பொருளாளர் பதவி நியமனத்தால் உதயநிதிக்கு மலர்ப்பாதை போடும் ஸ்டாலின்..! திமுகவில் ஓரங்கட்டப்படும் கனிமொழி..!

4 September 2020, 5:10 pm
kanimozi - udhayanidhi - updatenews360
Quick Share

திமுகவில் மூத்த தலைவரும், முன்னாள் மாநில அமைச்சருமான துரைமுருகன் பொதுச்செயலாளராகவும், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு பொருளாளராகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது கட்சிக்குள் பிரச்சனை இல்லை என்பதைவிட, அதில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்பதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அரசியல் வாரிசுகளாக மகன் மு.க.ஸ்டாலினும், மகள் கனிமொழியும் இருக்கும் நிலையில், கட்சித்தலைவர் ஸ்டாலினின் குடும்பம் கனிமொழியை ஓரங்கட்டுவதாக திமுகவுக்குள் புகைச்சல் எழுந்துள்ளது.

கட்சித்தலைவர் ஸ்டாலினை கனிமொழி முழுமையாக ஏற்றுக்கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில், மகன் உதயநிதிக்காக தங்கையை ஓரங்கட்டுவதாக கனிமொழி ஆதரவாளர்கள் குமுறுகின்றனர். திமுகவில் துரைமுருகன் பொதுச்செயலாளரானதில் பெரிய அளவு மாறுபட்ட கருத்து இல்லையென்றாலும், பொருளாளர் பதவிக்கு கடும் போட்டி எழுந்தது. தந்தை கருணாநிதியும், தனயன் ஸ்டாலினும் வகித்த பொருளாளர் பதவி தங்கை கனிமொழிக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

கனிமொழியின் ஆதரவாளர் ஆ.ராசா பொருளாளர் பதவிக்குப் போட்டியிடலாம் என்ற நிலையும் இருந்தது. மேலும், முன்னாள் மாநில அமைச்சர்கள் எ.வ.வேலுவும், க. பொன்முடியும் போட்டியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், இறுதியில் பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலுவைத் தவிர வேறு யாரும் களத்தில் இல்லை என்ற நிலை உருவாகியது. கனிமொழியின் ஆதரவாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, தான் பொருளாளர் பதவிக்குப் போட்டியிடவில்லை என்று வெளிப்படையாக அறிவிக்கும் நிலையும் ஏற்பட்டது. கனிமொழி பொருளாளராகலாம் என்ற அவரது ஆதரவாளர்களின் நம்பிக்கையும் பொய்த்துப்போனது.

இதன் பின்னணியில் ஸ்டாலினின் குடும்பம், குறிப்பாக அவரது மனைவி துர்காவின் தலையீடு இருப்பதாக கட்சித் தொண்டர்களிடையே பேச்சு வலுத்துள்ளது. பொருளாளர் பதவியில் கனிமொழியோ, அவரது ஆதரவாளர்களோ அமர்வது எதிர்காலத்தில் உதயநிதியின் வளர்ச்சிக்குப் பாதகமாக அமையும் என்ற கருத்து கிச்சன் கேபினட்டில் இருந்தும், உதயநிதியின் ஆதரவாளர்களிடமிருந்தும் வெளிப்பட்டதே கனிமொழிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் தடையாக அமைந்தது என திமுக மகளிர் அணி நிர்வாகிகள் குமுறுகின்றனர்.

திமுகவின் பொருளாளர் பதவி வகித்த கருணாநிதியும், அவர் மகன் ஸ்டாலினும் பின்னர் கட்சித்தலைவராக ஆனார்கள். அதனால், அப்பதவிக்கு குடும்பத்தில் இருந்து இன்னொருவர் வருவது அவரை வருங்காலத் தலைவராக முன்னிறுத்துவதாக ஓர் எண்ணத்தை தொண்டர்களிடமும், நிர்வாகிகளிடமும், மக்களிடமும் உருவாக்கும். இது எதிர்காலத்தில் உதயநிதிக்குப் போட்டியை ஏற்படுத்தும் என்ற கணக்கே கனிமொழிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் எதிராக அமைந்ததாகக் கட்சி மட்டத்தில் கருதப்படுகிறது. கனிமொழி ஆதரவாளராக விளங்குவதால் ராசாவுக்கும் சிவப்புக்கொடி காட்டப்பட்டதாகவும் அவர் போட்டியிலிருந்து விலகிக்கொண்டதாகவும் தெரிகிறது.

