திமுகவை மிரள வைத்த கமல் : காங்கிரசுக்கு 25 சீட் கிடைத்த ரகசியம்!!

7 March 2021, 4:15 pm
Kamal - dmk - updatenews360
Quick Share

41 தொகுதிகள் கேட்ட காங்கிரஸ் தற்போது திமுக ஒதுக்கிய 25 தொகுதிகளை பெறுவதற்கு ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டு இருக்கிறது.
பல சுற்று பேச்சுகளை நடத்தியும் கடந்த10 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த இழுபறி ஒருவழியாக முடிவுக்கும் வந்துள்ளது.

இத்தனைக்கும் திமுக கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சி காங்கிரஸ்தான். ஆனால் அந்தக் கட்சியுடன் தொகுதிப் பங்கீட்டை முடிக்காதநிலையில் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் திமுக ஈடுபட்டது.

அதுவும் கூட்டணியில் உள்ள சிறுசிறு கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் முதலில் பேச்சு நடத்தி தொகுதி ஒதுக்கீடும் செய்தது.

DMK - IUML - updatenews360

அதைத்தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் திமுக தொகுதி உடன்பாடு கண்டது. தங்களுக்கு முதலில் திமுக ஒதுக்கிய தொகுதிகளை கேட்டு அதிர்ச்சியடைந்த இந்த இரண்டு கட்சிகளையும் சரிக்கட்டி தலா 6 தொகுதிகளை ஒதுக்கியது.

திமுக தலைமை தங்களுக்கு நான்கு தொகுதிகள் மட்டுமே தருவதாக சொன்னதைக் கேட்டு அண்ணா அறிவாலயம் பக்கமே செல்வதற்கு தயங்கிக் கொண்டிருந்த மதிமுகவை கடைசி நேரத்தில் ஒருவழியாக உடன்பட வைத்து 6 தொகுதிகளை ஒதுக்கி தந்தார், ஸ்டாலின். அதுவும் திமுக சின்னத்தில்தான் போட்டியிடவேண்டும் என்கிற நிபந்தனையை ஏற்றுக்கொண்ட பிறகே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று காங்கிரசுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 41 தொகுதிகளை கேட்ட காங்கிரசுக்கு 25 தொகுதிகளே கிடைத்திருக்கிறது. இன்னும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் மட்டும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவேண்டி உள்ளது.

திமுக கூட்டணியை பொறுத்தவரை, அந்தக் அணியில் இடம்பெற்றுள்ள எந்தவொரு கட்சியும் மனப்பூர்வமாக தொகுதிகளை ஏற்றுக்கொண்டது போல் தெரியவில்லை என்பது வெளிப்படையாக தெரிந்த விஷயம்.

தொகுதி பங்கீடு பேச்சை முடித்து அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த பல தலைவர்களின் இறுக்கமான முகத்தை வைத்தே இதை உறுதியாக சொல்ல முடியும்.

இந்த பேச்சுவார்த்தையின் போது திமுக மிகவும் கடுமையாக நடந்து கொண்டதை மதிமுகவால் ஜீரணிக்க முடியவில்லை. முதலில் இரண்டு தொகுதிகளாக தருவதாக கூறி, பின்னர் அதை நான்காக உயர்த்தி இறுதியாக 6 தொகுதிகளை பெறுவதற்கு முன் அக்கட்சிக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

அதுவும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்கிற சிக்கலான நிபந்தனையை ஏற்ற பிறகுதான் மதிமுகவுக்கு இந்த 6 இடங்களும் கிடைத்தன. இந்த விஷயத்தில் விசிகவைப் பொறுத்தவரை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தான் நினைத்ததை சாதித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

விசிகவுக்கு 6 தொகுதிகள் கிடைத்ததில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கும் பெரும் பங்கு உண்டு. அவருடைய தலைமையில் 3-வது அணி அமையாமல் போயிருந்தால் அக்கட்சிக்கு இத்தனை சீட்டுகள் கிடைத்திருக்குமா? என்பது சந்தேகமே. ஏனென்றால் மக்கள் நீதி மய்யமும் மதச்சார்பற்ற கட்சி என்னும் நிலைப்பாட்டை முன்னிறுத்தியே தேர்தலில் களம் காணுகிறது.

அதனால் கமல் கட்சி பக்கம் சாய்வதற்கு விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளுக்கும் மாற்று வாய்ப்பு அதிகமாக இருந்தது.

அதுவும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கட்சி நிர்வாகிகள் இடையே பேசும்போது திமுகவிடம் தொகுதிகளை கேட்டு பெறுவது கூட அவ்வளவு பிரச்சனையாக இல்லை. காங்கிரசுக்கு உரிய மரியாதை கொடுக்காததுதான் பெருத்த வேதனையாக இருக்கிறது என்று கண்ணீர்விட்டு கதறியது, நடிகர் கமலை ரொம்பவே பாதித்துவிட்டது என்கிறார்கள்.

ஏற்கனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்கிய திமுகவை கேலி செய்யும் விதமாக “சமூகநீதியை பேசும் திமுக என்னுடைய தம்பி திருமாவளவனுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது” என்று கமல் ஒரு ‘பஞ்ச்’ வைத்தார்.

