அடுத்த தலைவராக முன்னிறுத்தப்படும் உதயநிதி: 2021 தேர்தலும் ‘அம்பேல்’.. புலம்பும் தி.மு.க. உடன்பிறப்புகள்..!

18 September 2020, 10:00 am
udhayanidhi - updatenews360
Quick Share

சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தை பேரறிஞர் அண்ணா தொடங்கியபோது இந்தக் கட்சிக்கு உதயநிதி என்று ஒருவர், கட்சியின் கொள்கைகளோ, கோட்பாடுகளோ என்னவென்று தெரியாதவர், தமிழர் இலக்கியத்திலோ, அரசியலிலோ, எந்தத் துறையிலும் அறிவு பெறாதவர், கட்சிக்காக எந்த வகையிலும் உழைக்காமல் போராடாமல், சில சினிமாக்களில் மட்டும் நடித்துவிட்டு வாரிசுரிமை அடிப்படையில் தலைவராக வரிந்து கட்டுவார் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

திராவிட இயக்கம் என்பது கடும் எதிர்ப்புகளின் நடுவே வளர்ந்த இயக்கம். ஊர் ஊராக மேடைபோட்டு பட்டி தொட்டியெங்கும் கொள்கைப் பிரசாரம் செய்து வன்முறைகளையும் சொல்லடிகளையும் செருப்படிகளையும் வாங்கி பல தொண்டர்களின் உழைப்பாலும் ரத்தத்தாலும் வளர்ந்த இயக்கம். இந்த வரலாறு எதுவும் தெரியாத உதயநிதி எந்த எதிர்ப்பையும் சந்திக்காமல் ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும் ஏசி பொருத்தப்பட்ட சொகுசு வாகனத்தில் சில இடங்களில் பேசிவிட்டு அந்த வெற்றி தன்னால் வந்தது என்று கூறிக்கொண்டு கட்சியின் அடுத்த தலைவராக ஆசைப்படுகிறார் என்று மூத்த தொண்டர்கள் குமுறி வருகிறார்கள்.

1949-ஆம் ஆண்டு ராபின்சன் பூங்காவில் மழைத்துளிகளின் நடுவே அண்ணா இக்கட்சியைத் தொடங்கியபோது அவருடன் இருந்த தோழர்கள் பெரும்பாலும் முதுகலைப்பட்டதாரிகள். உலக அரசியலையும் தமிழர் வரலாற்றையும் சங்கத் தமிழ் இலக்கியத்தையும் தமிழர் சமூகவியலையும் பெரியாரின் கொள்கைகளையும் பெரிதும் உள்வாங்கியவர்கள்.
இந்தத் தகுதியில் ட்ரில்லியனில் ஒரு பங்கு கூட இல்லாத உதயநிதி என்பவர் திமுகவின் ஒரு அணிக்குத் தலைவராவார் என்பதையே திமுக முன்னோடித் தலைவர்கள் மிகப்பெரிய அழிவாகக் கருதியிருப்பார்கள். அப்படி ஒருவரை கட்சிக்குத் தலைவராக்கும் முயற்சி எதிர்காலத்தில் நடக்கும் என்பதை அவர்கள் முன்கூட்டியே அறிந்திருந்தால் திமுகவை அவர்கள் தோற்றுவித்தே இருக்கமாட்டார்கள் என்று கட்சியின் கொள்கைகளையும் இலட்சியங்களையும் உணர்ந்த தொண்டர்கள் கொதிக்கிறார்கள்.

