திமுகவிடம் விசிகவை அடகு வைக்கும் திருமாவளவன்..! சபரீசன் தலையீடு… மாறியது நிலைப்பாடு… !!!

Author: Aarthi
12 October 2020, 6:30 pm
thiurma - updatenerws360
Quick Share

திமுக கூட்டணியில் சட்டப்பேரவை தேர்தலில் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என திட்டவட்டமாக கூறிக்கொண்டிருந்த திருமாவளவன் திடீரென தனது கொள்கையில் தளர்வுகளை அறிவித்திருப்பது விசிக கட்சி நிர்வாகிகளுக்கே புரியாத புதிராக உள்ளது.

கடந்த காலங்களை போல இல்லாமல் வரும் சட்டப்பேரவை தேர்தலில் மிக மிக அதிக தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்பது தான் பிரசாந்த் கிஷோர் ஸ்டாலினுக்கு வகுத்து கொடுத்த தேர்தல் வியூகமாக உள்ளது.

கடந்த தேர்தலில் 3வது அணியை உருவாக்கி 234 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை நிறுத்தியதால் தான் ஜெயலலிதாவால் மீண்டும் ஆட்சியில் அமர முடிந்தது. அதே ரூட்டை follow பண்ண நினைக்கிறார் மு.க.ஸ்டாலின்.

கடந்த முறை கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு 41 தொகுதிகளை வாரி வழங்கியதால் தான் திமுக எதிர்க்கட்சியாக அமர காரணமானது என்பது ஸ்டாலினின் மனக்கணக்கு. இதனை உணர்ந்தவர் போல இந்த முறை திமுகவின் சின்னம் தான் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதை முடிவு செய்துள்ளார்.

வாய்ப்பு இருந்தால் 234 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தை நிறுத்திவிட வேண்டும் என்பது ஸ்டாலினுக்கு பிரசாந்த் கிஷோர் போட்டுக்கொடுத்த கணக்கு. இதற்காக தான் தற்போது திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, மதிமுக, கொமதேக போன்ற கட்சிகளுக்கு உதயசூரியன் என்ற வலையை வீசி, திமுக சின்னத்தில் தொகுதிகளை ஒதுக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.

திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட பச்சை கொடி காட்டி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஒப்புதல் தெரிவித்துவிட்டது. ஆனால், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வோ தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற நிலைப்பாட்டில் மாற்றுக்கருத்து என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காமல் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்கிறார்.

வைகோவை போலவே தாங்களும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என வீர வசனங்களை வாரி தெளித்த திருமாவளவன் தற்போது கொள்கையில் ‘பல்டி’ அடித்துள்ளார். கடந்த மாதம் வரை விசிக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என திட்டவட்டமாக கூறிய திருமாவளவன், திடீரென தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

கடந்த மாதம் வரை கொள்கையில் பிடியாய் இருந்த திருமாவளவன், கடந்த சனிக்கிழமை அன்று, கூட்டணியின் நலனுக்காகவே உதய சூரியன் சின்னத்தில் கட்சி வேட்பாளர்களை போட்டியிடுமாறு திமுக கூறி வருவதாகவும், அதில் கூட்டணி நலன் உள்ளதாக கூறி விசிக தொண்டர்களை அதிர வைத்துள்ளார் திருமாவளவன். அவரின் இந்த மனமாற்றத்திற்கு விசிக திமுக கூட்டணியில் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட போகிறது என்ற திமுக மேலிடத்தின் முடிவு கூட காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

உதய சூரியன் சின்னத்தில் விசிக போட்டியிடுவது ஒன்றும் பிரச்சனையில்லை என்ற ரீதியில் பேசிய திருமாவளவனின் பின்னணியில் சபரீசன் இருப்பதாக கூறப்படுகிறது. திருமாவளவவை நேரடியாக சந்தித்த சபரீசன் கடந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளால் திமுகவிற்கு ஏற்பட்ட இழப்பை எடுத்துரைத்துள்ளார். மேலும் விசிக போட்டியிட்ட 2 எம்.பி. தொகுதிகளில் ஒன்றே ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு காரணம் தனிச்சின்னம் என்பதையும் எடுத்துக்கூறி, உதயசூரியன் சின்னத்தில் விசிக வேட்பாளர்கள் போட்டியிட்டால் அதற்காக திமுக தரப்பில் இருந்து செய்யப்படும் உதவிகள் குறித்தும் சபரீசன் மிக மிக தெளிவாக எடுத்துரைத்துள்ளார். இதனால் தான் திருமாவளவன் திடீரென தனிச்சின்னத்தை விட கூட்டணி நலன் தான் என கூறியதற்கு காரணமாக இருக்கலாம் என சொல்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் உதயசூரியன் சின்னத்தின் நிற்கும் விசிக வேட்பாளர்களின் தேர்தல் செலவை திமுகவே ஏற்றுக் கொள்ளும் என்ற மனக்கணக்கையும் போட்டு வைத்துள்ளார் திருமா.

இதனால் தான் இத்தனை காலமாக கட்சி நடத்தி பல தேர்தல்களில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு சில தேர்தல்களில் வெற்றியும் பெற்று கெத்து காட்டிய திருமா, தற்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுகவிடம் விசிகவை அடகு வைத்துவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

Views: - 39

0

0