திமுக தலைமையோட குடும்பத்தை மட்டுமே கவனிக்காதீங்க.. இதையும் பாருங்க : அமைச்சருக்கு அண்ணாமலை அட்வைஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 January 2023, 8:38 pm
Annamalai Sekar babu - Updatenews360
Quick Share

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேலச்செவல் பழைய கிராமம் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் அங்குள்ள நவநீதகிருஷ்ணசுவாமி கோவிலில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 15-ந்தேதி இவரை அதே பகுதியை சேர்ந்த 7 பேர் கும்பல் கோவில் வளாகத்திலேயே வெட்டிக்கொலை செய்தது. இதுதொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்து, விசாரித்து வருகிறார்கள்.

பொங்கல் தினத்தன்று, கோவில் வளாகத்தில் மது அருந்தியவர்களை கிருஷ்ணன் கண்டித்ததால் இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கிருஷ்ணன் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக அவர்கள் உடலை வாங்க மறுத்து தங்களது சொந்த ஊரான மேலச்செவல் கிராமத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லையில் கோயில் ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அந்த பதில், “நெல்லை மேலச்செவல் கிராமத்தைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறை கோவில் ஊழியர் திரு கிருஷ்ணன், கோவில் சுற்றுச் சுவரில் அமர்ந்து மது அருந்தியதை தட்டிக் கேட்டதால், கோவில் வளாகத்துக்குள்ளேயே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு எத்தனை மோசமாகச் சீர்குலைந்து கிடக்கிறது என்பது ஒரு புறம். கோவில்களில் நடைபெறும் முறைகேடுகளையும், சட்டத்திற்குப் புறம்பான செயல்களையும் தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை, கோவில் உண்டியல் பணத்தை மட்டுமே நோக்கமாக வைத்து, கோவில்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஆகியவற்றை கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழகம் முழுவதும், சாராயக் கடைகளைத் திறந்து வைத்து வியாபாரம் செய்வது, இளைஞர்கள் இது போன்ற குற்றச்செயல்களை புரிய காரணமாக அமைந்திருக்கிறது.

இனியும் திமுக தலைமை குடும்பத்தை மகிழ்விப்பது மட்டுமே தனது பணி என்றிருக்காமல், உடனடியாக அமைச்சர் திரு சேகர்பாபு கோவில் ஊழியர்களுக்கும், உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், உயிரிழந்த கோவில் ஊழியர் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் உடனடியாகத் தகுந்த நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும், அவரது இரு மகன்களுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன் என்று அண்ணாமலை காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Views: - 349

0

0