திமுகவின் 100 நாளில் பிரச்சனைகளுக்கு தீர்வு : புகார் பெட்டி கிளப்பிய பூதம்!!

30 January 2021, 6:28 pm
Stalin vellore cover - updatenews360
Quick Share

100 நாட்களில் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு என்ற பெயரில் தனது முதல் தேர்தல் பிரச்சார கூட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் தொடங்கி இருக்கிறார்.

அதாவது, அவர் கலந்துகொள்ளும் ஒவ்வொரு பிரசார கூட்டங்களிலும் ஒரு புகார் பெட்டி வைக்கப்படும். அதில் அந்தந்த தொகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஒரு கவருக்குள் வைத்து ஸ்டாலின் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் பெட்டிக்குள் போடவேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். இதற்காக தனி இலாகா ஒன்றும் உருவாக்கப்படும்.
இதுதான் இத்திட்டத்தின் சாராம்சம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதற்கான அறிவிப்பை சென்னையில் ஸ்டாலின் வெளியிட்டும் இருந்தார். திமுகவின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த இந்த திட்டம், முதலில் நேற்று காலை திருவண்ணாமலையிலும், பின்னர் மாலையில் ஆரணி தொகுதியிலும், இன்று காலை வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டாவிலும் ஸ்டாலினால் தேர்தல் பிரச்சார கூட்டங்களின்போது தொடங்கி வைக்கப்பட்டது.

Stalin- Updatenews360

முதலில் இத்திட்டத்தை ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதியிலும் ஸ்டாலின் அறிமுகம் செய்வார் என்று கூறப்பட்டது. ஆனால் எல்லா தொகுதிகளுக்கும் செல்ல நேரம் கிடைக்காது என்பதால், அதை 4 சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு தொகுதியாக குறைத்து விட்டனர்.

நூறு நாட்களில் தீர்வு என்கிற இந்த முழக்கத்துடன் வேறுசில கோஷங்களும் முன்வைக்கப்பட்டன.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின், ஸ்டாலின்தான் வர்றாரு, விடியல்தான் தர போறாரு என்று திருவண்ணாமலை, ஆரணி, பள்ளிகொண்டாவிலும் மூலை முடுக்குதோறும் டிஜிட்டல்
பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதாவது, அடுத்து திமுகதான் ஆட்சி அமைக்கும் என்கிற ஒரு பிம்பத்தை மக்களிடையே கட்டமைக்கும் விதமாக இப்படி இரவிலும் ஜொலிக்கும் மின்னணு அலங்கார டயலாக்குகள் ஆங்காங்கே வைக்கப்பட்டன.

திருவண்ணாமலை தொகுதி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் சொந்த தொகுதி என்பதால், ஸ்டாலினின் கூட்டத்திற்கு வழக்கத்தைவிட அதிகமான தொண்டர்களும், பொதுமக்களும் திரட்டப்பட்டனர். இதே காட்சியைத்தான் ஆரணியிலும் காணமுடிந்தது. இந்தியாவிலேயே இதுவரை யாரும் செய்திராத புதுமை என்பதுபோல இந்த திட்டத்திற்கு திமுக ‘பில்டப்’ கொடுத்தும் இருந்தது.

பொதுமக்களும் ஸ்டாலின் எப்படியாவது தங்களுடைய குறைகளை தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் கோரிக்கை மனுக்களுடன் அங்கே வந்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் மனுவை ஸ்டாலின் முன்பாக நேரடியாக புகார் பெட்டியில் போடலாம் என்றும் நினைத்திருந்தனர். ஆனால் நடந்ததோ வேறு.

திமுக நிர்வாகிகள் கோரிக்கைகளை ‘சீல்’ வைப்பதற்கு முன்பாக வாங்கிப் படித்து பார்த்துக்கொண்டனர். அதாவது வில்லங்கமாக யாராவது கோரிக்கைகளை எழுதி புகார் பெட்டிக்குள் போட்டு விடக்கூடாது என்பதற்காக இப்படி செய்தனர். பிறகு அவர்களுக்கு வரிசை எண்ணும் தரப்பட்டது. அதில் முக்கியமான கோரிக்கை மனுக்கள் சிலவற்றை திமுக நிர்வாகிகள் பிரித்து தனியே வைத்துக் கொண்டனர். அதை ஸ்டாலினிடம் நேரடியாக கொடுத்து, சம்பந்தப்பட்ட மனுதாரர்களை ‘ஐ டீம்’ யோசனைப்படி நேரடியாக பேச வைக்கும் திட்டமும் தயாரிக்கப்பட்டது. இப்படி 10 மனுக்களை அவர்கள் தேர்வு செய்து வைத்துக் கொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.

