ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை கடிவாளம்.. கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை கண்காணிக்கும் திமுக?

18 April 2021, 1:50 pm
DMK-Updatenews360
Quick Share

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து 2 வாரங்கள் ஆகப் போகிறது. ஆனாலும் அரசியல் கட்சிகளிடையே ஒரு ஆழ் கடல் அமைதி தற்போது நிலவுகிறது.

தேர்தலின் முந்தைய, பிந்தைய நிலவரங்களை பிரித்து மேயும் அரசியல் நிபுணர்களால் கூட இதுவரை இந்த தேர்தலை இன்னும் துல்லியமாக கணிக்க முடியவில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை, எம்ஜிஆர் முதன்முதலில் களமிறங்கிய 1977 தேர்தல் தான் மிக மிகக் கணிக்க முடியாத ஒன்றாக இருந்தது. ஏனென்றால் 1972 திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கி பொதுத் தேர்தலை சந்தித்ததால் எல்லோருமே காங்கிரஸ் எளிதில் வென்று ஆட்சியைக் கைப்பற்ற்றும் என்றே கருதினார்கள். பல நாளிதழ்களும் அப்படித்தான் கணித்து இருந்தன.

ஆனால் எல்லோருடைய எதிர்பார்ப்பையும், கணிப்பையும் மீறி தமிழகத்தில் அதிமுக முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றியது. அதேபோல்1980 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக -காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கணித்தனர்.

அந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 37-ஐ கைப்பற்றியது. அதனடிப்படையில் இப்படி கணிக்கப்பட்டது. ஆனால் பின்னர் நடத்தப்பட்ட சட்டப் பேரவை தேர்தலில் எம்ஜிஆர் மீண்டும் ஆட்சியை பிடித்தார்.

2016 தேர்தலையும் துல்லியமாக கணிக்க முடியவில்லை. இந்தத் தேர்தலில் திமுக எளிதாக வெற்றி பெறும் என்று பெரும்பாலான தனியார் தொலைக்காட்சி சேனல்களும், நாளிதழ்களும் கணித்திருந்தன.

ஊடகங்களின் இந்த கணிப்பை பொய்யாக்கும் விதமாக ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி சாதனை படைத்தது.

இந்த 3 தேர்தல்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் ஓரளவு எளிதாக கணிக்க முடிந்தது. தேர்தலின் முடிவுகளும் அந்தக் கணிப்பை உறுதிப்படுத்துவதாக அமைந்து இருந்தன.

2016 தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும், அதிமுக 136 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று கடைசியாக எடுத்த சில கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அதே நேரம் திமுகவின் அரசியல் ஆலோசகர், பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த வியூகங்களை சொன்ன சொல் மாறாமல் அப்படியே செயல்படுத்தியதால் 220 தொகுதிகளை திமுக கூட்டணி அள்ளிவிடும் என்று திமுகவினர் நம்புகின்றனர்.

இதனால்தான் திமுக தலைமை தயாரித்து வைத்திருந்த உத்தேச அமைச்சரவை பட்டியல் திட்டமிட்டே ஊடகங்களில் கசியவும் விடப்பட்டது, என்று அதற்கு அவர்கள் காரணமும் கூறுகின்றனர். இந்த பட்டியலை தயாரித்து வைத்துவிட்டே திமுக தலைவர் ஸ்டாலின் கொடைக்கானலுக்கு தனது குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க சென்றதாக தெரிகிறது.

இந்த நிலையில், திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பு எடுத்து வெளியிட்ட திமுக ஆதரவு ஊடகங்கள், கடந்த 2 நாட்களாக தமிழகத் தேர்தல் களம் கணிக்க முடியாத அளவில் இருக்கிறது. அதிமுக வெற்றி பெற்றால் 130 இடங்களுக்கு மேல் கைப்பற்றி விடும் வாய்ப்பும் உள்ளது என்று தங்களது ‘சுதி’யை கொஞ்சம் மாற்றிக் கொண்டுள்ளன.

தேர்தல் முடிந்த மறுநாள்கூட இந்த ஊடகங்கள் எப்படியும் குறைந்தபட்சம் திமுக கூட்டணி
180 இடங்களை கைப்பற்றி விடும் என அடித்துக் கூறின.

இன்னும் சொல்லப்போனால் அதிமுக தேர்தல் வெற்றி தொடர்பான செய்தியே அந்த ஊடகங்களில் வெளிவராது. ஆனால் தேர்தலுக்கு பின்பு இந்த ஊடகங்கள் தற்போது, தாங்கள் நடுநிலையாளர்கள் என்பதுபோல் காட்டிக்கொள்ள தொடங்கி இருக்கின்றன. இந்த ஊடகங்களின் தலைமை செய்தியாளர்கள் சிலர், திமுக மேலிடத்துக்கு முக்கிய தகவல்களையும் பரிமாறிக் கொண்டுள்ளனர்.

அதில், “இரண்டு அணிகளுமே, தலா 115 இடங்களில்தான் வெற்றி பெறும், எனவே சொந்த மற்றும் தனிச் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி வேட்பாளர்கள் மீது மிகவும் கவனமாக இருங்கள். அவர்கள் வெற்றி பெற்றால் அதிமுக இழுத்துப்போட்டு ஆட்சியமைக்க வாய்ப்பும் இருக்கிறது” என்று அந்த செய்தியாளர்கள் திமுகவின் வயிற்றில் புளியைக் கரைத்து உள்ளனர்.

இதைக்கேட்ட திமுக தலைமை ஆடித்தான் போய்விட்டது. அதைத்தொடர்ந்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக தலைவர்களுக்கு ஒரு கடுமையான உத்தரவை திமுக பிறப்பித்ததாக கூறப்படுகிறது.

அந்த உத்தரவில், “உங்கள் வேட்பாளர்கள் எங்கும் போய் விடாமல் கண்கொத்தி பாம்பாக இருங்கள். கூடுமானவரை அவர்களை தனிப்பட்ட முறையில் நட்சத்திர ஓட்டல்களில் பாதுகாப்பாக தங்குவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். திமுக ஆட்சி அமைக்கும் பட்சத்தில், அவர்களுடன் கண்டிப்பாக நீங்களும் இருக்க வேண்டும். நாங்களும் அவர்களை தொடர்ந்து கண்காணிப்போம்” என்று கூறப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

அதுதவிர, தேர்தல் வெற்றி தொடர்பாக, திமுக கூட்டணி கட்சியின் தலைவர்கள் யாரும் ஊடகங்களுக்கு, ‘ஐபேக்’ சொன்ன கணிப்பின்படி நாங்கள் இத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ கூறக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, என்கின்றனர்.

ஒருபுறம் தேசிய கட்சிகள், விசிக வேட்பாளர்கள் மீது தீவிர கண்காணிப்பு, மறுபக்கம் அதன் தலைவர்களுக்கும் வாய்ப்பூட்டு?… அதிர்ந்துதான் போயிருக்கிறது, தமிழக அரசியல் வட்டாரம்.

Views: - 84

0

0