உதயநிதியால் காற்றில் பறக்கும் திமுகவின் கண்ணியம், கட்டுப்பாடு : மூத்த உடன்பிறப்புகள் வேதனை…!!!

28 October 2020, 7:33 pm
UDhayanidhi - Iback - updatenews360
Quick Share

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது மகன் உதயநிதிக்கு முக்கியத்துவம் தருவதற்கு கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாலும், 2021 தேர்தலில் உதயநிதியால் திமுக தோற்கும் என்று ஐ-பேக் கூறியதாலும், தற்போது அவருக்கு முக்கியத்துவம் சற்று குறைக்கப்பட்டு வருகிறது. இதனால், ஆத்திரமடைந்த உதயநிதி ஐ-பேக் நிறுவனத் தலைவர் பிரசாந்த் கிஷோரை மிரட்டுவதாகவும், தலைமைக் கழகத்தை மதிக்காமலும், கட்சியின் விதிகளை மதிக்காமலும் தனியாகப் பொதுக்கூட்டம் போட்டு வாய்க்கு வந்தபடி மேடையில் பேசுவதாகவும் தெரிகிறது.

திமுகவின் அடுத்த தலைவராக உதயநிதியை வளர்க்க ஸ்டாலின் முயற்சி செய்வதால் கட்சியின் போஸ்டர்களிலும் கட்-அவுட்களிலும் ஸ்டாலினுக்கு இணையாக அவருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. அவர் கை காட்டுபவர்களுக்கே கட்சியில் முக்கிய பதவிகள் தரப்படுகின்றன. வரும் தேர்தலிலும் அவருடைய ஆதரவாளர்களுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் திமுகவின் மேடைகளில் வாய்க்கு வந்தபடி, ஸ்டாலின் பாணியில் சொல்வதென்றால் ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ’ என்ற முறையில் பேசிவருகிறார்.

udhayanidhi - updatenews360

உதயநிதிக்கு கட்சியில் தரும் முக்கியத்துவம் மூத்த தலைவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. நீண்ட காலமாகக் கட்சியில் இருக்கும் தொண்டர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் உழைத்துக்கொண்டிருக்க, அரசியலில் நுழைந்தவுடன் இளைஞர் அணித்தலைவராகிவிட்ட உதயநிதியை உடன்பிறப்புகளும் வெறுக்கின்றனர். பொதுமக்களும் உதயநிதியை திமுக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை கடும் எரிச்சலுடன் பார்க்கிறார்கள். இதனால், உதயநிதியுடன் சேர்த்து மக்கள் திமுகவையும் குப்பையில் வீசிவிடுவார்களோ என்றும், பத்தாண்டுகளுக்குப் பின் 2021-ல் வரும் வாய்ப்பும் வீணாகிவிடுமோ என்றும் திமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் அச்சத்தில் கலங்கிப் போயிருக்கிறார்கள்.

stalin prasanth kishore - updatenews360

உதயநிதியை இப்போது வளர்ப்பதால் திமுக தோற்றுவிடும் என்று ஸ்டாலினுக்கு ஆலோசனை கூறும் ஐ-பேக் நிறுவனம் கூறுவதாலும், எதிர்ப்புகளைக் கண்டு பயந்தும் ஸ்டாலின் உதயநிதிக்குத் தரும் முக்கியத்துவத்தைக் குறைத்துள்ளார். இதுவரை புறக்கணிக்கப்பட்டு வந்த தங்கை கனிமொழிக்கு கட்சி நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் தரத்தொடங்கினார். இதனால், உதயநிதி ஐ-பேக் நிறுவனத்தை நடத்தும் பிரசாந்த் கிஷோர் மீது கடும் ஆத்திரத்தில் இருப்பதால் கிஷோரை மிரட்டுவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. கட்சியின் தலைமைக் கழகத்தை எதிர்பார்க்காமல் இளைஞர் அணியை வைத்துத் தனியாகக் கூட்டம் போடலாம் என்று முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

dmk protest - updatenews360

முதல் கட்டமாக கோவையில் தனியாகக் கூட்டம் போட்டு மிரட்டும் தொனியிலும் நாகரீகம் இல்லாமலும், அரசியல் பண்பாடு தெரியாமலும் முதல்வர் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு சவால்விட்டுப் பேசியிருக்கிறார். கட்சியில் தனது உழைப்பாலும், அரசியல் பின்புலம் இல்லாமலும் தானாகவே உயர்பதவிக்கு வந்த அதிமுக தலைவர்களை கட்சித்தலைவரின் மகன் என்று ஒரே தகுதியால் வளர்த்துவிடப்படும் உதயநிதி விமர்சனம் செய்திருப்பது உடன்பிறப்புகளையே முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

stalin-udhayanidhi-updatenews360

இளைஞர் அணியைப்போல் திமுகவின் ஏனைய அணிகளும் இதுபோல் தனியாகக் கூட்டம் நடத்திக்கொள்ளலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக தலைமைக்கழகமே பொதுக்கூட்டம் நடத்தாமல் ஒரு அணிக்கு அந்தக் கூட்டம் நடத்த முன்னுரிமை தந்தது ஏன் என்றும் கட்சியினர் கேட்கின்றனர். தந்தைக்காக மகன் பேசுகிறான் என்ற வாரிசு அரசியலை முன்னெடுக்கவே இந்தக் கூட்டம் என்றும் பேச்சு எழுந்துள்ளது. கட்சியில் ஒவ்வோரு அணியும் தனது விருப்பம்போல் கூட்டம் போட்டுக்கொண்டிருந்தால் கட்டுப்பாடு என்னாவது என்றும் மூத்த தலைவர்கள் கவலைப்படுகிறார்கள்.

கட்சிக்குத் தேர்தல் ஆலோசனை வழங்கும் ஐ-பேக்கையும் உதயநிதி எதிர்ப்பதால் தேர்தல் நேரத்தில் என்னென்ன குழப்பங்கள் ஏற்படுமோ என்ற கலக்கத்தில் நிர்வாகிகள் இருக்கின்றனர். தேர்தலுக்கு தொகுதி பிரிப்பது, கட்சியினருக்கு சீட் தருவது, பிரச்சாரம் செய்வது போன்ற பல வேலைகளிலும் இந்த மோதல் பிரதிபலித்தால் திமுக மூன்றாவது முறையாக தோற்கும் சூழல் வந்துவிடுமோ என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.

Views: - 50

0

0

1 thought on “உதயநிதியால் காற்றில் பறக்கும் திமுகவின் கண்ணியம், கட்டுப்பாடு : மூத்த உடன்பிறப்புகள் வேதனை…!!!

Comments are closed.