காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள்…இழுபறியில் தேஜஸ்வியின் முதல்வர் கனவு : பீகார் தேர்தல் முடிவால் பீதியில் திமுக!!!

10 November 2020, 7:52 pm
DMK - congress 22- updatenews360
Quick Share

சென்னை : பீகார் தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் பாதிக்குப்பாதி இடங்களில் வெற்றி பெற்றாலும், கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் போட்டியிட்ட 70 தொகுதிகளில் 52 இடங்களில் தோல்வி அடையும் சூழலில் இருப்பதால், இழுபறி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோன்ற நிலை, தமிழ்நாட்டில் திமுகவுக்கும் ஏற்படும் என்ற கலக்கத்தில் திமுகவின் தலைவர்களும், தொண்டர்களும் இருக்கின்றனர்.

பீகாரில் நடைபெற்ற தேர்தல், கொரோனாவுக்குப் பின் இந்தியாவில் நடந்த முதல் தேர்தல் ஆகும். மத்திய அரசின் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகளும், ஊரடங்கை அமல்படுத்தியதும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் மாநிலத்துக்குத் திரும்ப முடியாமல், பல மாதங்கள் தவித்ததும் முக்கிய பிரச்சினைகளாக தேர்தல் பிரச்சாரத்தில் எதிரொலித்தன. மத்திய அரசின் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகளையும், ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பையும் மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதற்கு உரைகல்லாக பீகார் தேர்தல் பார்க்கப்பட்டது.

அங்குள்ள எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு ஒருமாதம் முன்புவரை சிதறிக்கிடந்தனர். முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான லாலுபிரசாத் யாதவ் ஊழல் குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். மக்களைக் கவரும் வகையில் எளிய மொழியில் நகைச்சுவை உணர்வுடன் பேசும் அவரது பிரச்சாரம் இல்லாத நிலையில், பெரிதும் அனுபவம் இல்லாத அவரது 30-வயது மகன் தேஜஸ்வி யாதவ் கட்சியின் தலைமையை ஏற்றார்.

தேர்தலை எதிர்கொள்வதற்காக காங்கிரசையும், இடதுசாரிகளையும் இணைத்து அவர், மகாகத்பந்தன் என்னும் கூட்டணியை அமைத்தார். அதில் காங்கிரசுக்கு 40 முதல் 50 இடங்கள் தருவதாக அவர் பேசியதை காங்கிரஸ் ஏற்கவில்லை. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அவரை மிரட்டி 70 இடங்களைப் பெற்றது. இடதுசாரிகளுக்கு 29 இடங்களை ஒதுக்கிவிட்டு 144 தொகுதிகளில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் போட்டியிட்டது.

tejasvi - updatenews360

இளைய தலவரான தேஜஸ்வி யாதவுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆதரவு அலை வீசியது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் அவரது கூட்டணி அறுதிப்பெரும்பான்மை பெறும் என்றே கணித்தன. ஆனால், தேர்தல் முடிவுகளில் கடும் இழுபறி நிலவுகிறது. 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 52 இடங்களில் பின்தங்கியிருப்பதே இந்த இழுபறிக்குக் காரணமாகும்.

தேஜஸ்வி யாதவின் கட்சி 70 இடங்களில் அதாவது போட்டியிட்ட தொகுதிகளில் சரிபாதியில் முன்னணியில் இருக்கிறது. 29 இடங்களில் நின்ற இடதுசாரிகளும் 19 தொகுதிகளில் முன்னணியில் இருக்கின்றனர். போட்டியிட்ட 70 இடங்களில் பாதி இடங்களிலாவது காங்கிரஸ் வெற்றிபெற்றால், தேஜஸ்வி யாதவின் கூட்டணிக்கு 125 இடங்கள் கிடைத்து அவர் ஆட்சி அமைக்க முடியும். ஆனால், போட்டியிட்ட இடங்களில் 18 தொகுதிகளில் அதாவது கால்வாசி இடங்களில்தான் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. இது கூட்டணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தேர்தல் முடிவுகளில் கடுமையான இழுபறி ஏற்பட்டுள்ளது.

Congress_Flag_UpdateNews360

இதேபோன்ற நிலை தமிழ்நாட்டில் ஏற்படுமோ என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும், ஏனைய தலைவர்களும் கலக்கத்தில் உள்ளனர். ஏற்கனவே, 2011 சட்டப்பேரவைத்தேர்தலில் திமுக அணியில் 63 தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் 5 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு 41 இடங்கள் தரப்பட்டன. அவற்றில் 8 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. திமுக 89 இடங்களை வென்ற சூழலில் காங்கிரஸ் பாதிக்குப்பாதி வெற்றி பெற்றிருந்தால் திமுக கிட்டத்தட்ட பெரும்பான்மையை நெருங்கியிருக்கும். காங்கிரஸ் தனக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளில் 33 இடங்களில் தோற்றதால் கூட்டணிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

பீகாரில் தேஜஸ்வி யாதவுக்கு ஏற்பட்ட நிலையையும், தமிழ்நாட்டில் முந்தைய சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரசால் ஏற்பட்ட நெருக்கடியையும் நினைத்து, திமுக நிர்வாகிகளும் கடுமையான அச்சத்தில் இருக்கின்றனர். இப்போதும் காங்கிரஸ் 40 இடங்கள் கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறது. திமுக தர நினைக்கும் 20 இடங்களை ஏற்க காங்கிரஸ் தயாராக இல்லை.

stalin-rahul- updatenews360

மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு தமிழர் விடுதலையில் ஸ்டாலினின் கருத்துக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து திமுகவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று கட்சியின் பொதுச்செயலாளர் க. துரைமுருகனும், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் தெரிவித்தனர். அழகிரியின் அறிக்கை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் உத்தரவுப்படி வெளியிடப்பட்டது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா உத்தரவிட்டபோது, அதற்கு வெளிப்படையாக ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தை அணுகி அதற்குத் தடைபெற்றார்.

இதுமட்டுமின்றி, 2009 இலங்கைத் தமிழர் படுகொலை, நீட் தேர்வை அறிமுகம் செய்தது, காவிரி, முல்லைப்பெரியாறு ஆகிய பிரச்சினைகளில் மத்திய ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்துக்கு எதிராக செயல்பட்டது ஆகிய பல்வேறு பிரச்சினைகளில் காங்கிரசுடன் திமுகவுக்கு முரண்பாடு இருக்கும் நிலையில், கூட்டணி வைத்தாலும் வெற்றிபெற முடியாத சூழல் ஏற்படும் என்ற அச்சத்தில் உடன்பிறப்புகள் உள்ளனர்.

Views: - 24

0

0

1 thought on “காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள்…இழுபறியில் தேஜஸ்வியின் முதல்வர் கனவு : பீகார் தேர்தல் முடிவால் பீதியில் திமுக!!!

Comments are closed.