மேகதாது குறுக்கே கர்நாடகாவை அணை கட்ட அனுமதிக்கக் கூடாது… ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை : ஆளுநர் ஆர்என் ரவி உரை!!
Author: Babu Lakshmanan5 January 2022, 11:18 am
சென்னை : மேகதாது குறுக்கே கர்நாடகா அரசை அணை கட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என் ரவியின் உரையுடன் இன்று தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு பிறகு ஆளுநர் தனது உரையை நிகழ்த்தினார்.
அப்போது, அவர் பேசியதாவது :- தடுப்பூசியை மக்கள் இயக்கமாக மாற்றி, அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு முன்னோடியாக திகழுகிறது. மழை வெள்ளத்தால் சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளன.
முல்லைப் பெரியாறு அணையில் முழு கொள்ளவு நீர்த்தேக்க நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 68 தமிழக மீனவர்களை மீட்டெடுக்க மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும்.
மேகதாது கர்நாடகா அணை கட்ட ஒருபோதும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. நுழைவுத் தேர்வுகள் கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு பாகுபாடுகளை உருவாக்குகிறது; எனவே, நீட் போன்ற நுழைவு தேர்வுகள் மாணவர்களின் சேர்க்கைக்கு தேவையற்றது என இந்த அரசு கருதுகிறது. மக்களின் எதிர்பார்ப்புகளையும், கனவுகளையும் தொடர்ந்து நிறைவேற்றி இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலமாக மட்டுமன்றி தெற்காசிய நாடுகளுக்கே முன்னுதாரணமாக நமது மாநிலத்தை உருவாக்குவோம்.
இந்தியா முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குடிசைகள் இல்லா தமிழகத்தை ஏற்படுத்துவதே முதலமைச்சரின் கனவு வரும் பத்தாண்டுகளில் குடிசைகள் இல்லா தமிழகம் என்ற இலக்கை நோக்கி அரசு செயல்பட்டு வருகிறது. ரூ.500 கோடி செலவில் சிங்கார சென்னை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு லட்சம் கோடி டாலர் என்ற இலக்கை அடைய வேண்டும் என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார், எனக் கூறினார்.
முன்னதாக, அம்மா மினி கிளினிக் மற்றும் அம்மா உணவகங்களை மூடும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். அவர்களோடு, நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததைக் கண்டித்து ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
0
0