7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் திமுகவின் பச்சைப் பொய்… அமைச்சரை வெளுத்து வாங்கிய எடப்பாடியார்!!

Author: Babu Lakshmanan
1 July 2021, 12:31 pm
eps questioned - updatenews360
Quick Share

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களை எளிதில் கவரக்கூடியதாக இருந்த திமுகவின் வாக்குறுதிகளை வரிசைப்படுத்தினால், அதில் முதலிடம் பிடிப்பது திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும் என்பதாகத்தான் இருக்கும்.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

இதற்கு மிக முக்கிய காரணம் உள்ளது. தமிழகத்தில் சுமார் 2 கோடியே 20 லட்சம் இருசக்கர வாகனங்கள் ஓடுகின்றன. மாநிலத்தின் மக்கள் தொகையான 8 கோடியே 25 லட்சத்துடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தால் ஏறக்குறைய 4 பேருக்கு ஒரு இருசக்கர வாகனம் என்று கணக்காகிறது. இதுதவிர பெட்ரோலில் இயங்கும் கார்கள், 3 சக்கர வாகனங்கள் என சுமார் 25 லட்சம் ஓடுகின்றன.

வீட்டில் ஒரு ‘டூ வீலர்’ இருந்தால், அந்த குடும்பத்தினர் அவசர தேவைக்கு அருகிலுள்ள இடங்களுக்கும், ஊர்களுக்கும் செல்ல பஸ்களையோ, ஆட்டோக்களையோ தேட வேண்டிய அவசியம் இருக்காது.

Petrol Price - Updatenews360

எனவே, லிட்டருக்கு பெட்ரோல் விலை 5 ரூபாய் குறைக்கப்பட்டால் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை ஒரு குடும்பத்தில் சேமிக்க முடியும் என்பதால் திமுகவின் இந்த வாக்குறுதி மீது வாக்காளர்கள் அனைவருக்குமே ஒரு ஈர்ப்பு இருந்திருக்கும் என்பது நிச்சயம்.

இதேபோல்தான் வர்த்தக ரீதியான வாகனங்களை வைத்திருப்போருக்கு டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பு என்பதும்.

சுருங்கிப் போன வாக்குறுதி

திமுகவின் 2-வது கவர்ச்சி வாக்குறுதி, உள்ளூர் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது. இந்த வாக்குறுதி ஆட்சிக்கு வந்தபின்பு நிறைவேற்றப்பட்டு விட்டாலும் கூட உள்ளூர் பஸ்கள் என்பது கடைசியில் சாதாரண பஸ்களாக சுருங்கிப் போனது.

அதேநேரம் மாற்றுத்திறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் தற்போது இலவச பயணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

குழப்பத்தில் மாணவர்கள்

3-வது ஈர்ப்பான வாக்குறுதி, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பது.
இது, பிளஸ்-2வில் உயிரியல் பாடத்தை எடுத்து மருத்துவ படிப்பில் சேர படிக்கும் சுமார்
4 லட்சம் மாணவ மாணவிகளுக்கும், அவர்களுடைய பெற்றோருக்கும் ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். அந்தக் கணக்கின்படி பார்த்தால் அடுத்த 5 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 80 லட்சம் பேருக்கு நிம்மதியை தரக்கூடியது. இந்த முக்கிய 3 வாக்குறுதிகளுக்காகவே திமுக கூட்டணிக்கு இந்த தேர்தலில் 3 முதல் 5 சதவீத ஓட்டுகள் கூடுதலாக கிடத்திருக்க வாய்ப்புள்ளது என்று தேர்தல் ‘அனலிஸ்ட்’கள் கருதுகின்றனர்.

NEET- Updatenews360

அதேநேரம் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு, யாரும் எதிர்பாராத விதமாக கட்டுமானப் பொருட்களின் விலை ஒரே மாதத்தில் தாறுமாறாக உயர்ந்தது.

குறிப்பாக சிமெண்ட், இரும்புக் கம்பி, செங்கல், ஜல்லி, எம். சாண்ட், பெயிண்ட் போன்றவற்றின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்தது. இவற்றை தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை உயராத நிலையில், இந்த கிடுகிடு உயர்வு சாமானிய மக்களின் சொந்த வீடு கனவை தகர்ப்பதாக அமைந்தது. தமிழக அரசு தலையிட்டு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்த போதிலும் சுமார் 5% மட்டுமே விலை குறைப்பு இருந்தது.

பொய்யான வாக்குறுதிகள்

இந்த நிலையில்தான் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றாதது குறித்து கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்தார்.