TR baalu - updatenews360

ஏற்கெனவே திமுகவின் முதன்மை செயலாளராக இருந்த டி.ஆர்.பாலுவின் பதவி பறிக்கப்பட்டு, முன்னாள் மாநில அமைச்சர் கே.என்.நேருவுக்குத் தரப்பட்டது. உதயநிதியின் நெருங்கிய நண்பர் மகேஷ் பொய்யாமொழிக்கு திருச்சி மாவட்ட அரசியலில் கடும் போட்டியாக நேரு விளங்கினார். திருச்சி மாவட்டத்தில் நேரு மூத்த அரசியல்வாதியாக இருந்ததால் மகேஷின் பாதையில் அவர் குறுக்கிடாமல் இருப்பதற்காக, உதயநிதி ஆலோசனையின்படி நேரு மாநில அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டதாக திமுக நிர்வாகிகள் கருதினர். நேருவுக்கு முதன்மை செயலாளர் பதவி தரப்பட்டபோதே, டி.ஆர். பாலுவுக்கு பொருளாளர் பதவி என்று ஸ்டாலின் குடும்பத்தாரால் உறுதி தரப்பட்டதாகவும், அது இப்போது காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களே திமுகவில் முக்கியத்துவம் பெறும் நிலையில் குடும்பத்தைச் சாராத டி.ஆர். பாலுவால் எதிர்காலத்தில் உதயநிதிக்குப் பிரச்சினை இருக்காது. மேலும், 42 வயதான உதயநிதிக்கும் அத்தை கனிமொழிக்கும் வயது வேறுபாடு பத்து ஆண்டுகள் கூட இல்லை. ஆனால், 79 வயதாகும் பாலு எந்தவகையிலும் உதயநிதிக்குப் போட்டியாக இருக்க முடியாது என்பது ஸ்டாலின் குடும்பத்தாரின் எண்ண ஓட்டமாக உள்ளது.

ஏற்கெனவே, உதயநிதி தனது இளைஞர் அணியின் பெண்கள் அணியை உருவாக்கப்போவதாக எழுப்பிய சர்ச்சை கனிமொழியைத் தலைவராகக் கொண்ட மகளிர் அணியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. தற்போது, உதயநிதி வளர்ச்சிக்குத் தடையாக கனிமொழி வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அவரின் வளர்ச்சி தடுக்கப்படுவதாகக் கருதபடுகிறது.

டி.ஆர். பாலுவோடு ஒப்பிடும்போது கனிமொழி திமுகவின் சித்தாந்தங்களை உள்வாங்கி, அதை பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்தக்கூடியவர். தமிழில் ஓரளவு புலமை பெற்றவர். நாடாளுமன்ற விவாதங்களில் கட்சியின் நிலைப்பாட்டை வலுவாக வெளிப்படுத்தக்கூடியவர். சிறு வயதில் இருந்தே திமுகவின் தாய்க்கழகமான திராவிடர் கழகத்துடன் நெருக்கமானவர். கருணாநிதியால் மிகவும் மதிக்கப்பட்ட திராவிடர் கழகத் தலைவர் வீரமணியின் அன்புக்கும், ஆதரவுக்கும் பாத்திரமானவர். கனிமொழியின் ஆதரவாளரான ராசாவும், திமுகவின் அடிப்படைக் கொள்கைகளைத் தெளிவாக அறிந்தவர். திமுகவின் சேர்வதற்குமுன் திராவிடர் கழகத்தின் மாணவர் அணித் தலைவராக இருந்தவர். தற்போது பாஜகவின் கடும் எதிர்ப்பை சந்திக்கும் திமுகவுக்கு கனிமொழியோ, ராசாவோ பொருளாளராக இருப்பது சித்தாந்த அடிப்படையில் பாஜகவை வலுவாக எதிர்கொள்ள உதவும் என்பதே பல திராவிட சிந்தனையாளர்களின் கண்ணோட்டமாக உள்ளது. டி.ஆர். பாலுவுக்கு பதவி தருவது கட்சிக்கு எந்த வகையிலும் பெரிய பலனைத் தராது என்பதே பரவலான கருத்தாகும்.

kanimozi MP- updatenews360

கனிமொழி 2007-ல் மாநிலங்களவை உறுப்பினாராக ஆனார். 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பின் அவர் மத்திய அமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர், அவர் 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு அரசியலில் கடும் நெருக்கடியை சந்தித்தார். 2017-ஆம் ஆண்டு இறுதியில் அவர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகு கனிமொழிக்கு திமுகவில் உயர்பதவிகள் தரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று வரை, கட்சியின் ஓர் அணித் தலைவராகவே கனிமொழி இருக்கிறார். கருணாநிதியின் வாரிசாக இருந்தும் திமுகவுக்குள்ளேயே அவர் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள கடுமையாக போராட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

ஆனால், உதயநிதிக்கோ அரசியல் தொடக்கத்திலிருந்து மலர்ப்பாதையாக விளங்குகிறது. அவரைக் கட்சியில் முன்னிறுத்துவதை எதிர்த்து திமுகவின் நிர்வாகிகளாயிருந்த வி.பி. துரைசாமி, கு.க. செல்வம் போன்றார் வெளியேறியுள்ளனர். மற்ற தலைவர்களிடமும் நிர்வாகிகளிடமும் கடும் குமுறல் இருந்தாலும், திமுக விரைவில் ஆட்சியைக் கைப்பற்றும் நிலை இருப்பதாக அவர்கள் நம்புவதால் அமைதியாக உள்ளனர். 2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்றத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்தால் அக்கட்சியில் பிரச்சனை ஏற்படவும் உதயநிதி-கனிமொழி மோதல் வெளிப்படையாக வெடிக்கவும் வாய்ப்புள்ளது.

Views: - 0

0

0