திமுகவினர் தொடர் அராஜகம்.. மன உளைச்சலில் போலீசாரும், அரசு அதிகாரிகளும் தற்கொலை… போட்டு தாக்கிய ஓபிஎஸ்…!!

Author: Babu Lakshmanan
21 May 2022, 5:21 pm
Stalin ops - updatenews360
Quick Share

தி.மு.க.வினரின்‌ அராஜகம்‌ காரணமாக காவல்‌ துறையினரும்‌, அரசு ஊழியர்களும்‌ மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- காவல்‌ துறையினரை பார்த்து சமூக விரோதிகள்‌ அஞ்சுகிறார்கள்‌ என்றால்‌ அந்த நாட்டில்‌ சட்டம்‌ ஒழுங்கு சீராக இருக்கின்றது என்று பொருள்‌. ஆனால்‌, தற்போது தமிழ்நாட்டில்‌ இதற்கு முற்றிலும்‌ நேர்மாறான சூழ்நிலை நிலவுகிறது. “அமைதி, வளம்‌, வளர்ச்சி” என்ற பாதையில்‌ சென்று கொண்டிருந்த தமிழ்நாட்டை “கொலை, கொள்ளை, தற்கொலை” என்ற பாதைக்கு தி.மு.க. அரசு அழைத்துச்‌ சென்று கொண்டிருக்கிறது.

தி.மு.க. எப்பொழுதெல்லாம்‌ ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம்‌ தமிழ்நாடு அமளிக்‌ காடாக மாறிவிடுகிறது என்பதில்‌ யாருக்கும்‌ இருவேறு கருத்து இருக்க முடியாது. தமிழ்நாட்டில்‌ சட்டம்‌-ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்து போயிருக்கிறது என்பதற்கு பல உதாரணங்கள்‌ இருந்தாலும்‌, அவற்றில்‌ அண்மையில்‌ நடந்தவற்றை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்‌.

நாமக்கல்‌ மாவட்டம்‌, எருமப்பட்டி அருகே காளிசெட்டிபட்டி மாரியம்மன்‌ கோயில்‌ தெருவைச்‌ சேர்ந்த திருமதி கவுசல்யா என்பவர்‌ தனது மகன்‌ மற்றும்‌ மகளுடன்‌ தூங்கிக்‌ கொண்டிருக்கையில்‌ அவர்களை மிரட்டி பணத்தை – பறித்ததோடு மட்டுமல்லாமல்‌ அவரது மகளை கடத்திச்‌ சென்றது; திருப்பத்தூர்‌ அரசு மருத்துவமனைக்குள்‌ புகுந்து சிகிச்சையில்‌ இருந்த தொழிலாளி முருகன்‌ என்பவர்‌ வெட்டிக்‌ கொல்லப்பட்டது; ஈரோடு மாவட்டம்‌, சென்னிமலை, குட்டக்காட்டு புதுரைச்‌ சேர்ந்த விவசாயி துரைசாமி கொடூரமாகக்‌ கொலை செய்யப்பட்டது;

திருவான்மியூரில்‌ உணவில்‌ மண்‌ விழுந்ததால்‌ தகராறு ஏற்பட்டு இருவர்‌ கொலை செய்யப்பட்டது; வேலூர்‌ மாவட்டம்‌, அப்துல்லாபுரத்தில்‌ பூபதி என்கிற லாரி ஓட்டுநர்‌ வெட்டிக்‌ கொலை செய்யப்பட்டது; சென்னை, இராயப்பேட்டை போதை மறுவாழ்வு மையத்தில்‌ வாலிபர்‌ ராஜ்‌ என்பவர்‌ அடித்துக்‌ கொலை செய்யப்பட்டது; பெண்கள்‌ கேலி செய்யப்பட்டதை தட்டிக்‌ கேட்ட, விழுப்புரம்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த கேசவன்‌ என்பவர்‌ கல்லால்‌ சரமாரியாக தாக்கி கொலை செய்யப்பட்டது;

