‘கட்சி சின்னங்கள மறங்க… உதய சூரியன மட்டும் நினைங்க’ : கூட்டணி கட்சிகளின் சுயஅடையாளத்தை பறிக்கும் தி.மு.க.!!

18 September 2020, 2:23 pm
DMK_Alliance1 - updatenews360
Quick Share

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், சீட் மற்றும் தொகுதி பேரத்தில் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலில் கிடைத்த வாக்குகளின் சதவிகிதத்தை வைத்து, தொகுதி பேரத்தில் ஈடுபட கூட்டணி கட்சிகள் முடிவு செய்து களமிறங்கி பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாகி வருகின்றன.

ஆனால், தி.மு.க.வின் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது குறித்த யோசனையை ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார். அதாவது, கூட்டணி கட்சிகளுக்கு ஒரு எம்.பி. தொகுதிக்கு 3 சட்டமன்ற தொகுதியை வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.

அதன்படி பார்த்தால், 10 எம்.பி. சீட்களை கொண்ட காங்கிரசுக்கு, 30 எம்.எல்.ஏ. சீட்கள் வழங்கப்பட வேண்டும். ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு தலா 6 எம்.எல்.ஏ. சீட்களும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 12 சீட்களும், முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றிற்கு தலா 3 சீட்கள் ஒதுக்கப்பட்டாலும், 66 சீட்களை வழங்க வேண்டியிருக்கும்.

dmk alliance - updatenews360

காங்கிரஸிக்கு கூட 30 இடங்களை ஒதுக்குவதில் பயனுள்ளதாகத்தான் இருக்கும். ஆனால், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய ஜனநாயக கட்சிக்கு இத்தனை இடங்களை ஒதுக்குவது, நாமக்கு நாமே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளுவது போன்றது என ஸ்டாலின் சிந்தித்துள்ளார்.

வரும் தேர்தலில் தி.மு.க.வின் பிரதான சின்னமான உதய சூரியன் சின்னத்தில் 200 இடங்களில் போட்டியிட்டால் மட்டுமே, தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என அவர் நம்புவதாக கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன. ஸ்டாலினின் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளுபவர்கள் இருந்தால் போதும் என்ற கண்டிப்பான உத்தரவையும் விரைவில் கழகம் வெளியிடப்போவதாகவும் கூறப்படுகிறது.

ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஸ்டாலின் இந்த உத்தரவை கேட்டு, அமைதியாக அவர்கள் கொடுக்கும் தொகுதிகளில் போட்டி போட்டு, முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆனால், கடந்த தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்டு, 8 சதவீதமாக வாக்கு வங்கியை அதிகரித்துள்ள காங்கிரஸ், ஸ்டாலினின் இந்த முடிவுக்கு ஒத்துப் போகுமா..? என்பதுதான் சந்தேகமான ஒன்று.

மேலும், சிறு சிறு கட்சிகளை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்ற நிர்பந்தத்தையும் ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு திணித்துள்ளார். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விரும்பாது என்பதே ஊர்ஜிதம்.

ஒரு வேளை தேர்தலுக்கு பிறகு கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. இழுக்க முயற்சிக்கும். அதனை தடுக்கவே இந்த முடிவை கழகம் எடுத்துள்ளதாக ஸ்டாலினுக்கு பிற நிர்வாகிகள் முட்டுக் கொடுத்து வருகின்றனர்.

தேர்தல் நெருங்க நெருங்க தி.மு.க.வின் இதுபோன்ற கட்டளைகளை ஏற்க விரும்பாத கட்சிகள், கூட்டணியில் இருந்து வெளியேறும் என்றே தெரிகிறது. ஒருவேளை, தங்களுக்கு ஒரு எம்.எல்.ஏ. பதவி இருந்தால் போதும் என்ற எண்ணம் கொண்ட கூட்டணி கட்சிகள் மட்டும், கொள்கைகளையும், சின்னத்தையும் திமுகவிடம் அடகு வைத்து விட்டு, தேர்தலில் களமிறங்க வாய்ப்புண்டு.

Views: - 11

0

0