ஸ்டாலின் மேடைக்கு வந்ததும் பூட்டு போட்ட ஒரு பெரிய புகார் பெட்டி ஒன்று வைக்கப்பட்டது. அதில் ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை திமுகவின் உள்ளூர் நிர்வாகிகள் போட்டு வைத்து இருந்தனர். ஸ்டாலினிடம், ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருந்த பத்து கோரிக்கை மனுக்களையும் அவர் கையில் கொடுத்தனர். அவரும் வாங்கி படிக்க ஆரம்பித்தார். ஆனால் இதன் பின் நடந்ததுதான் மிகப் பெரிய தமாஷ்.

அதில், திருமலை என்பவர் கொடுத்த கோரிக்கை மனுவை படித்த ஸ்டாலின், தனது கணவரை காணவில்லை என்று திருமலை புகார் கொடுத்திருக்கிறார், யார் திருமலை? அம்மா உங்களுடைய கோரிக்கையை சொல்லுங்க என்று கேட்டுக்கொண்டார்.
அதாவது திருமலை என்பவரை அவர் பெண்மணியாக நினைத்து இப்படி சொல்லியிருக்கிறார்.

ஆனால், அப்போது எழுந்தவரோ ஒரு ஆண். அதைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் திடுக்கிட்டனர். சிரிப்பலையும் எழுந்தது.
எழுந்தவர் என் பெயர் திருமலை எனக்கு கறவை மாடு வேண்டும் என்று தனது கோரிக்கையை முன்வைத்தார். அப்போதுதான் கணவரைக் காணவில்லை என ஸ்டாலின் சொன்னது தவறு என்றும், கறவை மாடு என்பதற்கு பதிலாக கணவரை காணோம் என்று கூறிவிட்டார் என்பதும் தெரியவந்தது.

அதாவது, திருமலை அளித்த கோரிக்கை மனுவை கூர்ந்து படிக்காமல் தவறாக புரிந்துகொண்டு மேடையில் ஸ்டாலின் பேசியிருக்கிறார் என்பதை அங்கிருந்தவர்கள் உணர்ந்து கொண்டனர். இது நல்ல கேலிக்கூத்து என்றாலும், இன்னொருபுறம் சோகமான ஒரு காட்சியையும் அந்த கூட்டத்தில் காணமுடிந்தது.

கோரிக்கை மனுவை கொடுத்திருந்த ஒருபெண்மணி எழுந்து எங்கள் குடும்பம் வாழ முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறது. எங்களைக் கருணைக் கொலை செய்ய அனுமதியுங்கள் என்று ஒரு உருக்கமான வேண்டுகோளை வைத்தார்.

ஆனால் இந்த கோரிக்கையின் வீரியத்தை திமுக தலைவர் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை. அந்தப் பெண்மணியை அவர் ஆறுதல்படுத்தவும் இல்லை. அவருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. மாறாக அடுத்தவர் தனது கோரிக்கையை சொல்லலாம் என்று ஒரே ‘ஜம்ப்’ ஆக தாவிவிட்டார்.

இப்படி ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று கூறுவதுபோல அவருடைய முதல் 100 நாளில் தீர்வு பிரச்சார கூட்டமே கேலிக்குரிய ஒன்றாகிவிட்டது. இனி அவர் செல்லும் இடங்களில் என்னென்ன சிக்கல்களை சந்திப்பாரோ தெரியவில்லை.

stalin - updatenews360

இதுகுறித்து அரசு அதிகாரிகள் சிலர் கூறும்போது, “ஏற்கனவே ஆயிரக்கணக்கான மனுக்கள் அரசு அலுவலகங்களில் தீர்வு காண முடியாமல் நிலுவையில் கிடக்கின்றன. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காணப்படாத கோரிக்கை மனுக்களும் கிடப்பில் உள்ளன.
இவற்றில் ஏராளமானவை தீர்க்க முடியாத வில்லங்கமும் கொண்டவை. அப்படி இருக்கும்போது, 100 நாட்களுக்குள் எத்தனை மனுக்களுக்கு தீர்வு காண்பார்கள் என்பது தெரியவில்லை. நிச்சயம் லட்சக்கணக்கில் மனுக்கள் குவியும். அதில் என்ன இருக்கிறது. அதை நிறைவேற்ற முடியுமா? முடியாதா? என்பதை ஆய்வு செய்வதற்கே குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தேவைப்படும்.
தனி இலாகா உருவாக்கினால் கூட நூற்றுக்கணக்கான ஊழியர்களை இதற்காக நியமிக்க வேண்டும்.
இது சாத்தியமில்லாத ஒன்றாகவே புலப்படுகிறது” என்றனர்.

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை என்று கூறுவார்கள். அதேபோல்தான் திமுகவின் 100 நாளில் தீர்வு காணும் புகார் பெட்டி திட்டமும் தெரிகிறது. இதுவும் பூதத்தை கிளப்பிவிட்ட
கதையாகத்தான் உள்ளது.

Views: - 0

0

0