இது நாகலாந்து அல்ல… இது தமிழ்நாடு… முரசொலி மூலம் தமிழக ஆளுநரை எச்சரிக்கும் திமுக..!!
Author: Babu Lakshmanan29 January 2022, 12:21 pm
நீட் தீர்மானம் மீது இன்னும் முடிவெடுக்காத ஆளுநருக்கு திமுக, முரசொலி மூலம் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசின் நீட் தேர்வு மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு கொண்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக திமுக தலைமையிலான தமிழக அரசு, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால், பல மாதங்கள் ஆகியும் இந்த தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எட்டப்படாமல் கிடப்பிலேயே போடப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “நீட் தேர்வு கொண்டு வரப்பட்ட பிறகு அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவராகும் கனவு நனவாகி வருகிறது. தமிழக மக்கள் வேறு மொழியையும் கற்றுக் கொள்வது நல்லது,” எனக் கூறினார்.
இந்த நிலையில், நீட் தீர்மானம் மீது இன்னும் முடிவெடுக்காத ஆளுநருக்கு திமுக, முரசொலி மூலம் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொக்கென்று நினைத்தாரோ ஆளுநர் ரவி என்ற தலைப்பில், அந்தக் கட்டுரையில் கூறியிருப்பதாவது :- காவல்துறை அதிகாரியாக இருந்து ஓய்விற்கு பின் ஆளுநரான ஆர்என் ரவியின் மிரட்டல், உருட்டல் பாணிகள் அரசியலில் எடுபடாது என்பதை அவர் உணர்ந்திட வேண்டும்.
ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நீட்டுக்கு எதிரான தீர்மானத்தின் நிலை என்னவென்று தெரியாத போது, குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் நீட்டுக்கு ஆதரவான கருத்தை அவர் தெரிவிப்பது எந்த விதத்திர் நியாயம்..?
இருமொழிக் கொள்கை, நீட் வேண்டாம் என தமிழகம் ஒன்றிணைந்து நிற்பதை உணர்ந்து, தமிழகத்தின் உரிமைக் குரலுக்கு அங்கீகாரம் வாங்கித் தர முயற்சிக்க வேண்டும். ஆளுநர் ரவி எத்தகைய கருத்தை தெரிவிக்கும் முன்பு, தமிழகத்தை புரிந்து வரலாற்றைத் தெளிவாக தெரிந்து கொண்டு கூறுவது அவரது பதவிக்கு பெருமை.
பெரியண்ணன் மனப்பான்மையோடு செயல்பட, இது நாகாலாந்து அல்ல, தமிழ்நாடு என்பதை உணர்ந்திட வேண்டும், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
0
0