“தேர்தலின்போது திமுக 505 அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் ஒரு சிலவற்றை நிறைவேற்றுவதாக அறிவித்திருக்கிறார்கள். திமுக ஆட்சி அமைந்தவுடன் பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பதாக வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் இதுவரை அப்படி எதுவும் விலை குறைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனவே தேர்தல் வாக்குறுதிப்படி உடனே பெட்ரோல் டீசல் விலையை திமுக அரசு குறைக்கவேண்டும்.

eps 1- updatenews360

நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? என்பதையும் திமுக அரசு தெளிவுப்படுத்தவேண்டும்.
இதுகுறித்து சட்டப்பேரவையிலும் முதலமைச்சரிடம் நான் கேள்வி எழுப்பினேன். ஆனால் அவர்களிடமிருந்து தெளிவான பதில் எதுவும் இல்லை. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் குழம்பிப் போய் இருக்கிறார்கள்

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக, தற்போது குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அப்படியென்றால், சாத்தியமில்லை என்று தெரிந்தே ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற பொய்யான வாக்குறுதியை திமுக அளித்துள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி குழுவை அமைத்து கண்துடைப்பு நாடகத்தையும் திமுக நடத்தி வருகிறது.

அமைச்சரின் பச்சைப் பொய்

நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் அவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு வசதியாக 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்தை கடந்த ஆண்டு அதிமுக அரசு கொண்டு வந்தது. அப்போது இது தொடர்பாக யாருமே கோரிக்கை வைக்காத நிலையில் இதை நாங்கள் நிறைவேற்றினோம். ஆனால் ஸ்டாலின் சொல்லித்தான் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அப்போது அதிமுக அரசு கொண்டு வந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் சொல்கிறார். இது பச்சைப் பொய்.

Minister Subramaniam- Updatenews360

திமுக ஆட்சியில் கட்டுமான பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கானோர் மிகுந்த சோதனைக்கும், வேதனைக்கும் உள்ளாகி இருக்கின்றனர். எனவே, குறைந்த விலையில் கிடைத்து வந்த அம்மா சிமெண்ட்டை ஏழை, எளிய
மக்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்யவேண்டும்”எனக் குறிப்பிட்டார்.

அதிமுகவின் நெருக்கடி தொடரும்

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து கடந்த ஜனவரி மாதம் முதலே, திமுக தீவிரமாக பேசி வந்தது. தேர்தலில் அதை முக்கிய வாக்குறுதியாகவும் அளித்தது. அதனால்தான் அதை எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அரசுக்கு நினைவூட்டுகிறார்.

அதேபோல்தான் நீட்தேர்வு ரத்து என்கிற பிரச்சாரத்தை கடந்த 4 வருடங்களாக திமுக முன்னெடுத்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் நடவடிக்கையே நீட்தேர்வு ரத்து என்பதாகத்தான் இருக்கும் என்றும் அறிவித்தது. இது மாணவர்கள் மத்தியில் திமுக மீது பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தியது.

இந்த 2 அறிவிப்புகளின் மூலமும் திமுக பெரிய அளவில் வாக்குகளை அறுவடை செய்திருக்கிறது, என்பதை எடப்பாடி பழனிசாமி நன்கு புரிந்து வைத்திருக்கிறார். இவை இரண்டுமே நிறைவேற்றுவதற்கு மிகவும் கடினமானவை. பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் கணிசமாக குறைந்து போய்விடும்.

EPS OPS - Updatenews360

மாநிலத்தின் நிதிநிலை மோசமாக உள்ள நிலையில் இதை இப்போது நிறைவேற்ற வாய்ப்பே இல்லை.

நீட் தேர்வு ரத்து என்பதும் நடக்காத காரியம் போலவே தோன்றுகிறது. இதனால் திமுக அரசு தர்மசங்கடமான நிலையில் உள்ளது என்பது உண்மை. அந்த நெருக்கடியைத்தான் அதிமுக பயன்படுத்திக் கொள்கிறது. இதில் தவறு ஏதுமில்லை. இதுபோன்ற நிலையைத்தான் முந்தைய அதிமுக அரசுக்கு எதிராக திமுக கையாண்டது. எனவே இந்த 2 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை அதிமுக நெருக்கடி கொடுத்துக் கொண்டேதான் இருக்கும்

அதேநேரம், நீட் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் விதமாக கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்டம் முழுக்க முழுக்க முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சிந்தனையில் உருவானது. அதற்கு திமுக சொந்தம் கொண்டாடுவது சரியல்ல” என்று குறிப்பிட்டனர்.

Views: - 363

0

0