கோட்டையில் நோட்டம் பார்க்க முயன்ற திமுக? பிடி கொடுக்காத அரசு உயரதிகாரிகள்!!

15 April 2021, 8:07 pm
Stalin cover - updatenews360 (3)
Quick Share

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் என்றாலும் சரி, அது சட்டப்பேரவை தேர்தலாக இருந்தாலும் சரி, தேர்தல் நடந்த நாளன்று இரவே சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் பணியாற்றும் தலைமைச் செயலக உயர் அதிகாரிகளுக்கும், காவல் துறை தலைமை உயர் அதிகாரிகளுக்கும் தேர்தலின் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற ரகசிய சர்வேயின் முடிவுகள் பறந்து சென்று விடும்.

குறிப்பாக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த தகவல் கசியத் தொடங்கியவுடன், உயர் அதிகாரிகளிடம் ஒரு ரசாயன மாற்றம் தானாகவே ஏற்படும். அடுத்து அமையவிருக்கும் ஆட்சிக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள்.

TN Assembly- updatenews360

அதேபோல் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கும் கட்சியின் முன்னணி தலைவர்களுக்கு அந்தத் தகவலை தங்களது உதவியாளர்கள் மூலம் ரகசியமாக அவர்கள் கசிய விடுவதும் வழக்கம். தாங்களாகவே போனில் தகவல் தெரிவிக்கும் அதிகாரிகளும் உண்டு. இதனால் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த மறுநாளே பரபரப்பு தொற்றிக்கொண்டு விடும்.

சென்னை தலைமைச் செயலகத்தை பொறுத்தவரை பிரதான கட்டிடம் 3 மாடிகளையும், நாமக்கல் கவிஞா் மாளிகை 11 மாடிகளையும் கொண்டுள்ளன. பிரதான கட்டிடத்தில் சட்டப்பேரவை, முதல்வா் அலுவலகம், சட்டப்பேரவைச் செயலகம், பேரவைத் தலைவா் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களும், நிதி, உள்துறை, வருவாய் உள்ளிட்ட இதர முக்கிய இலாகாக்களும் செயல்பட்டு வருகின்றன. நாமக்கல் கவிஞா் மாளிகையில் அனைத்துத் துறைகளின் செயலாளா்களின் அலுவலகங்கள், அவா்களது துறைகளின் பிரிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 6 ஆயிரம் போ் வரை பணியாற்றுகின்றனா்.

இவர்களில் 300-க்கும் மேற்பட்டோர் உயர அதிகாரிகள் அந்தஸ்தில் இருப்பவர்கள்.

தேர்தல் முடிந்து 9 நாட்கள் ஆகியும் இதுவரை தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக உறுதியானதொரு தகவல் இந்த உயர் அதிகாரிகளிடமிருந்து இதுவரை வெளியேறவில்லை. இதேநிலையில்தான் சென்னை டிஜிபி அலுவலக அதிகாரிகளும் உள்ளனர்.

இதனால் அதிக குழப்பத்தில் மூழ்கி இருப்பது, திமுக தலைமைதான். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் நிச்சயம் உயரதிகாரிகள் நம்மிடம் மறைமுக வாழ்த்து தெரிவிப்பார்களே, ஆனால் இதுவரை அப்படி எந்த தகவலும், வாழ்த்தும் வரவில்லையே? என்று திமுக தலைமை தவியாய் தவிக்கிறது.

கோட்டையில் தங்களுக்கு அதிகாரிகளிடம் இருக்கும் செல்வாக்கை திமுகவினர் பயன்படுத்த முயன்றபோது, அதற்கு அந்த அதிகாரிகள் இடம் கொடுக்காமல் 3-ந் தேதிக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சாமர்த்தியமாக நழுவிக் கொண்டுள்ளனர்.

DMK Stalin -Updatenews360

திமுக ஆட்சி அமைத்தால் யார் யாருக்கு என்னென்ன இலாகா கிடைக்கும் என்ற திமுகவின் உத்தேச அமைச்சர்கள் பட்டியலை அனுப்பியும் கூட அதற்கு திருப்தியான பதில் எதுவும் அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை.