குன்றத்தூர்‌ மேத்தா நகரைச்‌ சேர்ந்த தியாகராஜன்‌ கல்லால்‌ அடித்துக்‌ கொலை செய்யப்பட்டது; மயிலாப்பூரில்‌ ஆடிட்டர்‌ மற்றும்‌ அவரது மனைவி கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது; தேனி மாவட்டம்‌, பெரியகுளத்தைச்‌ சேர்ந்த நகைக்கடை ஊழியர்‌ ராமராஜ்‌ என்பவர்‌ பூந்தொட்டியால்‌ தாக்கி கொலை செய்யப்பட்டது; கள்ளக்குறிச்சியைச்‌ சேர்ந்த சபரி கணேஷ்‌ என்பவர்‌ சென்னை விமான நிலைய கார்‌ நிறுத்தக்‌ கட்டடத்தில்‌ மர்ம மரணம்‌; திருக்கோயிலூர்‌ அருகே பள்ளி மாணவர்‌ கோகுல்‌ கீரனூர்‌ பைபாஸ்‌ சாலையில்‌ கொலை;

விழுப்புரம்‌ சிறையில்‌ விசாரணைக்‌ கைதி மரணம்‌; மக்கள்‌ நடமாட்டம்‌ மிகுந்த சென்னை ஷெனாய்‌ நகரில்‌ நடுரோட்டில்‌ பட்டப்‌ பகலில்‌ ஆறுமுகம்‌ என்கிற பைனான்சியர்‌ வெட்டிப்‌ படுகொலை; சென்னை ஆதம்பாக்கத்தில்‌ நடுரோட்டில்‌ மூதாட்டி கத்தியால்‌ குத்தி படுகொலை; சென்னை முகப்பேரில்‌ தியாகராஜன்‌ என்பவரை தி.மு.க. பிரமுகர்‌ கத்தியால்‌ குத்தியது; செய்யாறில்‌ மாணவர்களிடையே கத்திக்குத்து; கள்ளக்குறிச்சி மாவட்டம்‌, சங்கராபுரம்‌ அடுத்த வட சிறுவளூர்‌ கிராமத்தைச்‌ சேர்ந்த ஜே.சி.பி. ஒட்டுனர்‌ தீபன்‌ அடித்துக்‌ கொலை;

சென்னை ஆர்‌.கே. நகரில்‌ போதை மாத்திரை விவகாரத்தில்‌ இளைஞர்‌ ராகுல்‌ படுகொலை; பாடி மேம்பாலத்தின்‌ கீழ்‌ திரு. அய்யப்பன்‌ என்கிற தொழிலாளி அடித்துக்‌ கொலை; தென்காசியைச்‌ சேர்ந்த நெல்‌ வியாபாரி பட்டுராஜ்‌ அச்சிறுப்பாக்கம்‌ அருகே உள்ள ஒரத்தியில்‌ அடித்துக்‌ கொலை; சென்னையில்‌ ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்‌ குமரேசன்‌ வெட்டி கொலை; ஒரகடம்‌ அருகே தனது மகள்களை அடித்து தந்‌தை வெறிச்‌ செயல்‌; கிருஷ்ணகிரி மாவட்டம்‌, காவேரிபட்டினத்தில்‌ பள்ளி மாணவர்கள்‌ சீருடையுடன்‌ நடுரோட்டில்‌ மோதல்‌; வட சென்னை அனல்‌ மின்‌ நிலையத்தில்‌ உதவிப்‌ பொறியாளர்‌ மர்ம மரணம்‌ என படுகொலைகள்‌ நாளொரு மேனியும்‌ பொழுதொரு வண்ணமுமாக நடந்தேறி வருகின்றன.

இது மட்டுமல்லாமல்‌, சாதி மோதல்கள்‌ ஆங்காங்கே அதிகரித்து வருவதாகவும்‌, தி.மு.க.வினரின்‌ அராஜகம்‌ காரணமாக காவல்‌ துறையினரும்‌, அரசு ஊழியர்களும்‌ மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும்‌, இதன்‌ காரணமாக தற்கொலைகள்‌ நிகழ்ந்து வருவதாகவும்‌, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பாலியல்‌ தொல்லைகள்‌, கொள்ளைச்‌ சம்பவங்கள்‌ அன்றாடம்‌ நடைபெற்று வருவதாகவும்‌ பத்திரிகைகளில்‌ செய்திகள்‌ வந்த வண்ணம்‌ உள்ளன. யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில்‌ நிலவுகிறது. இந்த நிலைமை நீடித்தால்‌ சட்டம்‌-ஒழுங்கு என்பதே இல்லாமல்‌ போய்விடும்‌.

எனவே, முதலமைச்சர்‌ தமிழ்நாட்டின்‌ முன்னேற்றத்திற்கு அடித்தளமாக விளங்கும்‌ சட்டம்‌-ஒழுங்கை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 555

0

0