மோடி அரசுக்கு திமுக வளைந்து கொடுக்கிறதா…? டாக்டர் ராமதாஸ், சீமான் ஆவேசம்!

Author: Babu Lakshmanan
29 October 2021, 7:43 pm
DMK - bjp - updatenews360
Quick Share

தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி என்னும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின்
தொடங்கி வைத்த நாளிலேயே அது குறித்த சர்ச்சையும் வெடித்துவிட்டது.

எதிர்ப்பால் விளக்கம்

முதலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,”இந்த திட்டம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கல்விக் கொள்கையை மறைமுகமாகத் திணிப்பதாகும். இதனை செயல்படுத்த தமிழக அரசு எந்த வகையிலும் துணை போகக்கூடாது”என ஆவேச குரல் எழுப்பினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசனும், “இத்திட்டத்தை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொண்டர்களும் மேற்கொள்வார்கள் எனில் இங்கே ‘சங்பரிவார்’ கும்பல் ஊடுருவி பிஞ்சுமனங்களில் மதவெறி நஞ்சு விதைக்கும் விபரீதம் ஏற்படும் என்பதை தமிழக அரசு கருத்தில் கொள்ளவேண்டும்” என்று கூறியிருந்தார்.

stalin - mutharasan - veeramani - updatenews360

இந்த விவகாரம் பெரும் விவாதப் பொருளாக மாறுவதை உணர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்,
இக் கல்வி திட்டம் குறித்து ஒரு விளக்கத்தையும் அளித்தார்.

இலக்கு நிர்ணயம்

அதில், “பள்ளிகள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்டுள்ள கற்றல் பாதிப்பினைக் குறைக்கவும், சரி செய்யவும் வேறு எந்த மாநிலமும், எந்தவொரு திட்டத்தினையும் செயல்படுத்தாத நிலையில், ஒரு முன்னோடித் திட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இத்திட்டம் குறித்து ஊடகங்கள் வாயிலாக சில மாற்றுக் கருத்துகள் அரசின் கவனத்துக்கு தெரிய வந்துள்ளது. அரசின் வழிகாட்டுதலைகளை முறையாகக் கடைபிடிப்பவர்கள் மட்டுமே தன்னார்வலர்களாகத் தொடர அனுமதிக்கப்படுவர்.

Stalin CM -Updatenews360

அதுமட்டுமல்ல, இந்த கல்வித் திட்டத்தின் வாயிலாக தமிழகத்தில் ஒவ்வொரு இல்லத்துக்கும் நேரடியாகச் சென்று பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகள் அனைவரும் தொடர்ந்து பள்ளிக்கு வருவது உறுதி செய்யப்படும். வருகிற கல்வியாண்டில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் கூடுதலாகச் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல் படுத்தப்படும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

கண்டனம்

இந்த நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,
“தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை முந்தைய அதிமுக அரசும் நடைமுறைப்படுத்தவில்லை; இப்போதைய திமுக அரசும் செயல்படுத்த மாட்டோம் என்று தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இத்தகைய சூழலில் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான கலை மற்றும் கலாச்சாரம் குறித்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது? இது புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தின் கதவுகளை திறந்து விடுவதற்கு ஒப்பானதாகும்.

‘‘இல்லம் தேடி கல்வி திட்டம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த சர்ச்சைகள் தேவையில்லை. தமிழகத்தில் புதியக் கல்விக் கொள்கை செயல் படுத்தப்படாது. தமிழகத்திற்கு என்று புதிய மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும்” என்று முதலமைச்சர் உறுதியளித்திருந்தார்.

அந்த செய்தி மக்களைச் சென்றடைவதற்கு முன்பாகவே புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையிலான கலை மற்றும் கலாச்சாரம் குறித்து மத்திய அரசு நிறுவனத்தைக் கொண்டே பயிற்சியளிக்க தமிழக அரசு தீர்மானித்திருப்பதை நம்ப முடியவில்லை. இந்த முடிவு முதலமைச்சருக்கு தெரிந்து எடுக்கப்பட்டதா? என்பதும் தெரியவில்லை.
ஆகையால் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான கலை மற்றும் கலாச்சாரம் குறித்த பயிற்சியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

வெட்கக்கேடானது

சீமான் கூறும்போது,” இந்த திட்டம் உழைக்கும் மக்களின் உறைவிடமாக விளங்கும் சேரிப்பகுதிகளுக்கும் செல்லுமா? என்பதற்கு பதிலில்லை. புதியக் கல்விக்கொள்கையை எதிர்ப்பதாகக் கூறும் திமுக அரசு, அதன் செயல் திட்டங்களை வெவ்வேறு வடிவங்களில் அனுமதித்து, நடைமுறையில் செயல்படுத்தி வருவது மிகப்பெரிய மோசடி.

