சர்ச்சையில் சிக்கிய உதயநிதி… பிரச்சாரத்தில் பள்ளி சீருடையில் திமுக கொடியுடன் வரவேற்ற மாணவர்கள்… கிளம்பிய புது சிக்கல்

Author: Babu Lakshmanan
11 February 2022, 8:25 pm
Quick Share

தஞ்சை : தஞ்சையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த உதயநிதியை, பள்ளி மாணவர்கள் திமுக கொடியை பிடித்து வரவேற்ற சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மேரீஸ்கார்னர் மற்றும் கீழவாசல் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, உதயநிதியை வரவேற்பதற்காகவும், திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காகவும், கரந்தை தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சீருடையுடன், திமுக கொடி ஏந்தியபடி நின்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் ராமநாதன் திமுக நிர்வாகி என்றும், அவரது பேரன் செந்தமிழ்ச்செல்வன், மாநகராட்சி தேர்தலில் 1-வது வார்டில் போட்டியிடுவதாலும், அவருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் மாணவர்களை ஈடுபடுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளது.

பள்ளி மாணவர்களை தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்தக் கூடாது என்ற நிலையில், திமுகவினரை ஆதரித்து பள்ளி மாணவர்கள் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, கரூர், கும்பகோணம் பகுதிகளில் உதயநிதி தேர்தல் நடத்தை விதிகளை மீறி உதயநிதி பிரச்சாரம் செய்ததாக, அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்த நிலையில், மேலும் சர்ச்சை வெடித்துள்ளது.

Views: - 427

0

0