இதேபோல் மாவட்ட காவல்துறையிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் திமுகவினர் தூண்டில் போட்டு பார்த்துள்ளனர். அங்கும் கூட எதுவாக இருந்தாலும் 3-ந் தேதிக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற பதில்தான் கிடைத்திருக்கிறது. திமுகவினர் இங்கு தங்களது வழக்கமான அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்த முடியவில்லை என்றே தெரிகிறது.

திமுகவின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், திமுக கூட்டணி 200 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறும் என்று உறுதியளித்திருக்கிறார். ஆனால் அரசு உயர் அதிகாரிகள் பிடிகொடுக்காமல் நழுவிக் கொள்கிறார்களே, இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று அவர்கள் சந்தேகப்பட தொடங்கினர்.

உண்மையில் தேர்தல் நாளன்று, மத்திய மாநில உளவுத் துறையினர் எடுத்த சர்வே முடிவுகள்தான் அரசு அதிகாரிகள் அடக்கி வாசிப்பதற்கான முக்கிய காரணம் என்கிறார்கள்.

மத்திய உளவுத் துறை எடுத்த சர்வேயின் அறிக்கையில் அதிமுக கூட்டணி 129 முதல் 134 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் என்று தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியும் வைக்கப்பட்டுள்ளது. இதை அரசின் உயரதிகாரிகள் தெரிந்து வைத்திருப்பதால்தான் திமுகவினருக்கு செவி சாய்க்காமல் ஒதுங்கிக் கொள்வதாக கூறப்படுகிறது.

eps ops - updatenews360

இதுபற்றி சென்னை கோட்டையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் சிலர், தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசும்போது மனம் திறந்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

அதில், “ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து அதிமுக கூட்டணிக்கு தேர்தலில் மிக சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. எப்படியும் அதிமுக மீண்டும் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்துவிடும் போல் தோன்றுகிறது.

தேர்தல் முடிவு சரிவரத் தெரியாத நிலையில் யாருக்கும் சாதக, பாதகமின்றி நடுநிலையுடன் நடந்து கொண்டால் நமக்கு எந்த பிரச்சனையும், சிக்கலும் ஏற்படாது. அதிமுக ஆட்சிக்கு வந்து விட்டால் நாம் அவர்களை எளிதாக சமாளித்து கொள்ளலாம். எனவே தேர்தல் முடிவுகள் முழுமையாக தெரியவரும் வரை யாரும் யாருக்கும் ஆதரவாக நடந்து கொள்ள வேண்டாம். பொறுமையாக இருப்போம்” என்று அவர்கள் பேசிக் கொண்டுள்ளனர்.

சென்னை கோட்டை வட்டாரத்தில் அதிகாரிகள் இப்படி தங்களுக்குள் பகிர்ந்துகொண்ட தகவல்கள் திமுக தலைமையையும் எட்டியிருக்கிறது. இதனால், திமுக தலைவர் ஸ்டாலின் மிகுந்த பதற்றத்தில் இருக்கிறார், என்கின்றனர்.

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறும்போது, “பொதுவாகவே அரசு ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள்தான். அதிகாரிகள் மட்டத்திலும் திமுகவினர் அதிகம் உண்டு. தேர்தல் பற்றிய ரகசிய சர்வே உயரதிகாரிகளின் கைகளுக்கு போகும் முன்பே இவர்களுக்கு சென்று சேர்ந்து விடும். அதை உடனே திமுக தலைமைக்கு பகிர்ந்து கொண்டும் விடுவார்கள்.

இந்த முறை, அவர்கள் மத்திய உளவுத்துறையின் தேர்தல் தொடர்பான அறிக்கையை நம்பாவிட்டாலும் கூட தமிழகத்தில் போட்டி மிகக் கடுமையாக இருந்ததை உணர்ந்துள்ளனர். அதை அரசல் புரசலாக திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகத்தான் திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் முடிவு எப்படி இருக்குமோ என்று பயந்து போய் உள்ளனர். அவர்களின் முகத்திலும் வழக்கமான உற்சாகத்தைக் காண முடியவில்லை” என்று குறிப்பிட்டனர்.

வருகிற 2-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகுதான், தமிழக அரசியல் களத்தில் என்ன நடக்கப்போகிறது? என்பது தெரியும். அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்!

Views: - 43

0

0