அண்ணாவின் தம்பிகள் தாங்கள் அறிந்ததை அடுக்கு தமிழில் தென்றல் நடையில் எதுகை மோனைகளுடன் பாமரரும் படித்தவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மணிக்கணக்காகப் பேசக்கூடியவர்கள். திமுக மேடைகளை மாலைநேரத்துப் பல்கலைக்கழக வகுப்புகளாக மாற்றியவர்கள்.

udhayanithi arrest - updatenews360

உங்கள் தொகுதிக்கு அழகான வேட்பாளர் கிடைத்திருக்கிறார் என்று மூன்றாம் தர ஜோக்குகள் திமுக மேடைகளில் பேசப்படும் என்று அவர்கள் காலத்தில் யாரும் எண்ணிப்பார்த்திருக்க மாட்டார்கள். அப்படிப் பேசுபவர் திமுகவின் இளைஞர் அணிக்குத் தலைமைதாங்கி வருங்கால இயக்கத்துக்கு வழிகாட்டும் தலைவராக வலம்வர நினைப்பார் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தால் திமுகவை அன்றே கலைத்துவிட்டுப் போயிருப்பார்கள்.

அடக்குமுறைகளுக்கு அஞ்சாதவர்கள். கொள்கைகளுக்காக போராட்டக் களங்களை கண்டவர்கள். மாங்குயில் கூவிடும் சோலைகள்- எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலைகள் என்று சிறைக்கஞ்சாதவர்களாய் வாழ்ந்தவர்களே திமுகவை உருவாக்கி வளர்த்தவர்கள். திமுகவின் கொள்கைப் போராட்டங்களின் அன்று சின்னச்சாமிகளும் அரங்கநாதன்களும் தீக்குளித்து இறந்தார்கள். நூற்றுக்கணக்கான தொண்டர்கள் துப்பாக்கி சூட்டில் மரணமடைந்தார்கள்.

ஆயிரக்கணக்கானவர்கள் தடியடியில் காயம்பட்டார்கள். இலட்சத்துக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் சிறை சென்றார்கள். அவர்களின் விலைமதிக்கமுடியாத தியாகம் இன்று சினிமாவில் மட்டும் சிறையைப் பார்த்த உதயநிதி சொகுசாகத் தலைமை நாற்காலியில் அமர்வதற்காகவா என்று வேதனைக்குரல் திமுகவில் மட்டுமல்ல உண்மையான திராவிட சிந்தனையாளர்களின் மனங்களிலும் தணலாகத் தகிக்கிறது.

போராட்டத்திற்குச் செல்வதும் சிறைக்கு செல்வதும் அன்று திமுகவில் தலைவராவதற்குத் தகுதியாகக் கருதப்பட்டன. இன்று உதயநிதி போன்றவர்கள் நயன்தாராவுடனும் ஹன்சிகாவுடனும் சில சினிமாப்படங்களில் டூயட் பாடியதாலும் காமெடியாக நடனம் ஆடியதாலும் தலைவராகிவிடத் துடிக்கிறார்கள். தியாகத்திலும் வியர்வையிலும் கண்ணீரிலும் செந்நீரிலும் வளர்ந்த திமுக இன்று கிளிசரினையும் பேன்கேக் அரிதாரப்பூச்சுகளையும் செல்லுலாய்ட் திரையின் மாயத்தோற்றங்களையும் கொண்டாடுவதும் தலைக்கு மேல் தூக்கித் வைப்பதும் உதயநிதி என்னும் ஒருவரைத் தலைவராக்குவதற்குத்தான் என்பதை கட்சியில் வரலாறு அறிந்த மூத்தவர்கள் அறிவார்கள்.

stalin-udhayanithii-1-updatenews360

திமுகவின் இலட்சியங்களையும் திட்டங்களையும் அண்ணா பட்டியலிட்டு இது சாமானியர்களுக்காக சாமானியர்களால் நடத்தப்படும் இயக்கம், இதில் யாரும் எந்த நிலையில் இருப்போரும் பதவி பெறலாம்; மக்களுக்காகவும் கொள்கைகளுக்காகவும் உழைக்கலாம் என்றார். ஆனால், இன்றைய திமுகவில் அண்ணா சொன்ன சாமானியர்கள் யாரும் பதவி பெற முடியாது. உதயநிதி யாரைக் கைகாட்டுகிறாரோ, அவருக்கு யார் வால் பிடிக்கிறார்களோ அவர்கள்தான் திமுகவில் பதவி பெற முடியும் என்ற சூழல் உருவாகிவிட்டதைக் கண்டு உண்மைத்தொண்டர்கள் உள்ளக் கொந்தளிப்புடன் வெளியில் சொல்ல முடியாத வேதனையுடன் இருக்கின்றனர்.