கல்வியைக் காவிக்கூடமாக்கும் ஆர்எஸ்எஸ்ஸின் திட்டத்தைச் செயல்படுத்திவிட்டு, அதனையே ‘திராவிடம்’ எனப் பெருமிதத்தோடு கூறி, மகிழ்ச்சி அடைவது வெட்கக்கேடானது. எனவே மத்திய பாஜக அரசின் புதியக் கல்விக்கொள்கையின் கூறுகளுள் ஒன்றான ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தைக் கைவிட்டு, மாற்று திட்டத்தை உருவாக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

பாஜகவுக்கு ஆதரவா..?

திடீரென விஸ்வரூபம் எடுத்துள்ள இப்பிரச்சனை குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “சமீபகாலமாகவே, திமுக அரசு ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாக உள்ளது. அதுவும் தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவி பதவி ஏற்ற பின்பு தடுமாற்றம் ஏற்படுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. முதலில் ஆளுநர் ரவி தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் ஆளுநரை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் தனித்தனியே சந்தித்து திமுக அரசு மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேசினர். இதுவும் அரசுக்கு எதிரான ஆளுநரின் ஒரு நடவடிக்கையாக பார்க்கப்பட்டது.

அதன்பிறகு தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்கள் பற்றிய விவரங்களை தனக்கு தயாரித்துத் தருமாறு ஆளுநர் ரவி மாநில தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு எழுதிய கடிதமும் பெரும் பேசுபொருளாக மாறியது.

இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பும் தெரிவித்தன. கடந்த காலங்களில் முந்தைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் இதுபோன்ற செயல்பாடுகளை கடுமையாக எதிர்த்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக தற்போது ஆளுநர் அறிக்கை கேட்டதில் எந்த தவறும் இல்லை என்று கூறுகிறது. இல்லம் தேடி கல்வி திட்டத்திலும் மத்திய அரசின் நிலைப்பாட்டை திமுக அரசு அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டதாகவே தோன்றுகிறது.

முந்தைய ஆட்சியில் இதுபோல் நடந்தபோது பாஜகவின் அடிமை அரசு என்று அதிமுகவை, திமுக கடுமையாக விமர்சித்தது. இப்போது திமுக அரசும் அதையேதான் செய்கிறது.

அடக்கி வாசிப்பு

இதைத்தான், “ஆட்சியில் இல்லாதபோது திமுக வீர வசனம் பேசும். ஆட்சிக்கு வந்துவிட்டால் அப்படியே பேச்சு மாறிவிடும். ஆட்சியில் இல்லாதபோது ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம்
திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொண்டார்கள். தற்போது ஆளுநர் மீது கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் மூலம் கடும் விமர்சனம் செய்து பச்சோந்தித் தனமாக செயல்படுகிறார்கள்” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

Stalin -Updatenews360

மோடி அரசுக்கு ஆதரவாக திமுக நடந்து கொள்வதை, “அண்ணா அறிவாலயத்தில் இருந்து திமுகவினர் உருண்டு கொண்டே ஆளுநர் மாளிகைக்கு செல்கின்றனர்” என்று பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் கிண்டலாக கூறுகிறார்.

மத்திய அரசுடன் இணக்கமாக செல்வதற்கு திமுக அரசு தயாராகி விட்டதையே இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அடுத்த பத்தாண்டுகளுக்கு மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிதான் இருக்கும் என்று சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுத்த அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கணித்து கூறியிருக்கிறார். அதனால் இனி மத்திய பாஜக அரசுக்கு திமுக வளைந்து கொடுத்து செல்வதுடன் சற்று அடக்கி வாசிக்க விரும்பும் என்றே கருதத் தோன்றுகிறது” என அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 366

0

0