட்டியிடும்போது திமுக வெற்றிபெறுவது கடினமானது என்றே கருதப்படுகிறது. அமைச்சர்கள் எஸ் வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் ஆகியவர்கள் கொங்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் செல்வாக்கு கொங்கு பகுதியில் பல இடங்களில் அதிமுகவின் செல்வாக்கை தூக்கி நிறுத்துகிறது.

இந்த மண்டலத்தில் மக்கள் தொகையில் கணிசமாக இருக்கும் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவராக முதல்வர் இருக்கிறார். மேலும், அவரது அமைச்சரவையில் இதே சமூகத்தைச் சேர்ந்த பல அமைச்சர்கள் முதலமைச்சருக்கு நெருக்கமாகவும் செல்வாக்குடனும் இருக்கின்றார்கள். கவுண்டர் சமுதாய வாக்குகளை பெற திமுக கூட்டணியில் திருச்செங்கோடு, சூலூர், பெருந்துறை ஆகிய இடங்கள் கொங்கு மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், திருச்செங்கோட்டில் போட்டியிடும் கொ.ம.தே க, தலைவர் ஈஸ்வரன் மட்டுமே வெற்றிபெறும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஏனைய இரண்டு இடங்களிலும் கடுமையான போட்டியை அந்தக் கட்சி சந்திக்கிறது. திமுக அணியில் சில இடங்களில் போட்டியிடும் கொ.ம.தே.க.வை ஆதரிப்பதைவிட, கவுண்டர் சமூகத்தவர் செல்வாக்காக இருக்கும் ஆளுங்கட்சியை ஆதரிக்கும் மனநிலையில் அந்த சமூகத்தவர் இருக்கின்றனர்.

admk

மேலும், திமுகவில் கொங்கு மண்டலத்தில் வலிமையான மாவட்டத் தலைவர்கள் இல்லை. ஒப்பீட்டளவில் திமுகவின் மாவட்டத் தலைவர்களைவிட அதிமுகவின் மாவட்டத் தலைவர்கள் வலிமையுடனும் மக்கள் செல்வாக்குடனும் உள்ளனர். கோவை மு.கண்ணப்பன் போலவும், வீரபாண்டி ஆறுமுகம் போலவும் தலைவர்கள் திமுகவில் தற்போது இல்லாத நிலையில், திமுகவுக்கு ஆதரவாக பெரும் அலை வீசினால்தான் அந்தக் கட்சிக்கு கொங்கு மண்டலத்தில் வெற்றி கிடைக்கும் என்ற சூழல் நிலவுகிறது.

கொங்குப் பகுதியைப் பொறுத்தவரை இந்த மண்டலத்தில் ஓரளவு வாக்கு வாங்கி இருக்கும் காங்கிரஸ், மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவுக்கு பலம் சேர்க்கின்றன. கொங்கு மண்டலத்தை முற்றுகையிட்டுள்ள திமுக இந்தத் தேர்தலில் அதிமுகவின் கோட்டையை பிடிக்கிறதா அல்லது கோட்டையில் தனது கொடியை அதிமுக தொடர்ந்து பறக்கவிடுகிறதா என்பதை கடைசி ஒருவாரத்துப் பிரச்சாரம் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் இந்தப் பகுதியில் ஒவ்வொரு இடத்திலும் திமுக வெற்றிபெற கடும் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்ற நிலைதான் காணப்படுகிறது.

Views: - 160

0

0

1 thought on “அதிமுக கோட்டையில் நெருக்கடி தர முயற்சிக்கும் திமுக… கொங்கு மண்ணில் இலைக்கொடி பறக்குமா?

Comments are closed.