அண்ணாவில் உடனிருந்த நிறுவனத் தலைவர்கள் யாரும் தங்களின் வாரிசுகளை கட்சியில் வளர்க்கவில்லை. இன்று அந்த வாரிசுகள் திமுகவில் எந்தப்பதவியிலும் இல்லை. ஆனால், திமுக தொடங்கியபோது பேச்சாளர் வரிசையில் 28-வது இடத்தில் இருந்த கருணாநிதியின் குடும்பம் இன்று கட்சியை குடும்ப சொத்தாக மாற்றிவிட்டது. கழகம் ஒரு குடும்பம் என்ற நிலை மாறி ஒரு குடும்பமே கழகம் என்று ஆகிவிட்டது.

udhayanidhi stalin - updatenews360

ஸ்டாலின் மிசாவில் சிறை சென்றதே ஒரு விபத்து. அந்த ஒன்றை மட்டுமே இன்றுவரை செய்த தியாகமாக அவர் சொல்லிவருகிறார். உதயநிதிக்கோ சொல்லிக்கொள்வதற்கு அதுகூட இல்லை. ஒரு தலைமுறை தாண்டி மூன்றாம் தலைமுறையாக ஒருவர் தலைவராக முன்னிறுத்தப்படுகிறார். கருணாநிதி திமுகவில் தலைவராகும்போதே அவரைவிடத் தகுதிமிக்க பலர் திமுகவில் இருந்தனர். இருந்தாலும் தலைவரான பிறகு அவர் கட்சியைக் கட்டிக்காத்து மக்கள் ஆதரவைப்பெற்று திமுகவை ஆட்சிக்கும் கொண்டுவந்து தனது தகுதியை நிருபித்துக்கொண்டார். இன்னும் ஸ்டாலினே தனது தலைமைப் பண்பை நிருபிக்கவில்லை. ஆனால், உதயநிதி ‘மூன்றாம் கலைஞர்’ என்று பேசப்படுகிறார். கருணாநிதிக்கு பிடித்த மீன் குழம்பு உதயநிதிக்கு பிடிப்பதாலேயே உதயநிதி கருணாநிதியாகி விடமாட்டார் என்று பல சோதனைகளுக்கு இடையே கருணாநிதியுடன் அரசியலில் பயணித்தவர்கள் கோபமாக இருக்கிறார்கள்.

தந்தை தலைவராக இருப்பதால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையில் தொண்டர்களும் நிர்வாகிகளும் சகித்துக்கொண்டு இருக்கிறார்கள், ஸ்டாலினை எதிர்க்க அஞ்சுபவர்கள், அவருக்கு சாமரம் வீசுபவர்கள் உதயநிதியை இன்று தேரில் ஏற்றி ஊர்வலம் போகலாம். மக்களாட்சியில் ஒருவரை தலைவராக்குவதும் தரையில் வீசுவதும் மக்கள்தான்.
உதயநிதி போன்றோரை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது சிலர் கனவில் காணும் கனவைப்போன்றது. கானலுக்குள் மீன் பிடிப்பதும் காகிதப்பூவில் தேன் எடுப்பதும் உதயநிதியை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைப்பதும் ஒன்றுதான். உதயநிதியுடன் சேர்த்து மக்கள் திமுகவையும் குப்பையில் வீசிவிடுவார்களோ என்றும் பத்தாண்டுகளுக்குப் பின் 2021-ல் வரும் வாய்ப்பும் வீணாகிவிடுமோ என்றும் உணர்வுள்ள தொண்டர்கள் அச்சத்தில் கலங்கிப்போயிருக்கிறார்கள்.

Views: - 10

0

0