அதைக்கேட்டு திமுக சற்று அதிர்ந்துதான் போனது.
ஏனென்றால் விசிகவுக்கு குறைவான தொகுதிகளை பங்கீடு செய்தது, இப்படியொரு எதிர் வினையை உருவாக்கும் என்று ஸ்டாலின் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

அத்துடன் நடிகர் கமல் நிறுத்தவில்லை. “என்னை பாஜகவின் B டீம் என்பவர்கள், காங்கிரசுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்குவதன் மூலம் தங்களைத்தான் பாஜகவின் B டீம் என்பதை உறுதிப் படுத்துகிறார்கள்” என்று திமுகவை மேலும் கிண்டல் செய்ததுடன், காங்கிரசை தனது கூட்டணியில் இணையுமாறும் அழைப்பும் விடுத்தார்

இதுதான், காங்கிரசுக்கு பலம் சேர்ப்பதாக அமைந்தது. திமுக கூடுதல் தொகுதிகள் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததை கமல் விமர்சித்ததையும், விடுத்த அழைப்பையும் வைத்து ஒரு சாதுர்ய அரசியல் நாடகத்தையும் காங்கிரஸ் அரங்கேற்றியது, என்கிறார்கள்.

அதாவது திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி கமல் அணியில் சேரப்போவதாக காங்கிரஸ் ஒரு தகவலை ஊடகங்களில் கசிய விட்டு திமுகவுக்கு போக்கு காட்டியது.

இதன் சூட்சமம் என்னவென்றால், ‘நீங்கள் எங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கித் தராவிட்டால் நாங்கள் கமல் கட்சியுடன் கூட்டணி வைக்கத் தயங்க மாட்டோம்’ என்பதுதான்.

திடீரென்று தனது அரசியல் லாபத்திற்காக காங்கிரஸ் நடத்திய இந்த நாடகத்தை நம்பி ஏமாந்தவர், கமல்தான்.
காங்கிரசுக்கு ஆதரவாக அவர் குரல் கொடுக்கப் போய், அதையே ஒரு பிரதான அஸ்திரமாக காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டு திமுகவை உடனடியாக பணிய வைத்துவிட்டது.

15 தொகுதிகளே உங்களுக்கு அதிகம் என்று தொடர்ந்து கூறி வந்த திமுக கடைசியாக வந்து நின்றது 21 தொகுதிகளில்தான்.

அதேபோல் 30 தொகுதிகள் வரை கேட்ட காங்கிரஸ் கடைசியாக இறங்கி வந்து நின்றது 27 தொகுதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே திமுக நான்கு தொகுதிகளை அதிகப்படுத்தி இருக்கிறது. காங்கிரசோ 25-க்கு இறங்கி வந்து அதில் சாதித்தும் விட்டது.

Congress_Flag_UpdateNews360

எனவே காங்கிரஸ் 25 சீட்டுகளை பெற்றது, நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் தெரிவித்த கருத்துக்கும், காங்கிரசுக்கு விடுத்த அழைப்புக்கும் கிடைத்த வெற்றி என்று அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு உள்ளது.

இதுதான் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் கிடைத்ததன் ரகசியம்.

இதுபற்றி அரசியல் பார்வையாளர்கள் கூறும்போது, “நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யத்தை தனது கூட்டணிக்குள் கொண்டுவர திமுக கடைசி வரை முயற்சி மேற்கொண்டது. அதை மனதில் வைத்தே மதிமுக, விசிக தலா 2 தொகுதிகள், இரு கம்யூனிஸ்டுகளுக்கும் தலா 4 தொகுதிகள் காங்கிரசுக்கும், மக்கள் நீதி மய்யத்துக்கும் தலா 18 இடங்கள் என்று திமுக ஒரு கணக்கு போட்டு வைத்திருந்தது. சிறு சிறு கட்சிகளுக்கு ஓரிரு இடங்களை மட்டும் ஒதுக்கி மொத்தம் 180 இடங்களில் போட்டியிட திமுக முடிவும் செய்திருந்தது.
திமுக கூட்டணியில் கமல் இணையாததால் அவருக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 இடங்கள் தான் தற்போது மற்ற கட்சிகளுக்கு கூடுதலாக ஒதுக்கித் தரப்பட்டு உள்ளது. மேலும் திமுக போதிய அளவில் தொகுதிகளை கொடுக்காவிட்டால் கமல் கட்சி பக்கம் செல்லவும் திமுக கூட்டணி கட்சிகள் சில முடிவு செய்திருந்தன. தற்போது அது தவிர்க்கப்பட்டு திமுக நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது” என்று அவர்கள் தெரிவித்தனர்.

எது எப்படியோ, இந்த தேர்தலில் திமுக கூட்டணியில்
காங்கிரசுக்கு 25 தொகுதிகள் கிடைத்ததே பெரிய விஷயம் என்கிறார்கள்.

அதுவும் உண்மைதான்!

Views: - 154

0

0